இனி ஆதார் இருந்தால் அங்கப்பிரதட்சணம்....
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்ய ஆதார் அவசியம் என்ற முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
திருப்பதி ஏழுமலையானை கோயிலில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்ய இதுவரை எந்த அடையாள அட்டையும் சமர்பிக்க தேவியில்லை. ஆனால், இனி அங்கப்பிரதட்சணம் செய்ய ஆதார் அட்டை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது. இம்முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்கள் இன்று முதல் தங்களது ஆதார் அட்டையை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். எல்லா பக்தர்களும் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவும், பக்தர்கள் ஒருமுறைக்கு மேல் அங்கப்பிரதட்சணம் செய்வதை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முக்கியம் நிறைந்த மற்றும் குறிப்பிட்ட சேவைகளுக்காக குறைந்த அளவில் மட்டுமே டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. அதில், ஆன்லைன் டிக்கெட்டுகள் போக மீதமுள்ள டிக்கெட்டுகள் திருமலையில் உள்ள சிஆர்ஓ அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை எலக்ட்ரானிக் குலுக்கல் முறையில் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
வேண்டுதலின்பேரில் வழங்கப்படும் அங்கப்பிரதட்சண டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த டிக்கெட்டுகள் அங்கபிரதட்சணம் செய்வதற்கு முந்தைய நாள் மதியம் 1. 30 மணிவரை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு டிக்கெட் பெற்ற பக்தர்கள் மறுநாள் அதிகாலை 1. 30 மணியளவில் வைகுண்டம் வழியாக சென்று 3. 30 மணியளவில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கப்படும். வெள்ளிக்கிழமை சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறுவதால் வியாழக்கிழமை மட்டும் அங்கபிரதட்சணம் நிறுத்தி வைக்கப்படும் என்று தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ கூறியுள்ளார்.
Leave a Comment