அங்கப்பிரதட்சணம் செய்ய ஆதார் அவசியமில்லை....


பக்தர்களின் எதிர்ப்பை அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்ய ஆதார் அவசியம் இல்லை என திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது. 

திருப்பதி ஏழுமலையானை கோயிலில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்ய இதுவரை எந்த அடையாள அட்டையும் சமர்பிக்க தேவியில்லை. ஆனால், இனி அங்கப்பிரதட்சணம் செய்ய ஆதார் அட்டை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது. அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்கள்  தங்களது ஆதார் அட்டையை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். எல்லா பக்தர்களும் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவும், பக்தர்கள் ஒருமுறைக்கு மேல் அங்கப்பிரதட்சணம் செய்வதை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது.

இந்த நிலையில் தேவஸ்தானத்தின் இந்த முடிவுக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். அங்கப்பிரதட்சணத்துக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்ற முடிவை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பக்தர்களின் கோரிக்கையை ஏற்ற தேவஸ்தானம், ஆதார் அட்டை நடைமுறையில் சில விதியை தளர்த்தி உள்ளது. 

இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜூ வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், “ஏழுமலையான் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயமில்லை. முதலில் வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளித்து தினமும் 750 பேருக்கு அங்கப்பிரதட்சண அனுமதிசீட்டு வழங்கப்படும். அடையாள அட்டையாக ஆதார் அட்டையை காண்பிக்கலாம். ஆனால், அங்கப்பிரதட்சண அனுமதி சீட்டு பெற ஆதார் அட்டை கட்டாயமில்லை” என்று கூறியுள்ளார்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முக்கியம் நிறைந்த மற்றும் குறிப்பிட்ட சேவைகளுக்காக குறைந்த அளவில் மட்டுமே டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. அதில், ஆன்லைன் டிக்கெட்டுகள் போக மீதமுள்ள டிக்கெட்டுகள் திருமலையில் உள்ள சிஆர்ஓ அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை எலக்ட்ரானிக் குலுக்கல் முறையில் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. வேண்டுதலின்பேரில் வழங்கப்படும் அங்கப்பிரதட்சண டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த டிக்கெட்டுகள் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு முந்தைய நாள் மதியம் 1. 30 மணிவரை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு டிக்கெட் பெற்ற பக்தர்கள் மறுநாள் அதிகாலை 1. 30 மணியளவில் வைகுண்டம் வழியாக சென்று 3. 30 மணியளவில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கப்படும். 



Leave a Comment