திருப்பதி பாதயாத்திரை பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு....
திருப்பதி மலைப்பாதையில் பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு நேர ஒதுக்கீட்டு முறையில் விரைவில் சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.
மலைப்பாதை வழியாக வரும் பக்தர்கள், 6 முதல் 15 மணி நேரத்திற்கு மேலாகவும், இலவச தரிசன பக்தர்கள் 10 முதல் 24 மணி நேரத்திற்கும் மேலாகவும் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இதையடுத்து கடந்த ஆண்டு முதல் ரூ.300க்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள், ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டது. அதன்படி 1 மணி நேரத்தில் ஆயிரம் பக்தர்கள் தரிசனம் என ‘டைம் ஸ்லாட்’ முறை பின்பற்றப்படுகிறது.
அந்த டிக்கெட்டில் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து சுமார் 1 மணி முதல் 2 மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில், மலைப்பாதை வழியாக பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கும் நேர ஒதுக்கீடு செய்யப்பட்டால், பக்தர்கள் காத்திருக்கும் நேரத்தை குறைக்க முடியும் என தேவஸ்தான நிர்வாகம் ஆலோசனை நடத்தியது.
அதன்படி, அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில், பாதயாத்திரையாக வந்து, திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கும், நேரம் ஒதுக்கீடு செய்து சுவாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
அதற்கான மென்பொருட்கள் தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் மலைப்பாதையில் வரும் பக்தர்கள் திவ்ய தரிசன டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு, வைகுண்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட திவ்ய தரிசன டிக்கெட்டுக்கான வரவேற்பு அறைக்கு சென்றால், சுமார் 1 மணி அல்லது 2 மணி நேரத்தில் சுலபமாக சுவாமி தரிசனம் செய்யலாம்.
Leave a Comment