குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா....
பிரசித்திபெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா அக்டோபர் மாதம் 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோயிலில் இந்தாண்டு தசரா திருவிழா அக்டோபர் 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதை முன்னிட்டு செப்டம்பர் 30ம் தேதி காலை 10 மணிக்கு காளி பூஜை நடக்கிறது. அக்டோபர் 1ம்தேதி அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வீதியுலா நடக்கிறது.
காலை 8 மணிக்கு நடக்கும் கொடியேற்றத்தைத் தொடர்ந்து பக்தர்கள் காப்பு அணிந்து விரதம் துவங்குவர். இதையொட்டி காலை 6 மணி, மதியம் 1 மணி முதல் இரவு 7.30 மணி வரை சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. இரவு 9 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் வீதியுலா நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் அபிஷேக, அலங்கார தீபாராதனையும் மாலையில் ஆன்மிகச் சொற்பொழிவும், இரவு பரதநாட்டியமும், பக்தி இன்னிசை கச்சேரியும் நடக்கிறது. தினமும் பல்வேறு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.
முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 10ம் தேதி நடக்கிறது. அன்று இரவு 12 மணிக்கு அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் திடலுக்கு எழுந்தருளி சூரனை வதம் செய்யும் மகிசா சூரசம்ஹாரம் நடக்கிறது. தொடர்ந்து கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளியதும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது.
Leave a Comment