சிதம்பரம் கோயிலில் ருத்ர ஆவர்த்தி ஹோமம்


சிதம்பரம் நடராஜர் கோயிலில் ருத்ர ஆவர்த்தி ஹோமம் விமர்சையாக நடைபெற்றது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உலக நன்மை, அமைதி வேண்டி, லட்ச ருத்ர பாராயணம் மற்றும் கோடி அர்ச்சனை ஜூலை மாதம் 28-ஆம் தேதி தொடங்கியது.

இதனை அடுத்து தினமும் 100 தீட்சிதர்கள் பங்கேற்று காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ருத்ர மந்திரத்தை 22 முறை பாராயணம் செய்தனர். வில்வ அர்ச்சனையும் நடைபெற்றது.

நடராஜர் சன்னிதியில் பணம், தங்க நகைகள் வைக்கப்பட்டு தனபூஜை நடைபெற்றது. செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று லட்ச ஆவர்த்தி சம்மேளன சகஸ்ரநாம ஹோமம், ருத்ர ஆவர்த்தி ஹோமம் நடைபெற்றது.
முன்னதாக, அதிகாலை 4 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு கால பூஜைகள் நடைபெற்றன. பின்னர், ஹோமத்தையொட்டி கோயிலின் பொற்கூரை போன்ற வடிவிலான பிரமாண்ட யாகசாலையில் 9 யாக குண்டங்கள் அமைத்து, நடராஜமூர்த்திக்கு 1,008 கலசங்கள், ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாளுக்கு 1,008 கலசங்கள் வீதம் மொத்தம் 2,016 கலசங்கள் வைக்கப்பட்டு, ஒவ்வொரு குண்டத்துக்கும் 12 ஆச்சாரியர்கள் ருத்ர மந்திரத்தைக் கூறி ஹோமம் செய்தனர். மாலையில் ஆவர்த்தி ஹோமம் நிறைவடைந்தது.

இதையடுத்து யாக சாலையிலிருந்து கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, ஆவணி மாத மகாபிஷேகம் சித்சபை முன் உள்ள கனகசபையில் மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது.



Leave a Comment