முதலமைச்சர் ஜெயலலிதா ஓணம் பண்டிகை வாழ்த்து....


பசி, பிணி, பகை நீங்கி, மக்கள் சகோதரத்துடன் வாழ வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா ஓணம் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள ஓணம் திருநாள் வாழ்த்து செய்தியில்... திருவோணத் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
மலையாள மொழி பேசும் மக்களால் பத்து நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின் போது, மக்கள் தங்கள் இல்லங்களின் முன்பு வண்ணப் பூக்களால் அழகுற அத்தப்பூ கோலங்கள் இட்டு, புத்தாடை உடுத்தி, அறுசுவை கொண்ட ஓணம் விருந்துண்டு, புலிக்களி, கைகொட்டுக்களி போன்ற நடனங்களை ஆடி, கயிறு இழுத்தல், களறி, படகுப் போட்டி போன்ற விளையாட்டுப் போட்டிகளை நடத்தி உற்சாகமாக கொண்டாடி மகிழ்வார்கள் என கூறியுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, திருவோணத் திருநாளான இந்நன்னாளில், ஆணவம் அகன்று, பசி, பிணி, பகை நீங்கி, மக்கள் சமத்துவத்துடனும், சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று வாழ்த்தி, மலையாள மொழி பேசும் மக்களுக்கு மீண்டும் ஒரு முறை எனது உளமார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
இதேபோல ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாளம் பேசும் மக்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வாழ்த்துக் கூறியுள்ளனர்.



Leave a Comment