திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் கும்பாபிஷேகம்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவிலில் உள்ள நரசிம்மர் சுவாமி சன்னதி உள்ளிட்ட திருப்பணிகள் நடக்கும் சன்னதிகள் மற்றும் கோபுரங்களுக்கு ஆகஸ்டு 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்....
108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானதும், புராதன மிக்க பார்த்தசாரதி சுவாமி கோவிலில் எழுந்தருளியுள்ள யோகநரசிம்மர், வரதராஜசுவாமி, திருமழிசையாழ்வார், கருடாழ்வார் மற்றும் குளக் கரை ஆஞ்சநேயர் ஆகிய சன்னதிகளுக்கும், அதன் விமானங்களுக்கும், பின்கோபுரவாசல் விமானம், பாண்டிகோபுரம், நரசிம்மர் கல்யாண மண்டபம், நரசிம்மர் மண்டபத்தின் மேல்தளம், கீழ்தளங்கள், குளக்கரை ஆஞ்சநேயர் விமானம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் திருப்பணிகள் கடந்த ஜூலை 10-ந் தேதி தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுபடி ஆகஸ்டு 18ஆம தேதி மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இத்திருப்பணிகள் பழமை மாறாமல் தொல்லியல் துறை வல்லுனர்களின் ஆலோசனைப்படி, ரூ.95 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ரூ.55 லட்சம் மதிப்பில் சுவாமி கிரீடம், கர்ணபத்திரம், ஸ்ரீசடகோபம், கவசங்களுக்கு தங்க ரேக் பதிக்கும் பணியும், கோபுர கலசங்களுக்கு தங்கநீர் தோய்க்கும் பணியும் மற்றும் முதல் முறையாக நரசிம்ம சுவாமிக்கு சொர்ணபந்தனமும், கஜேந்திரவரதராஜ சுவாமிக்கு ரஜதபந்தனமும் பொருத்தப்பட உள்ளது.
இந்த திருப்பணிகள் ஏற்பாடுகளை அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், இந்து சமய அற நிலையத்துறை ஆணையர் மா.வீரசண்முகமணி மற்றும் துறை அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்ததாகவும் அரசின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Leave a Comment