சகல மங்கலங்களையும் பெருக வைக்கும் தைப்பூசம்!
தைப்பூசம் என்பது தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தை மாதத்தில் பூசமும், வியாழனும், பௌர்ணமியும், சித்த யோகமும் கூடிய நடுப்பகல் வேளையில், சிவபெருமான் திருநடனம் ஆடினார். எனவே தைப்பூச தினம் மிகவும் உத்தமம் ஆகும் என்பார்கள்.
முருகப்பெருமான், அசுரர்களை சம்ஹாரம் செய்யப் புறப்படு முன், பார்வதி தேவி தம் சக்தியை வேல் வடிவில் அளித்து அருள் பாலித்தார். இதனை `எம் புதல்வா... வாழி வாழி எனும்படி வீறான வேல் தர’ என்று அருணகிரியார் திருச்செந்தூர் திருப்புகழில் பாடுகிறார். இவ்வாறு அம்பிகை கந்தப் பெருமானுக்கு வேல் வழங்கிய நன்னாள் தைப்பூசம் எனக் கூறப்படுகிறது. எனவே, சிவாலயங்கள் போலவே முருகப்பெருமான் திருக்கோயில்களிலும் தைப்பூசத்தன்று தேர், தீர்த்தத் தெப்பத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
தைப்பூசம் அறிவைப் பிரகாசிக்கச் செய்யும் நன்னாள் என்பதால், திருவருட்பிரகாச வள்ளலார் அன்று சித்தி விளாகத்தில் ஜோதியில் கலந்தார் என்பர். இதையொட்டி வடலூரில் ஏழு திரையை விலக்கி ஜோதிக் காட்சி நடைபெறும்.
சிவபெருமானும் முருகப்பெருமானும் வேறல்ல - இருவரும் ஒருவரே என்னும் தத்துவப்படி தைப்பூசம் - பங்குனி உத்திரம் - வைகாசி விசாகம் முதலான விசேஷ நாள்கள் முருகப்பெருமானுக்கும் உரியதாகக் கொண்டாடப்படுகிறது.
தைப்பூச விழாவையொட்டி பழநிக்குப் பாதயாத்திரை செல்வதும், காவடி எடுப்பதும் பிரசித்தமான விழாவாகும். தமிழகத்தில் மட்டுமல்லாமல் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீசியஸ் போன்ற பல நாடுகளிலும் தைப்பூச விழா சிறப்பா கக் கொண்டாடப்படுகிறது. நாட்டுக்கோட்டை நகரத்தார் இந்த விழாவைப் பிரபலப்படுத்தி உலகில் உள்ள எல்லா முருகன் கோயில்களிலும் தைப்பூச விழா சிறப்பாகக் கொண்டாட வகை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்ஙனம் குருவருளும் திருவருளும் சிறந்து விளங்கும் தைப்பூசத் திருநாளில் நாமும் முக்கண்ணனையும் அவர் மைந்தன் முருக வேளையும் எல்லாம்வல்ல பராசக்தியையும் வழிபட்டு வேண்டும் வரம்பெற்று மகிழ்வோம்.
திருநெல்வேலி தலத்தில் பராசக்தி தாமிரபரணியில் நீராடி தவம் இருந்து, தைப்பூசத் திருநாளில் இறைவனின் அருள் பெற்றாளாம். ஆக தைப்பூச நாளில் அம்மையப்பரை வழிபட, தம்பதி ஒற்றுமை மேலோங்கும்; சகல மங்கலங்களும் பெருகும். அதேபோல் இந்தப் புனித நாளில் சுப காரியங்கள் செய்தால் தம்பதிகள், வாழ் வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ்வர் என்பது ஐதிகம்.
Leave a Comment