செல்வ வளத்தைப் பெருக்கும் சூரியன் வழிபாடு!


மாவாசைக்கு பிறகு வரும் 7 ஆவது நாள் திதியை 'சப்தமி' என்பார்கள். இது சூரியன் அவதரித்த தினம் என்பதால், இதனை ரத சப்தமி' என்று போற்றுகிறார்கள். அன்றைய தினம் சூரியனை நாம் வழிபாடு செய்தால், எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.

அன்றைய தினம் செய்யும் தர்மங்களுக்கு அதிக புண்ணியம் வந்துசேரும். அதேபோல் இந்நாளில் தொடங்கும் தொழில், சிறப்பான வளர்ச்சியைப் பெறும். கணவனை இழந்த பெண்கள், இந்த வழிபாட்டை மேற்கொண்டால் அடுத்த பிறவியில் இந்த நிலை வராது என்கிறது ஐதீகம். 

ரத சப்தமி அன்று சூரியனுக்கு சிவப்பு நிற ஆடை அணிவித்து, சிவப்பு நிற மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து, நெய் விளக்கேற்றி வழிபட்டால் சூரியனால் ஏற்படும் தோஷங்கள் விலகும். சூரியனுக்கு உகந்த தானியம், கோதுமை. எனவே ரத சப்தமி அன்று சூரியனுக்கான நைவேத்தியத்தில் கோதுமையால் செய்யப்பட்ட உணவு இருப்பது பெரும் புண்ணியம் தரும். ரத சப்தமி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு, சூரியனை வணங்க வேண்டும். பின்னர் சூரியனுக்குரிய துதிகளைச் சொல்ல வேண்டும். 

சூரியனுக்கு உகந்த நைவேத்தியம், சர்க்கரைப் பொங்கல். அதனை சூடாக இருக்கும் போதே நைவேத்தியம் செய்துவிட வேண்டும். வழிபாட்டிற்குப் பிறகு அந்த சர்க்கரைப் பொங்கலை, மற்றவர்களுக்கு வழங்கி நாமும் சாப்பிட வேண்டும். ரத சப்தமி நாளில் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் தேர்க்கோலம் இட வேண்டும். 

சூரியனுக்கு உகந்த பத்ரம் (இலை), எருக்கம் இலை ஆகும். ரத சப்தமி அன்று ஏழு எருக்கம் இலைகளை தலையில் வைத்து நீராடுவது மிகவும் அவசியம். இதனால் ஆரோக்கியமும் செல்வ வளமும் பெருகும். நீராடும் போது ஏழு என்ற எண்ணிக்கையில் எருக்கம் இலைகளை எடுத்து அடுக்கிவைத்து, அதன் மீது அட்சதை, எள் வைக்க வேண்டும். ஆண்கள் என்றால் அதனுடன் விபூதியும், பெண்கள் என்றால் அதனுடன் மஞ்சளும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மின்சாரம் எப்படி உலோகக் கம்பி வழியே பாய்கிறதோ. அப்படி சூரியனின் ஏழு வகைக் கதிர்களும் அன்று மட்டும் எருக்கன் இலை வழியே இழுக்கப்பட்டு, நம் உடலில் பாய்ந்து,உடல் உபாதைகளையும், நோய்களையும் நீக்கும் என்பது ஐதீகம்.

சூரியன், நாராயணரின் அம்சம் என்பதால், ரத சப்தமி தினம் அன்று, பெருமாள் கோவில்களில் அவர் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்குவார். சூரியன் வழிபாட்டை தினமும் கூட செய்யலாம்.



Leave a Comment