வைகுண்ட ஏகாதசியின் சிறப்புகள்!


'வைகுண்ட வாசனுக்கு வருடம் முழுவதுமே கொண்டாட்டம்' என்பார்கள். அதிலும் சிறப்பாக மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியும் சொர்க்கவாசல் திறப்பும் வைணவர்களுக்கு கதி மோட்சம் அளிக்கும் உன்னதமான விழாவாகும்.

ஸ்ரீரங்கநாதர் கோயிலில் நடைபெறும் விழாக்களுள் முதன்மையானது வைகுண்ட ஏகாதசி. பொதுவாக வைகுண்ட ஏகாதசி திருவிழா பகற்பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும். வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி அதிகாலை பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும்.

வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் திருக்கைத்தல சேவையும் அடுத்தடுத்த நாள்களில் திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும் தீர்த்தவாரியும் நடைபெறும். விழாவின் இறுதி நாளில் நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு பெறும். இந்த நிகழ்ச்சிகளைக் காண்பதற்காகவும் ரங்கநாதரை தரிசிக்கவும் திருச்சி மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிவார்கள்.

வைகுண்ட ஏகாதசி அன்று மூலவர், தசாவதாரம் சித்திரிக்கப்பட்ட முத்தங்கி அணிந்து காட்சி தருவார். ஸ்ரீமன் நாராயணனின் 108 திவ்ய தேசங்களில் திருப்பாற்கடல், ஸ்ரீவைகுண்டம் ஆகிய திவ்ய தேசங்களை நாம் இந்த நிலவுலகில் தரிசிக்க முடியாது. ஆனால், திருவரங்கம் திருத்தலத்தில் அருளும் ரங்கநாத பெருமாளை வைகுண்ட ஏகாதசி நாளில் தரிசிப்பதன் மூலம் அந்த இரண்டு திவ்ய தேசங்களை தரிசித்த புண்ணியம் நமக்குக் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருந்து, தன்னை வழிபடுபவர்களுக்கு வைகுண்டப் பதவியை அளிப்பதாக பெருமாள் மக்களுக்கு வாக்குறுதியை அளிக்கின்றார். ஏகாதசி விரதத்தைத் தொடர்ந்து அனுஷ்டிப்பவர்களின் சந்ததிக்கு, இம்மையிலும் மறுமையிலும் மனமகிழ்ச்சி, சுகம், ஆரோக்கியம், செல்வம், புகழ் ஆகியவற்றை வாரி வழங்குகிறார் என்பது ஐதிகம்.



Leave a Comment