சபரிமலை: 18 படிகள் உணர்த்தும் தத்துவங்கள் என்ன?


பரிமலை அய்யப்பன் கோயில் என்றாலே பக்தர்களின் எண்ணத்தில் தோன்றுவது 18 படிகள் தான். விரதமிருந்து, இருமுடி சுமந்து பக்தர்கள் ஐயனை 18-ம் படி ஏறிச்சென்று தரிசித்தலே மிகவும் சிறப்பானதாகும். சுவாமியை இவ்வாறு தரிசித்தால் தான் ஒரு மண்டலம் விரதமிருந்து கோயில் சென்று வந்ததன் முழுப் பலன்களையும் புண்ணியத்தையும் பெறமுடியும் என்பது ஐதீகம்.

இந்த 18 படிகள் உணர்த்தும்  தத்துவங்கள் இங்கே... 

1. காமம்
பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.

2. குரோதம்
கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்துவிடும்.

3. லோபம்
பேராசைக்கு இடம் கொடுத்தால், இருப்பதும் போய்விடும். ஆண்டவனை அடைய முடியாது.

4. மதம்
யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்துவிடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.

5. மாத்சர்யம்
மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.

6. டம்பம் (வீண் பெருமை)
அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.

7. அகந்தை
“தான்’’ என்ற அகந்தை கொண்டவன், ஒருபோதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச்சுமை.

8. சாத்வீகம்
விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.

9. ராஜசம்
அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.

10. தாமசம்
அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.

11. ஞானம்
எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.

12. மனம்
நமது மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.

13. அஞ்ஞானம்
உண்மைப் பொருளை அறியமாட்டாது மூடி நிற்கும் இருள்.

14. கண்
ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.

15. காது
ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக்கடலில் மூழ்க வேண்டும்.

16. மூக்கு
ஆண்டவனின் சந்நதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.

17. நாக்கு
கடுஞ்சொற்கள் பேசக்கூடாது.

18. மெய்
இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்லவேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

இந்த 18 வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும்.



Leave a Comment