புத்தாண்டு: தமிழகம் முழுவதும் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு!
2025 புத்தாண்டை வரவேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் கோவில்களில் சாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
2025 ஆம் ஆண்டின் முதல் நாளான இன்று இந்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நாடு முழுவதிலும் மக்கள் கோயில்களுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டனர். புத்தாண்டையொட்டி சென்னை வடபழனி முருகன் கோவில் உள்படதமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மேலும் திருச்சி, காஞ்சிபுரம், மதுரை, கோவை, திருநெல்வேலி, திருத்தணி, பழனி, திருச்செந்தூர் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.
கோவையில் பிரசித்தி பெற்ற ஆசியாவிலேயே மிகப்பெரிய சிலை உள்ள புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அருகம்புல் மாலை, 108 தேங்காய்களால் ஆன மாலை மற்றும் புஷ்ப மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகரை பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டனர். அவர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவில் நடை இன்று அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.
அதேபோன்று ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. புத்தாண்டின் முதல் நாள் தரிசனத்திற்காக பம்பை முதல் சன்னிதானம் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். இதேபோல், மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயினியில் உள்ள ஸ்ரீ மஹாகாலேஷ்வர் ஜோதிர்லிங்க கோயிலிலும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர். டெல்லியின் ஜந்தேவாலன் கிருஷ்ணர் கோயில், பிர்லா மந்திர், சத்தார்பூர் துர்க்கை கோயில், ஹனுமன் கோயில், கல்காஜி கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற சிறப்பு ஆராதனைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர். ஹரியானாவின் பஞ்ச்குலாவில் உள்ள மான்சா தேவி கோயிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
அயோத்தியில் புத்தாண்டு வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சரயு நதியில் நீராடி சூரியனுக்கு தீபம் காட்டி, பின்னர் ராமர் கோயில் சென்று வழிபாடு மேற்கொண்டனர். உத்தராகண்ட்டின் ஹரித்வார் நகரில் அதிகாலை முதலே பக்தர்கள் கங்கையில் நீராடி வழிபாடு மேற்கொண்டனர். ராஜஸ்தானின் அஜ்மீரில் உள்ள குவாஜா கரீப் நவாஸ் தர்காவில் ஏராளமான இஸ்லாமியர்கள் அதிகாலையிலேயே கூடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அஸ்ஸாமில் உள்ள காமாக்கியா கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்து தீபம், ஊதுபத்தி ஆகியவற்றைக் காட்டி வழிபாடு மேற்கொண்டனர்.
ஒடிசாவின் பூரி ஜெகந்நாதர் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
Leave a Comment