தீராத துன்பத்தை போக்கும் முருகன் ...
தீராத துன்பத்தை போக்கும் முருகன் ...
முருகனை வழிபாடு செய்பவர்களுக்கு எப்பேற்பட்ட கஷ்ட சூழ்நிலையும் படிப்படியாக விலகி ஓடும்.
முருகப்பெருமானை வழிபடும் பக்தர்கள் மிக அதிகம். வழிபாடுகளிலும் வழிபாட்டு முறைகளிலும் முருகப்பெருமானுக்குத்தான் பலவிதமான வழிபாடுகளும் நேர்த்திக்கடன்களும் இருக்கின்றன என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
முருகப்பெருமானுக்கு எல்லா சிவாலயங்களிலும் சந்நிதி அமைந்திருக்கும். பெரும்பாலான சிவன் கோயில்களில் முருகக் கடவுளும் சாந்நித்தியம் கொண்டவராகத் திகழ்வார். ஆறுபடை வீடுடையோன் என்று முருகக் கடவுளைச் சொன்னாலும் ஆறு படைவீடுகள் என்று சொல்லப்படும் கோயில்களையும் தாண்டி ,ஏராளமான முருகன் கோயில்கள் இருக்கின்றன. அதுவும் பிரசித்தி பெற்ற திருத்தலங்கள் இருக்கின்றன.
அதேபோல், பல அம்மன் கோயில்களிலும் முருகக் கடவுளுக்கு சந்நிதிகள் இருக்கின்றன. அம்மையப்பன் என்று சிவபார்வதியைச் சொல்வோம். அம்மை குடிகொண்டிருக்கும் கோயில்களிலும் அப்பன் சிவனார் குடிகொண்டிருக்கும் கோயில்களிலும் மைந்தன் கந்தனுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன.
ஆறுபடை வீடுகள் எனும் பட்டியலுக்குள் வராத, வடபழநி, வயலூர், குமரன் குன்றம், குன்றத்தூர் விராலிமலை முதலான ஏராளமான கோயில்களில் இருந்துகொண்டே தன் பக்தர்களின் குறைகளைப் போக்கி அருளிக்கொண்டிருக்கிறான் அழகன் முருகன்.
வழிபாடுகளும் நேர்த்திக்கடன்களும் வேலவனுக்கு ஏராளம். காவடி எடுத்து வழிபடுவார்கள். வேல் எடுத்து வந்து பூஜிப்பார்கள். பால் குடம் ஏந்தி வருவார்கள். பாத யாத்திரை மேற்கொள்வார்கள். பாலபிஷேகம் செய்வார்கள்.. முடிகாணிக்கை செலுத்துவார்கள். சேவல் வழங்குவார்கள்.
முருகப்பெருமானை எப்படி வழிபட்டாலும் ஏற்றுக் கொண்டு அருளுவான் என்கிறார்கள் பக்தர்கள். அதேசமயம் முருக மந்திரத்தைச் சொல்லி மனமுருகி வழிபட்டால், பட்ட கஷ்டங்களையெல்லாம் பனி போல் விலக்கிவைத்து அருளுவான். அடைந்த துன்பங்களில் இருந்தெல்லாம் ஆனந்த வாழ்க்கையை மாற்றித் தந்திடுவான் கந்தன்.
ஓம் செளம் சரவணபவ
ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லெளம் செளம் நமஹ
எனும் முருகப்பெருமானின் மந்திரத்தை, செவ்வாய்க்கிழமைகளில் அவசியம் சொல்லி வாருங்கள். செவ்வாய்க்கிழமையில் காலையும் மாலையும் இந்த மந்திரத்தைச் சொல்லி வாருங்கள். முடிந்தால் நெய்விளக்கேற்றி பிரார்த்தனை செய்யுங்கள். இந்த மந்திரத்தை 21 முறை அல்லது 54 முறை அல்லது 108 முறை சொல்லி வாருங்கள். அதேபோல், செவ்வாய்க்கிழமை என்றில்லாமல் எல்லா நாளும் சொல்லி வழிபடுங்கள். தினமும் சொல்லி வழிபடுங்கள். நம் வினைகளையெல்லாம் தீர்த்துவைப்பான் வேலவன். சிக்கல்களையெல்லாம் போக்கி அருளுவான் சிங்காரவேலன்.
Leave a Comment