ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூரத் தேரோட்டம்...


ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீஆண்டாளின் கோயிலில், இந்த ஆண்டு ஜூலை 28-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழாவின் 5-ம் திருநாளான ஆகஸ்டு 1-ம் தேதி காலை ஸ்ரீபெரியாழ்வார் மங்களாசாசனம் நடைபெற்றது.

ஏழாம் திருநாளான புதன்கிழமை இரவு கிருஷ்ணன்கோவிலில் ஸ்ரீஆண்டாள் மடியில் ஸ்ரீரெங்கமன்னார் சயனத் திருக்கோலம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்பதாம் திருநாளான வெள்ளிக்கிழமை அதிகாலை சுவாமிகளுக்கு ஏகாந்த திருமஞ்சனம் நடைபெற்றது.

தனித்தனி தோளுக்கினியான்களில் புறப்பாடு நடைபெற்று திருத்தேர் எழுந்தருளல் நடைபெற்றது. பின்னர் காலை 8.05 மணிக்கு தேரோட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.சிவஞானம் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடன் தேரை நான்கு ரத வீதிகளின் வழியே வடம் பிடித்து இழுத்து வந்தனர்.



Leave a Comment