ஈடு இணையில்லா பக்தி எது?…
ஆன்மீகத்தின் முக்கிய அம்சம் இறைவனும், சகலமும் அவனே என சரணாகதி அடைவதும்தான். ஆனால் ஆன்மீக விவகாரத்தில் இறைவனை எவ்வழியில் யார்யார் எப்படியெப்படி காண்கிறார்கள் என்பது ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும்.
பெருமாள், முருகன், காளி, சிவன் லட்சுமி, சரஸ்வதி, காமாட்சி, மீனாட்சி என பல வடிவங்களில் சொல்லப்படும் இறைசக்தியை, சிலர் மறுப்பார்கள். அதுவும் அப்பட்டமான உண்மையே..அதாவது, ‘’எல்லாவற்றையும் மிஞ்சிய சக்தி உண்டு. ஆனால் அதன் வடிவம் இப்படித்தான் என்று வரையறைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது’’ என்பதே இதன் பின்னணி.
உதாரணத்திற்கு ஏதாவது உருவக்கடவுளைப்பற்றி விவாதிக்கையில், அந்த கடவுளின் சக்தி, எல்லை போன்றவை பற்றி கேள்விகள் எழும். அகில உலகத்தையும் ஒரு கடவுள் ஆட்டிப்படைக்கிறார் என்றால், ஒவ்வொரு நாட்டிலும், எத்தனையெத்தனையோ கடவுள்கள் எப்படி உருவாகமுடியும். சிவன்தான் மனித குலத்தை படைக்கிறார் என்றால் அவர் ஏன் அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் ஆட்கொள்ளமுடியவில்லை?
இப்படிப்பட்ட சிக்கலான கேள்விகளெல்லாம் தேவையில்லை என்பதே இறைவனே இல்லாத நிறைபக்தி நிலை.
உலகில் பெரும்பாலான குற்றங்களை தடுப்பது அரசோ, காவல்துறை மீதான பயமோ அல்ல. யாரும் பார்க்கமுடியாத, கண்டுபிடிக்கமுடியாத குற்றங்கள், மோசடிகள் போன்றவற்றை ஒரு மனிதன் தவிர்ப்பது, அவனை ஆட்டிப்படைக்கும் மனசாட்சியால் மட்டுமே.
வறுமையோடும் பசியோடும் இருப்பவர்கள், தனியாக இருக்கும் ஒரு குழந்தையின் வசமுள்ள விலையுயர்ந்த ஆபரணங்களை சுலபமாக களவாடிவிடமுடியும். கொள்ளை புத்தி கொண்ட ஒரு சிலரை தவிர்த்து பெரும்பாலானோர் அப்படி செய்யாததற்கு காரணம், அப்படி செய்வது பாவம் என, யாருடைய உந்துதலும் இன்றி மனசாட்சி தடுப்பதாலேயே.
மற்றவர்களிடமிருந்து பணம், பொருள் உட்பட பல விஷயங்களை பிறர் கண்டறியாதவகையில் அபகரிக்கும் வாய்ப்பு, எடுத்துப்போகும் வாய்ப்பு எல்லோருக்குமே கிடைக்கும். ஆனால் அப்படி செய்கிறோமா? தெருவில் கேட்பாரற்று கிடக்கும் ஒரு முக்கிய பொருளைக் கண்டால் அதன் உரியவரிடம் சேர்க்கத்தான் பெரும்பாலானோரின் மனது துடிக்கும். இதுதான் மனசாட்சியின் மகிமை.
இப்படி எல்லாவகையிலும் குற்றங்களை தடுத்தும் நல்ல புத்திகளை கொடுப்பதுமான மனசாட்சியும், தன்னம்பிக்கையும் சேர்ந்த ஒரு அம்சம்தான் நம்முள் ஒளிந்திருக்கும் அற்புதமான ஆற்றல்.
கடவுள் நமக்கு அள்ளியும் கொடுக்கவும் மாட்டார்.. நம்மிடமிருந்து பறிக்கவும் மாட்டார். நம்மை ஆசிர்வதிக்கவும் மாட்டார்..தண்டிக்கவும் மாட்டார்.. ஏனெனில் கடவுள் என்ற ஒருவரே கிடையாது. நம்முள் இருக்கும் மனசாட்சியும், ‘இனி நடக்கும் எதுவும் நல்லதாகவே நடக்கும்’ என்ற பலத்தை தரும் தன்னம்பிக்கையும் கலந்த ஒரு அரூபமே, மகா சக்தி என்கிற சிந்தனை.
கும்பிடுகிற கோவிலில் உள்ள சாமி எதுவாக இருந்தாலும், அது நம்முடைய உள்தோற்றதை பிரதிபலிக்கும் முகக் கண்ணாடிதான்.
வழிபாடு என்ற பெயரில் நாம் சரணாகதி அடைகிறோம். நம்முடைய தவறுகளை மனம்விட்டு ஒப்புக்கொண்டு மனதை சுத்தப்படுத்திக்கொண்டு மீண்டும் தவறு செய்யமாட்டேன் என திருத்திக்கொள்கிறோம். நாம் கும்பிடும் சாமி நமக்கு நல்லதே செய்யும் என அடியோடு நம்புகிறோம்..
எப்பேர்பட்டவரும் கோவிலுக்குள் வழிபடும்போது சரணாகதி அடையாமல் ‘’நான் வந்திருக்கிறேன்..எனக்கு நீ அருள் புரிந்தே தீரவேண்டும்’’ என்று அகங்காரத்துடன் வழிபடுவதே கிடையாது.. சர்வ நாடிகளும் ஒடுங்கிவிடும் தருணம்.
நமக்குள் இருக்குள் ஆற்றலை நாமே வழிபட்டுக்கொள்வதுதான் இறைவனில்லா ஆனால் ஈடுஇணையில்லா பக்தி.
- ஏழுமலை வெங்கடேசன்
தமிழின் மூத்த ஊடகவியலாளர். சன், ஜீ டிவி ஆகிய தொலைக்காட்சிகளில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். வளர்ந்து வரும் தொலைக்காட்சி நிறுவனங்கள் சிலவற்றிற்கு ஆலோசகராக இருப்பவர். சமூக நிகழ்வுகள் குறித்த தனது ஆழமான பார்வையை சமூக ஊடகங்களில் ஆணித்தரமாக பதிவு செய்யத் தவறாதவர். இதன் மூலம் ஃபேஸ்புக்கில் மிகப்பெரிய வாசகர் வட்டத்தைக் கொண்டிருப்பவர்.
Leave a Comment