சுவாமிமலை கோயிலில் நவம்பர் 5ஆம் தேதி சூரசம்ஹாரம்
ஆறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை ஸ்ரீசுவாமிநாத சுவாமி கோயிலில் அக்டோபர் 30 ஆம் தேதி சஷ்டி விழா தொடங்கவுள்ளது.
அக். 30 ஆம் தேதி மாலை 7 மணியளவில் பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கும் விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.
அக்டோபர் 31-ம் தேதி காலை 9 மணியளவில் சண்முகசுவாமி, விக்னேஸ்வரர், நவவீரர் மற்றும் பரிவாரங்களுடன் மலைக்கோயிலிலிருந்து படி இறங்கி உற்சவ மண்டபத்திற்கு சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று இரவு படிச்சட்டத்தில் சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது.
அன்று முதல் காலை மாலை இருவேளைகளிலும் படிச்சட்டத்தில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. நவம்பர் 5-ம் தேதி காலை 8 மணிக்கு படிச்சட்டத்தில் சுவாமி திருவீதியுலாவும், 10.30 மணிக்கு சண்முகசுவாமிக்கு 108 சங்காபிஷேக அர்ச்சனை ஆராதனையும் நடைபெறுகிறது. அன்று மாலை சண்முகசுவாமி அம்பாளிடத்தில் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து அன்று சூரசம்ஹாரம் நடைபெற்று தங்கமயில் வாகனத்தில் காட்சியளித்தலும், திருவீதியுலாவும் நடைபெறுகிறது.
நவ. 6-ம் தேதி காலை சண்முகசுவாமி புறப்பாடு நடைபெற்று காவிரியில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. இரவு 7 மணியளவில் தேவசேனா திருக்கல்யாணம் நடைபெறுகிறது. நவ. 7,8 தேதிகளில் இரவு 8 மணிக்கு ஊஞ்சல் திருவிழா நடைபெறுகிறது. நவ. 9-ம் தேதி இரவு 8 மணிக்கு பல்லக்கு திருவீதியுலாவும், 10-ம் தேதி இரவு 9 மணிக்கு சண்முக சுவாமி யதாஸ்தானத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
Leave a Comment