திருப்பதி குடைகள் ஊர்வலம் புறப்பட்டது.


சென்னையில் இருந்து திருப்பதி குடை ஊர்வலம் புறப்பட்டது. திருமலை- திருப்பதிக்கு 150 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் இருந்து ஊர்வலமாக திருக்குடைகள் எடுத்துச் செல்லப்பட்டு பிரமோற்சவ கருட சேவையின் போது சமர்ப்பிக்கப்படும்.

திருப்பதி கருட சேவையை முன்னிட்டு தமிழக பக்தர்கள் சார்பில் இந்த ஆண்டும் இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில் திருமலை வெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டுத் திருக்குடைகள் சென்னையில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று சமர்ப்பணம் செய்யப்பட உள்ளது.
இதை முன்னிட்டு பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டு திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்கியது.
ஸ்ரீராமகிருஷ்ண மடம் மேலாளர் சுவாமி விமுர்த்தானந்தா ஆசியுரை வழங்கி குடை ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் எஸ். வேதாந்தம்ஜி மற்றும் அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்த ஊர்வலம் என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக சென்று, ‘கோவிந்தா’, ‘கோவிந்தா’ என பக்தி கோ‌ஷம் முழங்க, மாலை 4 மணிக்கு திருக்குடைகள் யானைகவுனியை தாண்டியது.
தொடர்ந்து நடராஜா தியேட்டர, செயின்ட் தாமஸ் சாலை, சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூர் பாரக்ஸ் சாலை, ஸ்டேரன்ஸ் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை வழியாக அயனாவரம் தாக்கர்சத்திரம், காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று தங்குகிறது.
ஐ.சி.எப்., ஜி.கே.எம். காலனி, திரு.வி.க. நகர், பெரம்பூர், வில்லிவாக்கம் சென்றடைந்து இரவு தங்குகிறது. அக்டோபர் 3-ந்தேதி பாடி, அம்பத்தூர் எஸ்டேட், முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயல் சென்றடைந்து இரவு தங்குகிறது.

4-ந்தேதி ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், வீரராகவப்பெருமாள் கோவில், திருவள்ளூர் சென்றடைந்து இரவு தங்குகிறது.

5-ந்தேதி மணவாளநகர், திருப்பாச்சூர் வழியாக திருச்சானூர் சென்றடைந்து 6-ந்தேதி திருமலை செல்கிறது. அங்கு மாட வீதிகளில் வலம் வந்து வஸ்திரம் மற்றும் மங்களப் பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் முறைப்படி சமர்ப்பணம் செய்யப்படுகிறது.



Leave a Comment