கொலு வைக்க ரெடியா....


பல வீடுகளில் கொலு வைப்பது பரம்பரை பரம்பரையாக வருகிற பழக்கம். பெண்கள், கலைத்திறமையையும் கற்பனை வளத்தையும் வெளிப்படுத்தப் பயன்படுகிற களம்... அதுமட்டுமல்ல விருந்தோம்பல் என்கிற உன்னதப் பண்புக்கு விளக்கம் தருகிற நிகழ்வு...
இந்த அளவு முக்கியத்துவம் உள்ள கொலுத் திருவிழா, கொலு எப்படி வைக்க வேண்டும்... எப்படியெல்லாம் அலங்காரம் செய்தால் அழகாக இருக்கும்?

கொலு என்பது துர்க்கா, லட்சுமி, சரஸ்வதியை பூஜிக்கும் பண்டிகை. அதனால் ஒரு தெய்வத்துக்கு 3 நாட்கள் என்று கணக்கு வைத்துக் கொண்டாடுகிறோம்.
இதனை நம் விருப்பத்திற்கேற்ப, நம் வசதிக்கேற்ப செய்யலாம்.
ஒவ்வொரு வருடமும் புதிதாகக் கொஞ்சம் பொம்மைகளை வாங்கி வைத்து கொலுவை அழகுபடுத்துங்கள். 9 படிகள்தான் கொலு வைக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கேற்ப ஒற்றைப்படையில் படிகளில் கொலு அமைத்துக் கொள்ளலாம்.
புதிதாக கொலு வைப்பவர்கள், ஒட்டு மொத்தமாக எல்லா பொம்மைகளையும் வாங்காமல் ஒவ்வொரு வருடமும் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கலாம். முதல்கட்டமாக விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, தசாவதார பொம்மைகளை வைத்து கொலு அமைத்துக் கொள்ள வேண்டும். அதற்கடுத்து படிப்படியாக மற்ற பொம்மைகளை வாங்கலாம்.
கொலுவில் பூங்கா அமைக்க சிலர் விரும்புவார்கள். அப்படி அமைப்பவர்கள், ஒரு வாரத்துக்கு முன்னதாக சிறு பாத்திரத்தில் மணல் பரப்பி வெந்தயம், கடுகு, கேழ்வரகு ஆகியவற்றை விதைத்து, வளரச் செய்து கொலுவில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பழைய பொம்மைகளின் வண்ணப்பூச்சு மங்கி இருந்தால், அவற்றுக்கு நீங்கள் விரும்பும் வண்ணம் பூசி, புதிது போலவே மாற்றலாம்.
அதேபோல கொலு வைக்கும் வீடுகளில், சிலர் சுமங்கலிகளுக்கு மட்டும் தாம்பூலப்பை கொடுப்பார்கள். வீட்டுக்கு வந்து போகும் எல்லோருக்கும் தாம்பூலப்பை கொடுக்கலாம். அது உங்கள் மீது மற்றவர்களுக்கு இருக்கும் மதிப்பை உயர்த்திக் காட்டும். குழந்தைகளைக் கவரும் வகையில் அவர்களுக்குப் பிடித்த பொம்மைகளையோ, புத்தகங்களையோ பரிசாக கொடுக்கலாம்.



Leave a Comment