ஸ்ரீரங்கம் கோயிலில் பவித்ர உற்சவம்....


திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்க நாதர் கோவிலில் செப்டம்பர் 13 ஆம் தேதி பவித்ர உற்சவம் தொடங்குகிறது.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்க நாதர் கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் பவித்ர உற்சவம் திருவிழா 9 நாட்கள் நடைபெறும். இந்தாண்டு பவித்ர உற்சவம் செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடக்கிறது.
இந்த உற்சவ நாட்களில் உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் கோவில் கொடிமரத்துக்கு மேற்கில் உள்ள பவித்ர உற்சவம் மண்டபத்துக்கு வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
உற்சவத்தின் முதல் நாளான வருகிற 13-ந்தேதி நம் பெருமாள் மூலஸ்தனத்தில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு யாக சாலைக்கு 9.45 மணிக்கு வந்து சேர்கிறார். அங்கு சிறப்பு திருவாராதனம் மற்றும் சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. அன்றிரவு 10 மணிக்கு யாக சாலையில் இருந்து புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

2-ம் நாளான 14-ந்தேதி பிற்பகலில் மூலவர் பெரிய பெருமாளுக்கு அங்கோபாங்க எனப்படும் பூச்சாண்டி சேவை நடக்கிறது. இதற்காக மூலவர் பெரிய பெருமாள், உற்சவர் நம்பெருமாள், உப யநாச்சியார் ஆகியோர் மீது முற்றிலும் நூலினால் அங்கோபாங்க அலங்காரம் செய்யப்படுகிறது.

அதன்பின் நம்பெருமாள் இரவு 8 மணிக்கு மூலஸ்தா னத்தில் இருந்து புறப்பட்டு பவித்ர உற்சவ மண்டபத்தக்கு வருகிறார். நம்பெருமாள் அங்கிருந்தபடியே பக்தர்களுக்கு காட்சியளித்த பின்னர் இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு மூலஸ்தானத்துக்கு 10.15 மணிக்கு சென்றடைகிறார்.

விழாவின் 7-ம் நாள் நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுகிறார். உற்சவ காலங்களில் தினமும் மாலையில் நம்பெருமாள் பவித்ர உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.



Leave a Comment