திருப்பதி கோயிலை ஹெலிகாப்டரில் சுற்றிபார்க்க ரெடியா?
திருப்பதி கோயிலுக்கு ஹெலிகாப்டரில் ஆன்மிகச் சுற்றுலா மேற்கொள்வதற்கான வெள்ளோட்டம் இரண்டு நாள்களில் நடக்கவுள்ளது.
இந்த புதிய சுற்றுலாச் சேவை மூலம் ஸ்ரீசைலம், திருமலை கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
விஜயவாடாவிலிருந்து காலை 8 மணிக்கு ஹெலிகாப்டர் புறப்பட்டு நேராக ஸ்ரீசைலத்தை சென்றடைகிறது. அங்கிருந்து கார் மூலம் பக்தர்கள், கோயிலுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்கு அபிஷேகம், குங்கும அர்ச்சனை செய்வித்து, விஐபி தரிசனம் வழங்கப்படுகிறது.
அதன்பின் இழுவை ரயில் மூலம், பாதாள கங்கைக்கு அழைத்துச் சென்று படகு சவாரி செய்ய வைக்கின்றனர். பின்னர் மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு 1.30 மணிக்கு ஹெலிகாப்டர் திருப்பதியை அடைகிறது.
திருப்பதியிலிருந்து கார் மூலம் திருச்சானூர், சீனிவாசமங்காபுரம், ஸ்ரீகாளஹஸ்தி கோயில்களில் தரிசனம் செய்ய வைக்கின்றனர். இதையடுத்து, திருமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இரவு அங்கு தங்கும் வசதி அளிக்கப்படுகிறது.
மறுநாள் காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க வைக்கின்றனர். பின்னர் அங்கிருந்து காலை 7.30 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு 8.30 மணிக்கு மீண்டும் விஜயவாடாவை சென்றடைகிறது.
இதில், விஜயவாடா- ஸ்ரீசைலம் - திருமலை, ஹைதராபாத்-ஸ்ரீசைலம்-திருமலை என இரண்டு சுற்றுலாத் திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. ஒரு ஹெலிகாப்டரில் 6 பேர் வசதியாக அமர்ந்து பயணம் செய்யலாம். ஒரு நபருக்கு ரூ. 15,000 கட்டணமாக வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பயணிகள் ஓய்வெடுக்கும் சமயத்தில் ஸ்ரீசைலம், திருமலை அருகில் உள்ள மற்ற சுற்றுலா தலங்களை கண்டுகளிக்கவும் சுற்றுலாத் துறை வாய்ப்பு அளிக்கிறது. இதற்கு, ஒரு நபருக்கு ரூ. 2,500 கூடுதலாக கட்டணம் வசூலிக்க உள்ளனர். இதற்கான வெள்ளோட்டம் இன்னும் இரு நாள்களில் நடைபெற உள்ளதாக ஆந்திர சுற்றுலாத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Leave a Comment