பார்த்தசாரதி கோயிலில் உள்ள யோக நரசிம்ம சுவாமி குடமுழுக்கு விழா....
திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி கோயிலில் உள்ள ஸ்ரீயோக நரசிம்ம சுவாமி சன்னதிக்கு வரும் 22-ம் தேதி குடமுழுக்கு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அருள்மிகு ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி கோயிலில் உள்ள ஸ்ரீ யோக நரசிம்ம சுவாமி, ஸ்ரீ கஜேந்திர சுவாமி, ஸ்ரீதிருமழிசையாழ்வார், குளக்கரை ஸ்ரீபக்த ஆஞ்சநேய சுவாமி சன்னிதிகளுக்கு குடமுழுக்கு செய்வதென்று முடிவு செய்யப்பட்டு, முதலமைச்சர் உத்தரவின் படி அதற்கான பணிகள் கடந்தாண்டு தொடங்கப்பட்டன. ரூ.95 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்ட குடமுழுக்குப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
இதனையடுத்து, 4 சன்னிதிகளுக்கான கும்பாபிஷேகம் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி திங்கள் கிழமை காலை 9.30 மணியிலிருந்து 10.25 மணிக்குள் நடக்க உள்ளன. மேலும், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 18-ம் தேதி முதல் யாகசாலைகள் அமைக்கப்படவுள்ளன. அன்றைய தினம் முதல்கால ஹோமம், திவ்யபிரபந்த சேவை, வேதபாராயணம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ஆகஸ்டு 19-ம் தேதியன்று விஸ்வரூபம், கும்பாராதனம், காலசந்தி, பூர்ணாஹுதி, சாற்றுமுறை, விமான கலசம் ஸ்தாபனம், ஹோமம் உள்ளிட்டவையும், 20-ம் தேதியன்று ஹோமம், மூலவருக்கு சொர்ணபந்தனமும் (தங்கத்தில்), ரஜதபந்தனமும் (வெள்ளியில்) சாத்தப்படவுள்ளன. 21-ம் தேதியன்று ஹோமம், மஹாசாந்தி ஜப்யம், அதிவாச திருமஞ்சனம், மஹாசாந்தி திருமஞ்சனம், உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்க உள்ளன.
இதையடுத்து, 22-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூபம், கும்பாராதனம், காலசந்தி உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கிறது. காலை 9 மணிக்கு பெருமாள், கும்பத்துடன் சன்னிதியில் எழுந்தருள உள்ளார். சரியாக காலை 9.30 மணியிலிருந்து 10.25-க்குள் விமானம் மற்றும் கோபுரங்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட உள்ளன.
Leave a Comment