திருப்பதியில் வருடாந்திர பவித்ரோற்சவம் தொடங்கியது.....
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் தொடங்கியது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுக்கு 450 உற்சவங்கள் நடக்கின்றன.
விழாக்களில் பூஜைகளை செய்யும் அர்ச்சகர்கள், அதில் பங்கேற்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்படும் தோஷ நிவர்த்திக்காக ஆண்டுக்கு ஒரு முறை பவித்ரோற்சவம் நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான பவித்ரோற்சவம் 14 ஆம் தேதி தொடங்கியது. தொடர்து 3 நாட்கள் இந்த பவித்ரோற்சவம் நடைபெறுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவில் பவித்ரமாக இருக்கவும், புனித தன்மையை பேணி காக்கவும் பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது.
காலை 9 மணியில் இருந்து பகல் 11 மணிவரை உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனமும், மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணிவரை உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் மாடவீதிகளில் உலா வருதல் நடைபெறும். 15-ந்தேதி பவித்ர சமர்ப்பணமும், 16-ந்தேதி பூர்ணாஹூதியும் நடக்கிறது.
பவித்ரோற்சவத்தையொட்டி மேற்கண்ட 3 நாட்களுக்கு கோவிலில் நடக்கும் விசேஷ பூஜை, அஷ்டதல பாத பத்மாராதனை சேவை, கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, வசந்த உற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அர்ச்சனை சேவை, தோமால சேவை ஆகியவற்றில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது.
Leave a Comment