தமிழகத்தின் திருப்பதி: சிவபெருமான் அருள் பாவிக்கும் ஏழுமலை!


தென்னகப் பகுதியில் ஆன்மீக பயணம் மேற்கொண்ட அகத்திய மாமுனிவர், திருமால் வாசம் செய்யும் திருமலையின் பெருமை குறித்து பிறர் கூற அறிந்து, இதுபோன்று சிவபெருமானுக்கு ஏழுமலை இல்லையே என ஏங்கினாராம். இதனை அறிந்த அகத்திய முனிவரின் உள் அகத்தில் குடி கொண்ட சிவபெருமான், "தனது தொண்டரின் விருப்பத்தை நிறைவேற்றும்படியாக" ஏழு குன்றுகள் அமைந்த வெள்ளையங்கிரி மலை மீது எழுந்தருளி, தன்னை அங்கு வந்து தரிசிக்குமாறு அகத்திய மாமுனிவருக்கு ஞானத்தின் மூலமாக உணர்த்தினாராம்.

அதன்படி, அகத்திய மாமுனிவர் வெள்ளையங்கிரி மலை சென்று, அங்கு சுயம்புவாக அவதரித்த சிவ லிங்கத்தை வழிபட்டு தவத்தில் ஈடுபட்டார். சப்த ரிஷிகளில் ஒருவரான அகத்திய மாமுனிவர் தவம் புரிவதை கண்ட அந்த ஏழு குன்றுகளும் சிவனை நோக்கி தானும் தவம் புரிந்தன. அவைகளின் பக்தியை மெச்சி சிவபெருமான் தானும் தவக்கோலம் பூண்டதாக வரலாறு.

அதன்படி, பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் இதன் பெருமை அறிந்து இப்பகுதிக்கு வந்த போது, வேடன் ஒருவன் தனது நிலப்பரப்பில் அனுமதி இன்றி நுழைந்த அர்ஜுனனுடன் போர் புரிந்ததாகவும், பின் அந்த வேடன் தன் வேடத்தை கலைத்து சிவபெருமானாக காட்சியளித்த போது, அவரை பக்தி பெருக்குடன் வணங்கிய அர்ஜுனனுக்கு சிவபெருமான் தனது பாசுபத ஆயுதத்தை அளித்து அருள் பாவித்தார்.

இங்கிருக்கும் ஏழு குன்றுகளும், நம் உடலில் உள்ள “ஏழு யோக சக்கரங்களை” குறிப்பதாக சாஸ்திர வல்லுநர்கள் கூறுகின்றனர். இமயத்தில் உள்ள கைலாயத்திற்கு யாத்திரை செல்ல இயலாதவர்கள் "தென் கைலாயம்" என ஆன்மீக அன்பர்களால் அழைக்கப்படும். வெள்ளையங்கிரி யாத்திரை சென்று அங்கு எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்தால், ஏழு பிறவியிலும் கைலாய யாத்திரை சென்று வந்த பலன் கிட்டும் என்பது திண்ணம்.

கோவை மாவட்டம் பூண்டி கிரிமலையானது 5 1/2 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஏழு குன்றுகள் சிவபெருமான் அருள் பாவிக்கும் தென் திருப்பதி ஆகும். கோவை மாநகரிலிருந்து மேற்கே சுமா 36 கி.மீட்டதூரத்தில் மேற்குத் தொடச்சி மலையின் அடிவாரத்தில் அமையப்பெற்ற பிரசித்தி பெற்ற தென் கைலாயம் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு பல்வேறு ரிஷிகளும், மாமுனிகளும், சித்தர்களும், ஞானிகளும் ஈசனை வேண்டி தவம் புரிந்து பிறப்பில்லை நிலை அடைந்த பெருமைக்குரிய இடமாகும்.

- பொன்.கோ.முத்து திருவள்ளூர்



Leave a Comment