மானிடர்கள் செய்யும் பாவ புண்ணியங்களை கணக்கிட்டு, மேலோகத்தில் தீர்ப்பு வழங்கும் நீதிபதி யார் ?


ஜனநாயக நாடான இந்தியாவில் மட்டும் இன்றி சர்வாதிகாரிகளின் ஆலமியின் கீழ் உள்ள மேலை நாடுகளில் கூட, ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்படும் நபருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக நீதிமன்றங்கள் தோற்றுவிக்கப்பட்டன. வழக்கை கொடுத்தவருக்கும் எதிர் மனுதாரருக்கும் இடையே அவரவர் தரப்பு வழக்கறிஞர்களின் மாதத் திறமையின் அடிப்படையில் பாதிக்கப்படும் நபருக்கு நீதி வழங்குவதற்காக அரசியல் அமைப்பு சட்டத்தின்படி நடுநிலையோடு நீதி வழங்க நீதிபதி ஒருவர் இருப்பது போன்று" பூலோகத்தில் மனிதர்களாகிய நாம் செய்யும் பாவ புண்ணியங்களை கணக்கிட்டு, அதற்கேற்ப நீதி வழங்குவதற்காக மேல் லோகத்தில் நீதிபதி ஒருவர் உள்ளார் அவர் யார் ? வாருங்கள் அந்த நீதிமானை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

அஷ்ட திசை பாலகர்களில் தெற்கு திசையின் அதிபதியான எமதர்மன், மகாவிஷ்ணுவின் வம்சத்தில் வந்தவர். அதாவது, மகாவிஷ்ணுவிடம் இருந்து தோன்றியவர் பிரம்மதேவன். அவரிடம் இருந்து தோன்றியவர்கள் மரீசி, காசியபர், சூரியன் ஆகிய மூவர். சூரியனிடம் இருந்து தோன்றியவரே எமதர்மன். விஸ்வகர்மாவின் மகளை சூரியன் மணம் புரிந்ததில், அவர்களுக்கு மனு, எமன் என இரண்டு ஆண் பிள்ளைகளும், யமுனா என்ற பெண் குழந்தையும் பிறந்தனர்.

எமன் - நீதி, நேர்மை தவறாத சத்தியத்தின் காவலன். தனது சித்தி சாயாவால் பாதிக்கப்பட்ட போது, சூரியனின் ஆலோசனைப்படி சிவனை வேண்டி யாகம் நடத்தி கடும் தவம் புரிந்து, சிவபெருமான்ிடம் இருந்து தென் திசை அதிபதி என்ற பட்டம் பெற்று, எமலோகத்து அதிபர் ஆனார். சிவபெருமான், தனது ரிஷப வாகனத்திற்கு நிகராக, கருமை நிறம் கொண்ட எருமை மாடு ஒன்றை உருவாக்கி, மகாவிஷ்ணுவின் அம்சமான எமனுக்கு பரிசாக வழங்கினார் அதுவே எமதர்மனின் வாகனமான எருமை.

மேலும், மானிடர்கள் உள்ளிட்ட ஜீவராசிகளின் பாவ புண்ணியங்களுக்கேற்ப நீதி வழங்கும் அதிகாரம் மிக்க நீதிபதி பொறுப்பையும் சிவபெருமான் எமதர்மனுக்கு அளித்தார். அவர் அமர்ந்து தீர்ப்பு வழங்குவதற்காக ஓடும் அக்னி ஆற்றுக்கு மேலே, சிம்மாசனம் அமைத்து கொடுத்தார்.

எமதர்மன் அதில் அமர்ந்து நீதி வழங்குவதாக புராண இதிகாசங்கள் கூறுகின்றன. அவரது நீதி சிறிது சரிந்தாலும் சிம்மாசனத்துடன் எமதர்மன் அக்னி ஆற்றில் விழுந்து தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்பதால், நடுநிலையுடன் தீர்ப்பு வழங்கி வருவதாகவும் புராண கதைகள் உண்டு. தேவர்களுக்குள் மதிநுட்பம் மிக்கவராகவும் எமதர்மன் விளங்குகிறார். தர்மத்தின் வழி நடக்கும் அவர் ‘எமதர்மன்’ ‘தர்மராஜன்’ எனவும், காலம் தவறாமல் கடமையை செய்வதால் காலன்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

பொன்.கோ.முத்து திருவள்ளூர்



Leave a Comment