புத்தாண்டு 2025: சபரிமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மாதம் 26 ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற்று முடிந்தது. மண்டல சீசனில் 41 நாட்களில் 32.49 லட்சம் பக்தர்கள் ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்தனர். நடப்பு சீசனையொட்டி ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 70 ஆயிரம் பக்தர்களுக்கும், உடனடி தரிசன முன்பதிவின் படி தினசரி 10 ஆயிரம் பக்தர்களுக்கும் தரிசன அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் மண்டல பூஜை நாட்கள் நெருங்க, நெருங்க பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வந்தது. இதையடுத்து உடனடி தரிசன முன்பதிவு மூலம் கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் கடந்த மண்டல சீசனில் ஒரே நாளில் அதிகப்படியாக 1 லட்சத்து 6 ஆயிரம் பக்தர்கள் வரை சிரமம் இன்றி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
இந்தநிலையில் மகரவிளக்கு சீசன் தொடங்கியதையடுத்து சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். இன்று (புதன்கிழமை) ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. புத்தாண்டின் முதல் நாள் தரிசனத்திற்காக பம்பை முதல் சன்னிதானம் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து ஐயப்ப சாமியை தரிசித்து வருகின்றனர்.
மகர விளக்கு பூஜை வருகிற 14 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் 15 ஆம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், உடனடி தரிசன முன்பதிவின்படி தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் தரிசன அனுமதி வழங்கப்படும் என்றும், அதற்கு ஏதுவாக பம்பையில் உடனடி தரிசன முன்பதிவுக்கான கவுண்ட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருப்பதாகவும் திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Leave a Comment