சித்தர்கள் வாசம் செய்யும் உதய தேவரீஸ்வரர் திருத்தலம்
சித்தர்கள் வாசம் செய்யும் இந்த திருத்தலம், பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் பெருந்தலமாகவே உள்ளது. இந்த கோவில் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம். சித்தர்கள் வழிபடும் உதயதேவரீஸ்வரி சமேத உதய தேவரீஸ்வரர் திருத்தலம் சேலம் அருகே உள்ள அரூர் அடுத்த சுக்கம்பட்டி என்னும் கிராமத்தில் உள்ளது. இங்குள்ள உதயதேவர் மலை மலையை தேவகிரி என்றும் அழைப்பார்கள். சிறிய குன்று போல் அமைந்திருக்கும் இந்த மலை மீது பல நூறு ஆண்டு காலமாக மேற்கே நோக்கி அருள்புரியும் உதயதேவரீஸ்வரி சமேத உதய தேவரீஸ்வரர் திருத்தலம் உள்ளது. சிறப்புக்குரியது இந்த ஆலயத்தில் உள்ள மூலவரின் மீது தினமும் மாலை வேளையில் சூரிய ஒளி விழுவது அரியக் காட்சியாகும். 1131-ம் ஆண்டு விக்கிரம சோழன் காலத்தில் பஞ்சந்தாங்கி திருச்சிற்றம்பல வேலைக்காரர் என்பவரால், கோவிலில் கதவு நிலை கொடையாக அளிக்க பெற்றதாக கல்வெட்டு தகவல் உள்ளது. மேலும், இந்தக் கோவில் 7.9.1818-ல் புதுப்பிக்கப்பட்டதற்கான கல்வெட்டு அடையாளங்களும் உள்ளன. ஆரம்ப காலத்தில் இங்கு உதயதேவரீஸ்வரர், விநாயகர், சண்டிகேஸ்வரர், நந்தி சிலைகள் மட்டுமே இருந்தன. அதே நேரத்தில் ஊருக்குள் மாரியம்மன் திருத்தலம் ஒன்றும் இருந்தது. சிவனுக்கு வலதுபுறமாக கிழக்கு நோக்கி உதயதேவரீஸ்வரி அம்மன் சிலையை அமைத்தார்கள். இந்தக் கோவிலில் பவுர்ணமி அன்று இரவு, சிறப்பு பூஜை நடை பெறும். அப்போது விபூதி, மாங்காய் மற்றும் தாழம்பூ வாசம் வீசுவதை அங்கு வந்த பக்தர்கள் இன்றளவும் உணர்ந்து வருகிறார்கள். 3 சித்தர்கள் வருகையின் காரண மாகத்தான், தாழம்பூ, விபூதி, மாங்காய் மணம் அங்கு கமழ்வதாக பக்தர்களிடம் நம்பிக்கை அதிகரித்தது. விநாயகர் சன்னிதியில் தான் பழங்கால கல்வெட்டு அமையபெற்றுள்ளதாக கோவில் பூசாரி கூறுகிறார். இந்த ஆலயத்தில் பிரதோஷம் மற்றும் பவுர்ணமி பூஜைகள், கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பவுர்ணமி அன்று நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் நடைபெறும் பவுர்ணமி பூஜையில் தொடர்ச்சியாக 3 பவுர்ணமியில் கலந்து கொண்டால், திருமணத் தடை, நவக்கிரக தோஷம் நீங்கும். குழந்தை பாக்கியம், நினைத்த காரியம் கைகூடும்.
Leave a Comment