சித்த மூலிகைகள்


- "மாரி மைந்தன்" சிவராமன்


கோரக்கர் சித்தர் திவ்விய சரித்திரம்

( பாகம் 3)

*பிரம்மமுனி*

பிரம்மமுனி 
கோரக்கரின் 
இதய நண்பர்.

இருவருக்கும் இருந்த 
கருத்தொற்றுமை 
சித்தர் உலகம் 
சந்தித்திராதது.

'வரதமேடு'
என்ற 
காட்டுப்பகுதியே
அப்போதைய 
வாசஸ்தலம்
இரண்டு 
நண்பர்களுக்கும்.


ஒருநாள் 
இருவரும் 
ஆன்மீகத்தின் 
உச்சத்தில் 
உரையாடிக் கொண்டிருந்தனர்.

'சித்திகள் யாவும் ஒன்றன்பின் 
ஒன்றாய் கூடி 
வருகிறது.

அடுத்து 
பாக்கியிருப்பது தெய்வநிலை ஒன்றே.

படைத்தல் 
காத்தல் 
மறைத்தல் 
ஒடுக்கல்
அருளல் என்னும்
ஐந்தொழிலே 
இனி 
சித்தியாக வேண்டும்.

அதற்கு 
ஒரே வழி 
யாகம்.

யாகம் செய்வோம்'

இதுவே அவர்கள் சத்விசாரத்தின் சாரம்.

தெய்வம் ஆதல் 
என்பது 
எளிய விஷயமா
என்ன !

குறைகள் 
எதுவுமின்றி 
முறைப்படி 
யாகம் நடந்தது.

யாக குண்டத்தில் 
எழுந்த புகை 
யோகம் தர 
யத்தனித்தது.

அதற்கு 
இறைவனின் கருணை அவசியம் அன்றோ ?

கோரக்கர் 
பிரம்ம முனியின் 
யாகக் கூட்டணியில் மனத்தூய்மை இருந்தது.

யாகப் பொருட்களில் கூட தூய்மை இருந்தது.

ஆனால் 
யாகத்தின் நோக்கத்தில் தூய்மை இல்லை.

இறைவன் போல ஆகவேண்டும் என்பது இறுதி நிலை.

பேராசைப் பெருநிலை.

அதற்கு 
இவை போதாது.

இறைவனே விரும்பமாட்டார்.

பொதுவாக 
யாகம் தடைபட 
தடைகள் பல தேடிவரும்.

வந்தது.

யாகத் தீயிலிருந்து 
இரண்டு பெண்கள் 
வெளி வந்தனர்.

ரம்பையும்
ஊர்வசியும் பொறாமைப்படும் 
பேரழகுப் பெட்டகங்கள்.

யாகத்தில்
குறியாயிருந்த கோரக்கரும் 
பிரம்ம முனியும்
"யார் நீ...."
என கோபம் காட்டினர்.

கோபக்கனல் 
யாகத்தீயை விட 
தெறித்து விழுந்து எரிந்தது...

அப்பெண்கள் அசரவில்லை.

"நாங்கள் இருவரும் தேவலோகப் பெண்கள்.

உங்கள் 
யாக சக்தியால்
மதிமயங்கி 
வந்துள்ளோம்."

இரு முனிவரும் 
பதில் சொல்லத்
திணறும் தருணத்தில் அக்னியும் வருணனும் 
அங்கு வந்தார்கள்.

கண்ணால் பேசும் 
இரு கந்தர்வ கன்னிகளையும் பார்த்த மாத்திரத்தில்
  கிறங்கிப் போனார்கள்.

'தேவலோகத்தில் கூட இப்படி அழகு இல்லை. 
அழகியர் இல்லை..'

காமத்தீ பற்றி
அவர்கள் மனது கூச்சலிட்டது.

வந்த வனிதைகள்
யாகம் செய்யும் முனிவர்களை 
விரும்புவது அறிந்து
அந்த யோகம் 
தங்களுக்கு கிடைக்காதா 
என 
தேவமார்கள்
 இருவரும் பொறாமை பொங்க ஏங்கினர்.

'மானிடர்...தேவர் 
எவரது சித்தமும் 
கலங்க வைப்பவர் 
அழகுப் பதுமைகள்

பெண்களைத் 
தேடுவதில் நாடுவதில் உயர்ந்தோரும் 
உளுத்தவர் தாம் போலிருக்கிறது'

இப்படி 
ஒரு சிந்தனை 
கோரக்கர் மனதில்
தாண்டவமாடிய 
அதே கணத்தில் பிரம்மமுனியின் சிந்தனையில் கோரத்தாண்டவமே 
ஆடி ஓய்ந்தது.

ஆடிய தாண்டவம்
 சில கணம்
கனத்த அமைதியைத்
தோற்றுத்தது.

அந்த அமைதியான நொடிகளில் 
யாக மந்திரங்கள்
இரு முனிகளிடமும்
எழவில்லை.

மந்திரங்கள் நிற்கவே 
 யாகம் தடைபட்டது.

கோரக்கருக்கும் 
பிரம்மமுனிக்கும் 
யாகம் தடைபட்டது எல்லையில்லா
  கோபத்தை மூட்டியது.
 சாபமாய் 
வார்த்தைகள் 
சிதறி விழுந்தன.

சட்டென 
கமண்டலத்தை எடுத்தவர்கள் 
யாகத்
தீயிலிருந்து வெளிவந்து
காமத்தீ மூட்டிய
 கன்னியர் மீது கமண்டல நீரைக்
கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கடுஞ் சொற்களோடு
தெளித்தனர்.

வந்தவர்களுக்கு என்ன..?
யாகம் தடைபட 
திட்டமிட்டு 
வந்தவர்கள் தானே..அவர்கள்.?

சாபம் பட்ட
நீர் பட்டதும் 
அவர்கள் செடிகளாகச் செழித்தனர்.

விரக தாப
ஏக்கமுடன் நின்றிருந்த அக்னியும் வருணனும் துக்கமுடன் திரும்பிச் செல்ல மனமில்லாது காமத்துடன்
செடிகளோடு கலந்தனர்...
தீயாக......!
நீராக.......!!

பிரம்ம முனிவரது சாபத்தால் உண்டான செடியே 
'பிரம்ம பத்திரம்'
என்னும் ' 
சித்த மூலிகை.

கோரக்கரின் 
கோபத்தால் 
உருவிழந்து 
செடியானதே 
கோரக்கர் மூலிகை 
எனும் 
சித்தம் மயக்கும் மூலிகை.

இம் மூலிகைகள் இரண்டுக்கும் 
நீரும் நெருப்பும்
 அடிப்படைத் தேவை. 
அவையே 
அக்னியும் வருணனும்.

இவையாவும் சில நொடிகளில் 
படபடவென 
நிறைவேறி நின்றன.

யதார்த்த நிலை
 வந்தபோது 
கோரக்கரும் 
பிரம்ம முனியும் 
தன்நிலை அறிந்து
  துடித்துப் போயினர்.

பெண்களுக்குச்
சாபம் இட்டது பாவம் 
என சஞ்சலப் பட்டார்கள்.

பெண்களுக்குச் 
சாபம் தந்ததால்
இருந்த சித்திகளும்
  விட்டுப் போயிருக்க 
 'உள்ளதும் போச்சே'
என உருகிப் புலம்பினர்.

சர்வேஸ்வரன் 
அது போது 
சக்தி தேவியுடன் 
ரிஷப வாகனத்தில் தோன்றினார்.

"பதவி 
ஆசை வேண்டாம் சித்தர்களே.....!
அதுவும் 
ஆண்டவன் பதவி.....!?

அது அதீத ஆசை.

உங்கள் தவத்திற்கு
 எப்போதும் 
 பலன் இருக்கும்.
 கவலை வேண்டாம்.

நீங்கள் உருவாக்கிய மூலிகைகள் சித்த மருத்துவத்திற்கு
உதவும் மூலிகைகளாக அமையும்."

இறைவன் இவ்விதம் அருளி விட்டு 
மறைந்து போனார்.

இன்றும் 
சித்த மருத்துவத்திற்கு
இம் மூலிகைகள்
பின்னணியில் இருக்கும் ரகசியம் இதுவே.

கோரக்கரோடும் பிரம்மமுனியோடும் 
வசிட்டர் 
துர்வாசர் 
காலாங்கி நாதர் இடைக்காடர் 
தன்வந்திரி 
கருவூரார் 
கமலமுனி 
சட்டைமுனி 
போன்றோரும் 
பொதிகை மலையில் ஞானநெறியில் சிறந்து வலம் வந்த 
காலகட்டம் இதுவே.

(தொடரும்)



Leave a Comment