மச்சேந்திர நாதர்


- "மாரி மைந்தன்" சிவராமன்

கோரக்கர் சித்தர் திவ்விய சரித்திரம் 
(பாகம் 2)

 

கோரக்கர் சரித்திரம்
ஒரு பெரிய சமுத்திரம்.

அதில் மூழ்கினால் மச்சேந்திர முனிவரின் சரித்திரம் எடுக்கலாம். 
பிரம்ம முனியின் திறனையும் உணரலாம். 

மச்சேந்திரர் 
கோரக்கரின் குருநாதர்.
பிரம்மமுனி 
கோரக்கரின் 
ஆத்ம நண்பர்.

முதலில் 
மச்சேந்திர முனிவரைத் தரிசிக்கலாம்.

கோரக்கருக்கு 
உயிர் கொடுத்து 
அருள் தந்து ஆட்கொண்ட 
மச்சேந்திர நாதர் 
ஒரு நாள் 
கோரக்கரை அழைத்தார்.

"கோரக்கா...
நாளுக்கு நாள் 
நீ உயர்ந்து வருகிறாய்.
என்னையும் விஞ்சிய சித்தராய் ஒளிர்வாய் ..."

ஆசி தந்தார்.

"கொஞ்ச நாள் 
மலையாள தேசம் செல்கிறேன்.

நீ தான் 
அங்கு வந்து 
என்னை
அழைத்து வர வேண்டியிருக்கும்.

செல்லட்டுமா...? சந்திப்போம்..." விடைபெற்றார். 

குரு மச்சேந்திர முனிவரின்
கோரிக்கை போலிருந்த உத்தரவை 
"அப்படியே ஆகட்டும் குருநாதா..."
என பணிவோடு சொல்லி குருவை அனுப்பி வைத்தார் 
சீடர் கோரக்கர்.

மச்சேந்திர முனிவர் மதிமயக்கம் தரும்
இயற்கை பேரருள் மிக்க
இறைவனின் தேசமான 
மலையாள நாட்டிற்குச் சென்றார். 

மலையாள தேசத்தில் அரசகுலப் பெண்ணான பிரேமலதாவை 
மச்சேந்திர முனிவர்
விதிப் பயனால்
மணக்க நேர்ந்தது.

அடுத்து 
ஓர் ஆண்மகவு 
பிறந்தது.

மீனநாதன் 
குழந்தையின்
பெயர்.

ஒருநாள் 
மச்சேந்திரர் 
அடுத்து 
நடக்கவிருப்பதை மனைவியிடம் 
சொன்னார்.

"என் சீடன் 
கோரக்கன் 
என்னை 
அழைத்துப்போக வருவான்.

நாம் பிரிவோம்.
நாம்
இணைந்ததும் 
பிரிவதும் 
இறைவன் சித்தம்"

உண்மை கசந்தது.

இளவரசி அல்லவா....!
மச்சேந்திரர் 
கூற்றைச் 
சுக்குநூறாக்க 
ரகசியமாய் 
உத்தரவே போட்டாள்.

"நாட்டுக்குள் 
துறவி என்று 
யார் வந்தாலும் கொன்றுவிடுங்கள்....!"

இதுசமயம் 
குருவைத் தேடி 
கோரக்கர் புகுந்தார் 
குருவாழும் தேசத்திற்குள்.

காட்டில்
பிச்சை கேட்க 
ஒரு குடிசை முன்
நின்றார்.

பழைய அழுது தந்த வீட்டுப் பெண்மணி
அரசு உத்தரவை எச்சரிக்கையாய் 
சொல்லி 
"ஜாக்கிரதை சுவாமி"
என்றாள் பயந்தபடி.

குருநாதர் 
மச்சேந்திரரைச்
சந்திக்க 
நாள் பார்த்துக் காத்திருந்தார் 
கோரக்கர்.

அதுவரை 
காடுகளில் 
ஒளிந்து திரிந்தார்.

ஒரு நாள் 
ஒரு கூத்தாடிக் கூட்டம் அவரிருந்த 
காட்டில் தங்கியது. 

கூத்துக் குழுவின் தலைவன் மட்டும் சோகமாய் இருந்தான்.

கோரக்கர் 
விசாரித்தார்.

"அரண்மனையில் 
அரசன் முன் 
கூத்து நடத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. 

என் கெட்ட நேரம்.
மத்தளம் வாசிப்பவன் நோயில் 
சாய்ந்து உள்ளான்.

அரசி கோபக்காரி.
என்ன நடக்குமோ...!"

அவன் பேச்சில்
உயிர் பயம் 
ஊசலாடியது.

"கவலைப்படாதே...
எனக்கு மத்தளம் 
வாசிக்கத் தெரியும்...
நான் வருகிறேன்... 
நல்லபடியாய் தூங்கு... நாளை பார்க்கலாம்."
குதூகலத்துடன் சொன்னார் 
கோரக்கர் பெருமான்.

குருநாதரை 
ஒரு முறை 
பார்த்தால் போதும் 
அரசு துறந்து 
குடும்பம் விடுத்து தன்னோடு 
திரும்பி விடுவார் 
என உறுதியாய் 
நம்பினார் கோரக்கர்.

மறுநாள்...
அரண்மனையில் 
ஆரவாரக் கூத்து.

மத்தள வாசிப்பில் வல்லவரான கோரக்கர் அடித்த அடி 
புதிய ஒலியைப்
பரப்பிய போது மச்சேந்திரருக்கு கோரக்கரின் 
வருகை புரிந்தது.

அது அவருக்கு 
இசைவாய் இருந்தது.

"அதோ....
அவன் தான் 
என் சீடன்....."
மகிழ்ச்சியில் 
துள்ளிக் குதித்தார் மச்சேந்திரர்.

அரசி அதிர்ந்தாள்.

அதற்கும்
அவளிடம் 
ஓர் அற்புதத் திட்டம் இருந்தது.

"அவரை அரண்மனையிலேயே தங்க வைப்போம்"
பிரியம் காட்டினாள்
மச்சேந்திரரை 
பிரிய விரும்பா பிரேமலதா.

'அரண்மனைச்
சுகமும் சூழலும் 
கோரக்கரையே மாற்றிவிடும்.
இச்சுகம் போதுமென இங்கேயே அவரும்
தங்கி விடுவார்.'

மனக்கோட்டை 
கட்டினாள்
கோட்டை வாழ் அரசி.

'மச்சேந்திரர் அழைத்தாலும் 
மறுக்கும் வகையில் கோரக்கரை 
அசத்தி விடலாம். மடக்கிவிடலாம்'

என 
அரசு சுகத்தின் 
அம்சம் அறிந்த 
அரசி திட்டம் தீட்டினாள்.

கோரக்கர் 
அரசு விருந்தினராய் அரண்மனையில் தங்கினார்.

அதுவரை 
கண்டிராத கேட்டிராத 
ராஜ உபசாரம்.

அதில் பரவசம் இருந்தும் 
ஊர் திரும்ப காத்திருந்தார். 
குருநாதரின் கண்ணசைவுக்கு காத்திருந்தார் 
கோரக்கர்.

மச்சேந்திரர் நிலைதான் 
மர்மமாக இருந்தது. 
ஒருபுறம் மனைவி மகனைப் பிரிய மனமில்லை. 

இன்னொரு புறம் 
துறவு வாழ்க்கையும் சித்தர் நிலையும் 
ஓயாது அழைத்தன.
மனதும் ஏங்கியது.

அரசியின்  
மனக்கணக்கும் மச்சேந்திரரின் 
பாசக் கணக்கும் 
இவ்வாறு இருக்க 
இறை கணக்கு 
வேறாய் இருந்தது.

ஒரு நாள் 
படுக்கையில் 
மலம் கழித்துவிட்டான் குழந்தை மீனநாதன்.

மச்சேந்திரர் 
கோரக்கரை அழைத்து மகனைக் கொடுத்து தூய்மைப் படுத்தச் சொன்னார்.

கோரக்கர் 
வினயமாய் 
இரு கால் 
விரித்துப் பிடித்து 
துணி துவைக்கும் 
கல்லில் 
அடித்துப் பிழிந்து 
உலர்த்திப் போட்டார் அக்குழந்தையை.

"மீனநாதன் எங்கே..?" அரசி கத்தினாள்.

கோரக்கர் 
அமைதியாய் இருந்தார்.
மச்சேந்திரர் துடிக்கவே மீனநாதனிருக்கும்
திசையைக் காட்டினார்.

நடந்ததை அறிந்து நடுங்கிப் போயினர் 
அரசி பிரேமலதாவும் அப்பா மச்சேந்திரரும்.

"அடப்பாவி....
 நீ என் சீடனா....!"
 குரு கொந்தளித்தார்.

அருகில் சென்று பார்க்கையில் 
சின்னஞ்சிறு
துகள்களாய்
சுக்கு நூறாய்
பாலகனின் உடல்
சிதறிக் கிடந்தது.

அரசி 
கோரக்கரின் 
கோபம் புரிந்தாள். மச்சேந்திரர் 
சீடரின் 
எச்சரிக்கையை உணர்ந்தார்.

அரசி 
மண்டியிட்டு வேண்டிய 
அடுத்த நொடிகளில்
துகள்களை இணைத்து அழகிய மீனநாதனை
மீட்டெடுத்து 
வழங்கினார்.

அரசிக்குப் பயம். மச்சேந்திரருக்கு 
அவளைவிட பயம்.

"சொன்னபடி கேட்காவிட்டால் 
இன்னும் என்ன செய்வானோ...?!"

"போகலாமா...?"
எதுவுமே 
நடக்காதது போல்
குருவிடம் 
பணிந்து கேட்டார்.

மறுப்பேதும் 
சொல்லாமல் 
மச்சேந்திரர் 
புறப்பட்டார்.

தடுப்பேதும் 
கூறாமல்
அரசி
அனுப்பி வைத்தாள்.

புறப்படும் போது 
கணவர் 
மச்சேந்திரரிடம் 
கைப்பை 
ஒன்று தந்தாள்.

அதில் பொற்பாளம். 
தங்கத் தாம்பாளம்.
வழிச் செலவுக்கு.

'அரசனாய் வாழ்ந்தவன் ஆண்டியாய் போகிறானே' என்ற ஆதங்கத்தில்
தங்கம் கொடுத்து அனுப்பினாள் கண்ணீருடன்... 
கோரக்கருக்குத் தெரியாமல்.

வழியில் தென்பட்ட 
வழிப்போக்கர்களிடம் மச்சேந்திரர் கேட்டார் 
கைப்பையை இறுக்கிப் பிடித்தபடி, 
"இங்கு திருடர் பயம் உண்டா ....?"

கோரக்கருக்கு 
கோபமே வந்தது.

'ஏனிப்படி 
பயப்படுகிறார்...?'

ஓரிடத்தில் 
குளம் ஒன்றில் குளிக்கும்போது கைப்பையைக்
கரையில் வைத்துவிட்டு திரும்பத் திரும்ப பார்த்தபடி போனார் குருநாதர்.

சந்தேகத்தில் 
பையைத் திறந்து பார்த்தார் கோரக்கர்.

உள்ளே 
தங்கத் தாம்பாளம்.

விட்டெறிந்தார் 
தங்கத்தை 
திசையேதும் பார்க்காமல்.

அதன் எடைக்கு 
ஈடாக 
கல் ஒன்றை வைத்துவிட்டார்.

பயணம் 
தொடர்ந்தபோது மச்சேந்திரர் கேட்டார்
"இந்த பகுதியில் திருடர்கள் இருப்பார்களா?"

"ஏன் இப்படி
பயப்படுகிறீர்கள்.? 
மடியில் கனம் 
இருந்தால் தானே 
வழியில் பயம் வரும் ?
பயப்படாதீர்கள்...."

குருவுக்கே
உபதேசித்தார்
சீடர் கோரக்கர்.

கைப்பையை 
நெஞ்சணைத்தார் மச்சேந்திரர்.

உள்ளே இருப்பது 
வேறு மாதிரி உறுத்தியது.

கைவிட்டு 
எடுத்துப் பார்த்தார்.

கல்.
வெறும் கல்.
பயனற்ற கல்.

"கோரக்கா...."
காடு அதிரக் 
கத்தினார் குருநாதர்.

"உன்னை 
நல்லவன் என நினைத்தேன்...
என் மகனைக் 
கொல்லப் பார்த்தாய்... இப்போது 
தங்கத்தைத் 
திருடி உள்ளாய்....

கெட்ட சீடன் நீ....!
என் அருகில் நிற்காதே...! 
சினந்து சீறினார்.

பதிலேதும் பகராத கோரக்கர் 
குருநாதரை இழுத்துக் கொண்டு ஆங்கிருந்த 
குன்று அருகே சென்றார்.
சிறுநீர் பெய்தார்.
குன்றே தங்கமாகி கண்களைப் பறித்தது.

பிரமித்த குருநாதர்
சீடரைக் கனிவோடு பார்த்துப் பரவசப்பட்டு..

"எதையும் சமாளிக்கும் ஆற்றல் 
பெற்று விட்டாய். 
உயரிய ரசவாத
வல்லமை வந்துவிட்டது. கோபப்படாத 
உனது குணமே 
ரசவாத சித்திக்கு வித்திட்டிருக்கிறது...

நீ வாழ்க...!
நீ குருவை 
விஞ்சிய சீடன்.

அது குருவான 
எனக்குப் பெருமையே...!

இனி தனித்தியங்கு...! தயவு காட்டி 
மக்களை மேம்படுத்து..!

மச்சேந்திரர் 
மகிழ்வோடு வாழ்த்த தாழ்வோடு பணிந்த 
சீடர் கோரக்கர் 
மகிழ்வோடு பயணம் தொடர்ந்தார் குருவோடு.

(கோரக்கர் சித்தர் 
திவ்விய சரித்திரம் தொடரும்)



Leave a Comment