ராமபிரானும்..... சிவபிரானும்.....


- "மாரி மைந்தன்" சிவராமன்

காகபுஜண்டர் திவ்விய சரித்திரம்

காகபுஜண்டர்
ஒரு
பரிபூரண சித்தர்.

பல 
யுகங்கள் கண்டவர்.
பல யுகப் 
பிரளயங்களைப் பார்த்தவர். 

எத்தனையோ பிரம்மாக்கள்.... 
எத்தனையோ விஷ்ணுகள்.... 
எத்தனையோ சிவன்கள் 
அழிந்ததைக் கண்டவர்.

புது யுகங்கள் 
புலர்வதைப் பார்த்து 
மெய் சிலிர்த்தவர்.

இராம காதையில் காகபுஜண்டருக்கு 
முக்கிய இடமுண்டு.

ஆம்....
காகபுஜண்டரின் 
பிரிய தெய்வம் 
சீதாப் பிரியன் 
ராம பிரானே.

எப்போதெல்லாம் ராமவதாரம் 
நிகழ்கிறதோ அப்போதெல்லாம் 
பல யுகம் வாழும் காகபுஜண்டர் 
அயோத்தி சென்று ராமபிரானின் 
அருகிலிருப்பதை வழக்கமாக்கிக் 
கொள்வார்.

சிறு காக்கையாய்
உருமாறி 
ராம பிரானின் 
பால பருவத்தை
ரசிப்பார்.

ராமன் 
உண்ணும்போது 
சிதறும் உணவுகளை காக்கை உருவில் பிரசாதமாக எடுத்து ருசிப்பார்.

ராமபிரானின் 
பால பருவத்தில் விளையாட்டுத் தோழன் 
காக உருவில் இருந்த காகபுஜண்டர் தான்.

சின்ன குழந்தையாய் இருந்தபோது 
ராமன்
தன் தோழன் காகத்தைக் காணவில்லை 
என்று அழுவது 
வழக்கமாம்.

ஒருமுறை 
இருவருக்கும் 
ஓடிப் பிடிக்கும் விளையாட்டு.

ராமன்
துரத்திப் பிடிக்க முயற்சிக்க 
காகம் தப்பியோடி ஆகாயத்தில் 
உயரப் பறந்தது.

'ராமரால் 
இனி பிடிக்க முடியாது'
என ஆகாயத்தில் இருந்தபடி 
காகம் 
பெருமூச்சு விட்ட போது பாலகன் ராமனின் திருக்கரங்கள் 
விண் வரை நீண்டு காகத்தைப் பிடித்தன.

மயங்கிய காகம் கண்விழித்தபோது ராமனின் 
கைப்பிடியில் 
இருந்தது.

பின் 
நடந்ததுதான்
அதிசயம் !
பேரதிசயம் !!

ராமபிரான்
கையிலிருந்த 
காக ரூப 
காகபுஜண்டர் 
ராமனின் திருவாயால் இழுக்கப்பட்டார்.

இறைவனின் திருவயிற்றில் அடைக்கலமானார்.

அங்கே 
ராமபிரான் 
வயிற்றுக்குள் காகபுஜண்டர் கண்டது எவரும் காணாதது 
பல யுகம் கண்ட 
அவரும் காணாதது.

பலவித 
உலகங்கள்..
பிரம்ம தேவர்கள்...
ருத்திரர்கள்...
சூரிய சந்திரர்கள்... முனிவர்கள்...
சித்தர்கள்...

பற்பல அண்டங்கள்...

பிரம்மாக்கள்...
விஷ்ணுகள்...
சிவன்கள்....

கூடவே 
ராமபிரானும் காகபுஜண்டரும்.

புஜண்டருருக்குப் 
புரியாததெல்லாம் புரிந்தன.
தெரியாததெல்லாம் தெரிய வந்தன.

அதுவரை 
அவர் அறிந்திருந்தது அணுவளவு எனவும் அறிந்து கொண்டார்
பல யுகம் கண்ட
காகபுஜண்டர்.

சில நேரம் 
கழித்து 
ராமபிரான் 
வாய்விட்டுச் சிரித்தார்.

புஜண்டர் 
ராம பிரானின்
வாய்ப்புறம் வழியாக வெளியே வந்தார்.

இறை விளையாட்டு இனிது முடிவுற 
வெளியே வந்தவர்,
"காப்பாற்று...
எனைக் காப்பாற்று..."  
என வணங்கி நின்றார்.

"புஜண்டரே...
பயம் வேண்டாம்.

என்ன 
வரம்வேண்டும் ?

தயங்காது கேள்.

எதுவானாலும் 
தருவதற்குத் 
தயாராக இருக்கிறேன்.

உனக்கெது வேண்டும் ?

அஷ்டமா சித்திகளா ? தத்துவ ஞானமா ? வைராக்கிய அதிர்ஷ்டமா ?

வேறெது வேண்டும் ?"

கருணையாய்க்
கேட்டது 
இறைவனின் 
திருக்குரல்.

"ராமா...
கருணைக்கடலே... 
எனக்கு 
எதுவும் வேண்டாம்.

உன் திருவடிகளில் நீங்காத பக்தி 
ஒன்றே போதும்."

பாதம் பணிந்து காகபுஜண்டர் 
கண்ணீர் மல்கக்
கேட்டார்.

ராமபிரான் 
வியந்து போனார்.

"இதுவரை
இப்படி ஒரு 
வரத்தை 
யாரும் எவரும் 
எவரிடமும் கேட்டதாகத் தெரியவில்லை.

பக்தியை யாரும் 
வரமாய் கேட்டதில்லை.

 நீ ஒப்பற்றவன்.
 நீடு வாழ்க...!

 உனக்கு 
எல்லாம் கைகூடும்."

ஆசி தந்தார்.
விடை தந்தார்.


மேருமலைக் காகமான காகபுஜண்டர் குறித்து ஆதிகாலக் கதை 
ஒன்றும் உண்டு.

காகபுஜண்டர் 
ராமபிரானின்
தோழனாய் இருப்பதற்கும் பக்தனாய் இருப்பதற்கும் இக்கதை சொல்லும் நிகழ்வே காரணம்.

பல பிறவிகள் கண்ட காகபுஜண்டரின்
கதைக் களம் 
காலம் தோறும் 
புதுத் தளம்
கொண்டிருப்பது நியாயம்தானே !

அப்படி 
ஒரு பிறவியில் அயோத்தியில் 
பிறந்தார்
புஜண்டர் பிரான்.

அப்பிறவியில் 
புஜண்டர் 
மாறுதலாய் 
ஒரு 
சிவ பக்தன்.

ஆயினும் 
வாய்ஜாலம் 
தற்பெருமை 
அதிகமிருந்தது.

அயோத்தியில் பிறந்திருந்தாலும் ராமபிரான் மீது கிஞ்சித்தும் 
பற்றில்லை.

ராமனை இகழ்வது வழக்கமாயிருந்தது. அப்பிறவிப் பழக்கமாயிருந்தது.
அந்த நேரம்
அயோத்தியில் 
பஞ்சம் 
தலை விரித்தாடியது.

புஜண்டர் 
பிற தேசம் போனார்.

போன இடம் 
வடநாடு 
உஜ்ஜயினி.

அங்கே 
புஜண்டரின் 
சிவ வழிபாடு 
தொய்வின்றித்
தொடர்ந்தது.

அங்கும் 
ராமரைப் பற்றிய 
மதிப்பீடு 
தாழ்ந்திருந்தது. 
வாய்வீச்சு 
மிகுந்திருந்தது.

அங்கு 
வேதம் அறிந்த 
வேதியர் ஒருவர் பழக்கமானார்.

அவர் 
புஜண்டருக்கு
குருவாய் திகழ்ந்து 
கல்வி, வேதம், மந்திரம் கற்பித்தார்.

குரு தந்த 
கல்வியும் கூட 
புஜண்டரை மேன்மையாக்க
வில்லை.

ராமபிரானை இகழ்வதைக் குறைக்கவில்லை.

இப்படிக் குரைப்பது குருநாதருக்கும் எரிச்சலைத் தந்தது.

மகன் போல 
வைத்திருந்த 
புஜண்டருக்கு 
அவரால் ஆன 
அறிவுரை தந்தார்.

"மகனே...புஜண்டா...

ராமநாமம் தூற்றாதே..! போற்ற வேண்டிய திருநாமம் அது.!!

சிவபெருமானும் 
பிரம்மதேவனும் ராமபிரானை
வழிபட்ட வரலாறு அறிவாயா நீ !

அவர்களை விடவா
எல்லாம் 
அறிந்தவன் நீ ?!

உண்மையான 
சிவபக்தன் 
மேன்மையான 
ராமர் திருவடி மீது பக்தியே வைப்பான்.

ராம வெறுப்பை 
விட்டு விடு.

தவறு தவிர்.
மேன்மையைக் 
குறி வை."

குரு 
உபதேசம் செய்தும் திருந்தவில்லை 
காகபுஜண்டர்.

குரு சொல்லை 
மீறினார்.
சிலநேரம் 
குருவையும் 
அவமதித்தார்.

சதா
ராம புராணம் 
பாடுவதாக 
குருவையே
நையாண்டி செய்தார்.

ஒருமுறை 
மகா காலேஸ்வரர் கோயிலுக்கு 
குரு வந்தார்.

அவர் 
வருவதைக் 
கவனித்தும் 
பாராதவரைப் போல 
புறம் பார்த்திருந்தார் புஜண்டர். 

'அவன் அப்படித்தான்!'
 என குரு 
ஒதுங்கிப் போனார்.

பார்த்திருந்த பரம்பொருளுக்குத் தான் 
கோபம் வந்தது.

குரு பொறுப்பார்.
மூல குருவுக்கு 
என்ன கவலை ?

பொறுப்பது 
அவர் வேலையா என்ன !

கோபம் வந்தது.
சாபம் எழுந்தது.

"இவன் 
குரு துரோகி.

குருவின் சொற்களை மதிக்காதவன்.

குரு மன்னிக்கலாம்.
நான் மன்னிக்க மாட்டேன்.

இவன் 
கோடி யுகங்கள் 
கொடிய உலகில் 
நரகில் 
நலிந்து கிடக்கட்டும்.

பற்பல பிறவிகள் 
பாம்பாய் புழுவாய் பூச்சியாய் பறவையாய் நெளிந்து பறந்து 
ஒளிந்து வாழட்டும்.

குருவைக் கண்டு மலைப்பாம்பு போல் உட்கார்ந்திருந்தவன் பாம்பாய் மாறி மரப்பொந்தில் 
கிடக்கட்டும்.!"

சிவபெருமானை
அப்படியொரு 
கோபத்தில் யாருமே பார்த்திருக்க மாட்டார்கள்.!

குரு தான் 
சாபக் கணைகளுக்கு இடையில்...

"சிவ...சிவ...
அறியாமல் செய்துவிட்டான்.

அவனை 
அருள்கூர்ந்து
மன்னியுங்கள்.

அவன் என் 
வளர்ப்பு பிள்ளை...!"

சிவபிரான் 
குருவின் 
வார்த்தைகளால் கொஞ்சம் 
மனம் இரங்கினார்.

குரு பற்றிய 
பாதங்களில் 
கண்ணீர் நிறையவே 
தோள் பற்றி 
எழ வைத்தார்.

"சரி... சரி....
சாபம் தந்தது 
தந்தது தான். 
பலித்தே தீரும்.

இனிமேல் 
இவன் 
ராமபிரானைத் 
தூற்றக் கூடாது.

அப்போது தான் 
பிறவி தோறும் 
போற்றும் வண்ணம் வாழ்க்கை அமையும்.

உங்களைப் போன்ற பிரம்ம ஞானிகளை யாரும் 
அவமதிக்கக் கூடாது.

உங்கள் 
வேண்டுதலால்
இவன் 
இதுநாள் வரை 
சேமித்து வைத்திருக்கும் ஞானம் 
எப்பிறவியிலும் குறையாது... தாழாது.

பிறவிகள் தோறும் புதுப்பிறவி எடுக்கட்டும்.

ராமபக்தி நிலைத்திருக்கட்டும்."

புஜண்டரும் குருவும் சிவபிரானை
வணங்கி மகிழ்ந்தனர்.

அது தொடர்ந்து 
பாம்பாய் 
ஒரு பிறவி.
புழுவாய் இன்னொரு பிறவி என
பற்பல ரூபத்தில்
பல பிறவிகள் 
எடுத்து வந்த 
புஜண்டர் நிறைவாக
காகமாய் 
பிறவி எடுத்தார்.

அதனாலேயே புஜண்டர் காகபுஜண்டர்
ஆனார்.

சாபம் பெற்ற பின்னர் 
தொடர்ந்த 
பிறவிகள் தோறும் புஜண்டரின் உள்ளத்தில்
ராமபிரானே 
நிரம்பி இருந்தார்.

அயோத்திக்குச்
செல்வதும் 
ராமருடன் 
விளையாடி மகிழ்வதும் ஒவ்வொரு அவதாரத்திலும் நிகழ்ந்தது.

(தொடரும்)



Leave a Comment