சிருங்கேரி தொழும் நெரூர்
- "மாரி மைந்தன்" சிவராமன்
சதாசிவ பிரம்மேந்திரர் திவ்ய சரித்திரம்
சிருங்கேரி சாரதா பீடத்திற்கும்
நெரூர்
சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவசமாதிக்கும்
ஓர் ஆத்மார்த்தத்
தொடர்பு உண்டு.
பொதுவாக
சிருங்கேரி
பீடாதிபதியாக
அமர்பவர்கள்
தத்துவ
ஞான சாஸ்திரம்
கசடறக் கற்றவர்களாக இருப்பார்கள்.
இறைவி
வாணி தேவியே
தக்கதொரு பீடாதிபதியைத்
தேர்வு செய்து
'இன்ன இடத்தில்
இப்படி ஒருவன் இருக்கின்றான்'
என்று
அடையாளம்
காட்டுவாள்.
இயல்பிலேயே
கல்வி கேள்விகளில் சிறந்திருப்பார்
அன்னை
அடையாளம்
காட்டியவர்.
காரணம்
முற்பிறப்புக் கல்வியும் முழுமையாக அவரிடம் நிறைந்திருக்கும்.
'பீடாதிபதியாக
அமரும் தருணத்திலேயே
64 கலைகளும் அவர்களுக்கு
அத்துப்படியாயிருக்கும்'
என்பது
ஆதிசங்கரர்
அருளிய வாக்கு.
அப்படி
குருவருளோடு திருவருளோடு பீடாதிபதியானவர் சச்சிதானந்த சுவாமி
நவ நரசிம்ம பாரதி
மகா சுவாமிகள்.
அப்பெரும்
சுவாமிகளுக்கு
பரிச யோக சித்தியில்
சில கேள்விகள்
இருந்தன.
நூல்கள் பல
நுழைந்த போது
நெரூரில்
ஜீவசமாதியில்
துயில் கொண்டிருக்கும்
சதாசிவ பிரம்மேந்திரரே
சர்வ வல்லமை கொண்டவர்
என்பதை சுவாமிகள்
அறிய நேர்ந்தது .
'அவரிடம் அடைக்கலமானால் அனைத்தும் புரியவரும். எதிலும் தெளிவு வரும்'
என
சில நூல்கள் சொல்லின.
பிரம்மேந்திரர் ஐக்கியமாகியிருக்கும் நெரூருக்குப்
புறப்பட்டார்
சிருங்கேரி சுவாமிகள்.
நீண்ட
பல்லக்குப் பயணம்.
சிருங்கேரி
பீடத்தின் கிளை
கரூர் அருகே
மாயனூரில் இருந்தது.
அங்கு தங்கி
நெரூர் செல்ல
பாதை விசாரித்து
பயணம் தொடங்கினார்.
அமராவதி நதியின்
வடகரை
ரங்கநாதன் பேட்டை.
அங்கு
பயணம் தடைபட்டது.
பல்லக்குத் தூக்கிகள் யாரோ தள்ளுவது
போலிருப்பதாகச் சொன்னார்கள்.
மகா சுவாமிகளுக்கு
ஒன்று புரிந்தது.
'இது
சதாசிவ பிரம்மேந்திரர்
அனுகிரகம்.
நுழைவுச்சீட்டு கிடைத்துவிட்டது !
பல்லக்குப் பயணம்
வீண் பகட்டு,
நடை பயணமே
நாயகன் உணர்த்துவது.'
உடனே
பல்லக்கிலிருந்து
இறங்கி
பாதங்களைப்
படரவிட்டார்
திவ்விய திருத்தலம் நோக்கி.
அவரது
ஒவ்வொரு அடியும்
ஆசி வேண்டி
அடி பணிந்தது.
நெரூர்
திசை நோக்கி
நமஸ்காரம் செய்தார்.
பின்
தன் கைநீட்டும்
தூரம் நடந்து
மீண்டும்
நமஸ்கரித்தார்.
இப்படியே
ஒன்றரை மைல்
நடந்த படியும்
வணங்கியபடியும்
வந்தவர் கண்களில்
காவிரிக் கரையோரம்
தவத் துயில்
கொண்ருக்கும் பிரம்மேந்திரர்
ஜீவசமாதி
பேரொளியாய்ப் பட்டது.
நல்ல நாளிலேயே பிரம்மேந்திரர் பேசமாட்டார்.
ஜீவ சமாதியில் இருக்கும் போதா
பேசப் போகிறார் ?
மகா சுவாமிகளும்
விடப்போவதில்லை.
சந்தேகம் தீராமல்
திரும்பப் போவதில்லை.
காலையில்
காவிரியில்
நீராடி விட்டு
பூஜை புனஸ்காரங்கள் முடித்துவிட்டு பிரம்மேந்திரரின்
ஜீவசமாதி முன்
விதையில்லா
வில்வமர நிழலில் அமர்வார்.
கனிந்துருகிக் காத்திருப்பார்.
ஊண் உறக்கமின்றி கண்மூடி
தியானித்திருப்பார்.
ஆயிற்று
மூன்று நாட்கள்.
அம் மூன்று
நாட்களுக்குள்
சிருங்கேரி சுவாமிகள் நெரூரில்
முகாமிட்டிருப்பது
செய்தியாகி சாஸ்திரிகளும் ஆன்றோர்களும் அந்தணர்களும்
பக்த கோடிகளும் பெருமளவில் கூட
கோயில்
களை கட்டி விட்டது.
மூன்றாம் நாள்
அந்த அமைதியான சூழலில் கோயிலினுள்ளே
பேசும் சத்தம் மட்டும்
அப்பால் இருந்த அனைவருக்கும்
கேட்டது.
என்னவென்று
புரியும் பாக்கியம்தான் யாருக்கும்
இருக்கவில்லை.
ஒரு ஞானி
பேசமாட்டார்.
இன்னொரு
ஞானியோ
அதிர்ந்து
பேச மாட்டார்.
பின் எப்படி
உள்ளே இருந்து
பேசும் சத்தம் ?
அது
இரு ஆன்மாக்களின் மௌன ஒலி.
தெய்வ மொழி.
ஆன்மீகப்
பேரலையில்
அந்தரங்க உரைவீச்சு. இறை பேச்சு.
நீண்ட
சம்பாஷனைக்குப் பிறகு
சிருங்கேரி சுவாமிகளின் காந்தக் குரல் தோத்திரங்களில்
கலந்து ஒலிக்க ஆரம்பித்தது.
வெளியே
காத்திருந்த கூட்டம்
அவரின்
தெய்வீகப் பாடலில்
லயித்து சிலிர்த்தது.
சிருங்கேரி சுவாமிகள் வெளியே வந்தார்.
முகத்தில்
சந்தேகங்கள் தீர்ந்த தெளிவு...
உவமையில்லா
உண்மைப் பேரொளி.
அந்தணர்கள்
சூழ்ந்து கொண்டு
நடந்ததை அறிய முயன்றனர்.
அட,
என்ன ஆச்சரியம் !!!
இப்போது
மகா சுவாமிகளிடம் பேச்சில்லை.
அமைதியின்
உறைவிடமாய் அனைவருக்கும்
ஆசி தந்துவிட்டு
கோயிலை
வணங்கி விட்டுப் புறப்பட்டார்.
அவர்
திருக்கரங்களில்
கத்தை கத்தையாக தாள்கள்.
சிருங்கேரி சுவாமிகள் பிரம்மேந்திரரின் ஜீவசமாதி முன்
துதித்துப் பாடிய
தேனமுதக் கீதங்களாய்
அத் தாள்களில்
ஒளிர்ந்தன.
இன்னொரு கையில்
ஓர் அழகிய படம்
ஒளி பரப்பிக்
கொண்டிருந்தது.
அது
திகம்பர சுவாமிகள் சதாசிவ பிரம்மத்தின் திருவுருவப்படம்.
மகா சுவாமிகள் மகிழ்வோடு
தெளிவோடு
புறப்பட்டார்.
அவர் எழுதிய
அந்த
45 துதிப்பாடல்கள் பிரம்மேந்திரர்
புகழை
இன்றும் பாடிக் கொண்டிருக்கின்றன.
சிருங்கேரி
பீடாதிபதியின்
பல்லக்கில்
எப்போதும்
பிரம்மேந்திரர் திருவுருவப்படம் உடனிருந்து
வழி காட்டிக் கொண்டிருந்தது.
இன்றுவரை
சிருங்கேரி பல்லக்கில் சீரோடும் சிறப்போடும் பிரம்மேந்திரர்
ஒளிப் படமாய்
பவனிவரும்
வழக்கமாகிப் போனது.
அது சரி
அப்படம் எப்படி
சிருங்கேரி
சுவாமிகளுக்கு
கிடைத்தது ?
யார்
கொடுத்திருப்பார்கள் ?
அது
பிரம்மேந்திரருக்கும் சிருங்கேரி
பீடாதிபதிக்குமே வெளிச்சம் !
இது நடந்து
சுமார் 150 வருடங்கள் இருக்கலாம்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து
இன்றுவரை
சிருங்கேரி பீடத்திற்கும்
நெரூர் மடத்திற்கும்
உள்ள தொடர்பு
ஆன்மீகச் செறிவுடன் வளர்ந்து வருகிறது.
சிருங்கேரி பீட.த்தின்
பட்டத்திற்கு வரும் ஆச்சாரியார்கள்
நெரூர் வந்து பிரம்மேந்திரரின் வணங்கித் துதித்து
அவர்
ஆசியோடு தான் பதவி ஏற்கிறார்கள்.
அதுபோது
சிருங்கேரியில் இருந்தே பூஜை சாமான்கள் வரும்.
காவிரித் தீர்த்தமும்
நெரூர் பாலுமே
அவர்கள்
நெரூரில் வாங்குவது.
அவர்கள்
வழங்கும்
நிறைந்த காணிக்கை பிரம்மேந்திரர்
பெருமை பேசும்.
அத்தனை நெருக்கம் !அற்புத ஈடுபாடு !!
ஆன்மீக வழிபாடு !!!.
அருமைகளும் பெருமைகளும்
சித்த ஆற்றலும்
கொண்ட
நெரூர்
சதாசிவ
பிரம்மேந்திரரை
வணங்கி நின்றால் வெறுமைகளும் சிறுமைகளும் விலகிப்போகும்.
விடுதலையோ
வீடுபேறோ
முக்தியோ
சித்தியோ
தேடிவரும்.
அதற்குத்
தேடி வாருங்கள்...
ஓடி வாருங்கள்..... நாடி வாருங்கள்....
நெரூர்
சதாசிவ பிரம்மேந்திரர்
ஜீவ சமாதிக்கு !
Leave a Comment