அருள் பொங்கும் ஜீவசமாதி
- "மாரி மைந்தன்" சிவராமன்
சதாசிவ பிரம்மேந்திரர் திவ்விய சரித்திரம்.....
சிறுவர்களுடன் சிறுபிள்ளை போல் விளையாடிக் களிப்பது சதாசிவ பிரம்மேந்திரருக்குப்
பிடித்தமான ஒன்று.
அதனால்தான்
பாலர்களை அழைத்துக்கொண்டு கணநேரத்தில்
மதுரை சென்று
கள்ளழகர் திருவிழாவைத் தரிசிக்க வைத்தார்.
இந்த
அதி அற்புதச் செயல்
அக்கம் பக்கம் இருப்பவர்களுக்குத் தெரியவர
ஆளாளுளுக்கு பிரம்மேந்திரரை நச்சரிக்கத் தொடங்கினர்.
ஒரு தடவை
ஒரு வைணவர்
நேபாளம் சென்று சாலிகிராமம்
வாங்கிவர
வணங்கி நின்றார்.
நொடியில்
நேபாளப் பயணம் நிகழ்ந்தது.
"பெருமானே.…!"
போற்றி நின்றார்
அந்த வைணவர்.
கண்ணிமைக்கும்
கால அளவில் ஸ்ரீரங்கத்தைச்
சீடர் காண சென்றதும் நேபாளப் பயணமும் ஊரெங்கும் பரவியது.
கருவூரைச் சேர்ந்த கனபாடிகள் சிலரும் சாஸ்திரிகள் பலரும் திருப்பதிக்குப் போய் திருமாலைத் தரிசிக்க ஆயத்தம் செய்யுமாறு சுவாமிகளிடம்
வேண்டி நின்றனர்.
நாவசைக்கா நாயகன் தலையசைத்து
சம்மதம் சொல்லி .
உடன்
'ஜன ஆகர்ஷண சக்கரம்' ஒன்றை எழுதினார்.
அதை அப்படியே தான்தோன்றிமலை வெங்கட்ரமண சுவாமி குடைவரைக் கோயிலில் வைத்து
வணங்கி நின்றார்.
'திருப்பதி சென்று
ஓங்கி உலகளந்த வெங்கடாஜலபதியை வேண்டும்
வரம் யாவும்
தான்தோன்றி மலைக்கு சென்று வணங்கினால் கிடைக்கும்.
இரு பெருமாள்களும் ஒருவரே.
இரு கோயில்களின்
அருள் தன்மையும்
ஒன்றே '
என்று
அழைத்து வந்த
அத்தனை பேரையும்
உணரச் செய்தார்.
அன்றைய நாள்
புரட்டாசி மாதம் மூன்றாவது
சனிக்கிழமை.
இப்போதும்
புரட்டாசி மாதம்
மூன்றாம் சனிக்கிழமை தான்தோன்றி மலையில் சிறப்பாக கொண்டாடப்படுவது
இந்நிகழ்வின் குறியீடே.
மைசூர் சமஸ்தானம் தஞ்சாவூர் மன்னர் புதுக்கோட்டை மகாராஜா ஆகிய மூவருக்கும்
முத்தேக சித்திபெற்ற பிரம்மேந்திரருக்கும் உள்ள நெருக்கம்
நீண்டது....
நெடியது.....
அது பிரம்மேந்திரர் சித்தியான
நிறை நாளன்றும்
அதன் பின்னரும்
தொடர்ந்தது
அருளாளரின் தயவு.
பேசாதிருந்தாலும் மனதினில்
பிரம்மேந்திரர் பாடாதிருக்கவில்லை.
கீர்த்தனைகள்
கிருதிகள் படைக்காதிருக்கவில்லை.
நூல்கள்
அருளாமலிருக்கவில்லை.
வடமொழி
அவருக்குச்
சேவகம் செய்ததால் சமஸ்கிருதம்
சாமரம் வீசியதால் பிரம்மேந்திரர் அருளியவை
அனைத்தும்
இணையற்று திகழ்கின்றன.
எளிய நடை
பக்தி ரசம்
சித்தாந்தத் தெளிவு வேதாந்த ஞானம்
நுட்ப விளக்கம்
அனுபவ நிறைவு
இவையே
பிரம்மேந்திரர்
அருளிய நூல்களின்
அடிப்படை.
'பிரம்ம சூத்திர விருத்தி' பிரம்மேந்திரரின்
பிரதான படைப்பு.
ஞான தேடலுக்குத் தீனி.
பாமரருக்கும் பண்டிதருக்கும்
உகந்த உரை நூல்.
'யோக சுகாதாரம்'
ஒரு சாஸ்திர நூல்.
பதஞ்சலி முனியின்
யோக சூத்திரங்களுக்கு அனுபவ விளக்கமே
இந்த யோக நூல்.
உபநிஷத்துகளுக்கு தீபிகை,
ஆரிய விருத்தத்தில் பாடல்கள்,
'ஆத்ம வித்தியா விலாசம்' 'சித்தாந்த கல்ப வல்லி' முதலானவை
பிரமேந்திரரின்
அற்புதப் படைப்புகள்.
இசைக்கும்
தாளத்திற்கும்
இசையும்
அப்பாடல்களும்
அவர்தம் படைப்புகளும் பிரம்மேந்திரர்
ஓர்
ஆன்ம யோகி என்றே பறைசாற்றும்.
காலச்சக்கரம் யாருக்காகவும் காத்திராமல்
சுழன்று
கொண்டிருந்தது.
பிரம்மேந்திரர்
நிகழ்த்திய
அதிசயங்கள்
சித்தாடல்கள்
ஆங்காங்கே
பிரசித்தி பெற்றன.
பல
எவருக்கும்
தெரியாமல்
ரகசியமாயின.
மைசூர்
சாம்ராஜ்யத்திலும்
புதுக்கோட்டை சமஸ்தானத்திலும்
தஞ்சாவூரிலும் பிரம்மேந்திரர்
பாதம் பதித்த
காடு,மேடுகளிலும்
கழனி, கரைகளிலும்
'ஒரு மகான்'
'தெய்வமகன்'
என்ற
பிரமிப்பிருந்தது.
விராலிமலை பிரம்மேந்திரருக்குப் பிடித்த மலை.
அங்கு சென்று அமைதியான குகையில் தவத்தில்
ஆழ்ந்து விடுவார்.
இன்றும்
அக்குகையில்
அருளாளரைத்
தரிசிக்கலாம்.
அண்டை
நாடுகளையும் விட்டுவைக்கவில்லை அவதூதரின்
அருந்தவப் பாதங்கள்.
வட இந்தியா தொடங்கி துருக்கி வரை
நீண்டது
பிரம்மேந்திரரின்
தேச சஞ்சாரம்.
போகுமிடங்களில் ஆதரவும்
துன்பமும்
இருந்தன.
இரண்டையும்
ஒன்றெனப் பாவிக்கும் பிரமேந்திரரை
எதுவும் எதையும்
செய்ய முடியவில்லை.
அவர் போக்கு
சித்தன்
போக்காய் இருந்தது.
சிவம்
நோக்காய் ஒளிர்ந்தது.
உலகமெங்கும்
உலா வந்த போதும் அவரை ஏனோ
கருவூர் பகுதியும்
காவிரி நதியும்
அமராவதி ஆறும்
நெரூர் பூமியும்
அதிகம் ஈர்த்தன.
நெரூர் மக்கள்
அவரின்
நெஞ்சில் இருந்தனர். மக்களின் மனங்களில் மகான் வீற்றிருந்தார்.
நெரூரே
விவேக முக்தியடைய உகந்த இடம்
எனத் தீர்மானித்தார்.
உரிய காலத்திற்குக் காத்திருந்தார்.
ஆழ்ந்து உணர்ந்து
சமாதிக்கான
நாளும் குறித்தார்.
அந்நாள் வந்தது.
ஊர் திரண்டிருந்தது. அந்தணர்கள் சூழ்ந்திருந்தனர்.
பிரம்மேந்திரரின் தவயோக அழைப்பு
மைசூர் புதுக்கோட்டை தஞ்சை மன்னர்களுக்குச் சென்றிருந்தது.
அம்மூவேந்தர்களும் கவலையோடு அருகிருந்தனர்.
அது
ஜேஷ்ட சுத்த
தசமி நாள்.
தொட்டனைத்தூறும் மணற்கேணி போல்
பறிக்க பறிக்க அருள் பொங்கும் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து
சுத்தம் செய்து
சாஸ்திர விதிப்படி அமைத்த குழி
தயாராயிருந்தது.
பிரம்மேந்திரர்
மெல்லக் குனிந்தபடி
நடந்து வந்தார்.
அவர்
வாய்ப் பேச்சை
செவிமடுத்துக்
கேட்டவர் எவருமில்லை.
பேச என்ன இருக்கு !?
குனிந்தபடி
வந்தவர்
குறிப்பேதும் காட்டவில்லை.
ஓரிரு நாள் முன்னர்
ஜீவசமாதிக்கு
நாள் குறித்த போது அருகிலிருந்த அந்தணர்களிடம்,
"காசியிலிருந்து
ஒரு பிராமணர் பாணலிங்கம்
கொண்டு வருவார்.
அதற்குள்
விதை போடாத
வில்வமர செடி ஒன்று துளிர்த்து வெளிவந்திருக்கும்.
அவ்விடமே
நான் சமாதி கொள்ளும் ஞானபீடம்.
அதனருகே
12 அடி கீழ்ப்புறம்
பாணலிங்கத்தை
வைத்து
பிரதிஷ்டை
செய்ய வேண்டும்"
என்று
ஆணையாக
உணர்த்தி இருந்தார்.
ஒரு ஞானி
ஜீவசமாதி அடைவதைக் கண்ணுறுவது புண்ணியங்களில் மேலானது.
எனவே கூட்டம் நிரம்பியிருந்தது.
அதோ....
மைசூர் மன்னர்.
புதுக்கோட்டை தொண்டமான்.
இதோ... தஞ்சை அரசர். ஆயிரமாயிரம் அந்தணர் பல்லாயிரம் பக்தர்கள்.
நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.
குனிந்து வந்தவர்
தலை தூக்கி
சுற்றி ஒருமுறை
பார்த்தார்.
லேசான
புன்னகை பூத்தது.
அக்கணத்தில்
அந்த
ஞான குழிக்குள் இறங்கினார்
நம் ஞானி.
தலைக்கு மேலே
இருகரம் கூப்பி
கூட்டம்
கும்பிட்டது.
பக்தர்களின்
கண்களில் பரவசம். கண்ணீர்....
குழிக்குள் இறங்கிய பிரம்மேந்திரர்
அடுத்த நிகழ்வுக்கு சமிக்ஞை செய்தார்.
சாஸ்திர சம்பிரதாயம் தொடர
அக்கணமே
உலகத் தொடர்பினை அறுத்துக் கொண்டார் அருளாளர்.
அமைதி.
அப்படி
ஓர் அலாதி அமைதி.
தந்தை தூக்கி
அவர் தலையில்
அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சின்னஞ் சிறுவன் ஒருவன்
அமைதியைக் குலைத்தான்.
பிரம்மேந்திரரைச்
சூழ்ந்திருந்த பிராமணர்களைப்
பார்த்துக் கத்தினான்.
"அந்த தாத்தாவை
என்ன பண்றீங்க ?
அவர்
நல்ல தாத்தா...."
அது சமயமெல்லாம்
200 ஆண்டு கால
அவதூதர்
உருவிலிருந்த
இறைதூதர்
இறையோடு இறையாக இரண்டறக் கலந்திருந்தார்.
சிறுவனின் குரல் அவருக்குக்
கண்டிப்பாகக் கேட்டிருக்கும்.
அச்சிறுவன்
மதுரைத் திருவிழாவிற்கு பிரம்மேந்திரர்
அழைத்துச் சென்ற
குட்டித் தோழனாய் இருக்கும் !
பிரம்மேந்திரர் சொல்லியிருந்த படியே
ஒன்பதாம் நாள்
காசி பிராமணர் வந்தார். பானலிங்கம் தந்தார்.
உரிய நாளில் வெகுவிமர்சையாக பிரதிஷ்டை ஆனார்
காசி விஸ்வநாதர்.
பிரம்மேந்திரரின் அணுக்கத் தொண்டர் புதுக்கோட்டை
தொண்டமான்
அங்கு
கோயில் கட்டினார்.
பொதுவாக
ஜீவசமாதி அடைந்த இடத்திலேயே
கோயில் அமைப்பது வழக்கம்.
ஆனால்
நெரூரில்
சதாசிவ பிரம்மேந்திரர் வழிகாட்டியபடி
12 அடி தள்ளியே
கோயில் அமைந்துள்ளது.
பிரம்மேந்திரர்
ஜீவசமாதி வெட்டவெளியில்
வில்வ மரத்தடியில் பிரமாண்டமாய் பிரகாசமாய்
தவச்சூழலில்
இன்றும்
அருள்பாலித்துக் கொண்டிருக்கிறது.
அன்றாட பூஜைகள் தடைபடாமல் இருக்க புதுக்கோட்டை சமஸ்தானத்தில்
இருந்த இரண்டு கிராமங்களை
மானியமாக வழங்கினார் தொண்டமான்.
இன்றும்
நெரூர்
சதாசிவ பிரம்மேந்திரர் ஆலயப் பராமரிப்பு செய்வது
புதுக்கோட்டை மன்னர் குடும்பமே.
பிரம்மேந்திரர் புதுக்கோட்டை மன்னருக்கு
எழுத்தறிவித்து
மந்திரம் அருளிய மணல்
ஒரு பேழையில்
ராஜ மரியாதையோடு புதுக்கோட்டை அரண்மனையில் பூசிக்கப்பட்டு வருகிறது.
அருகிருக்கும்
சன்னதிக்கு அருகில் பிரம்மேந்திரரின்
அருள் நிறை சிலை வழிபாட்டுக்கு
இருக்கிறது.
ஆம்....
புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோயிலில் வழிபாட்டுக்குக் காத்திருக்கிறது.
கடுந்துறவு
நுண்ணறிவு
அருந்தவம்
மகாசமாதி
இவையே
பிரம்மேந்திரர்.
விஷய ஞானமுள்ள ஆன்மீக உலகே
ஆன்மீக யோகியை
நாடி ஓடிவருதல்
பாடித் தவமிருந்து
பாக்கியம் பெறுதல் சிலருக்கே
தெரிந்திருக்கும்
ஞான ரகசியம்.
நெரூரில்
ஜீவசமாதி அடைந்த பிரம்மேந்திரர் மானா மதுரையிலும்
கராச்சியிலும்
சித்தி அடைந்ததாக
திவ்விய சரித்திரம் நிறைவு கொள்ளும்.
ஸ்தூல உடலை
நெரூரிலும்
சூட்சம சரீரத்தை மானா மதுரையிலும்
காரண தேகத்தைக் கராச்சியிலும்
சித்தியடைய வைத்ததாக பிரமிப்பூட்டும்.
நெரூரில்
தஞ்சை புதுக்கோட்டை மைசூர் மன்னர்களும் மானாமதுரையில்
ஒரு சாஸ்திரியும் கராச்சியில்
ஒரு முஸ்லிம் அன்பரும் சித்தியடைவதைக் காணும் பாக்கியம் வேண்டியிருந்ததால் பிரமேந்திரர்
முத்தேக சித்தியை வெளிப்படுத்தியதாக
வரலாறு விரியும்.
இத்தலங்களில்
அருளாற்றல் நிறைந்த
நெரூர்
ஓர் அற்புத
ஆன்மீக பூமி.
பிரம்மேந்திரர்
விரும்பிச் சித்தியடைந்த சித்தர் பூமி.
சிருங்கேரி
சாரதா பீடத்திற்கும்
நெரூர்
சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவசமாதிக்கும்
ஓர் ஆத்மார்த்த
தொடர்பு உண்டு.
அது....
(தொடரும்)
Leave a Comment