அற்புத சித்தர்


- "மாரி மைந்தன்" சிவராமன்

சதாசிவ பிரம்மேந்திரர் திவ்விய சரித்திரம்

 

பிரம்மேந்திரர் 
நிகழ்த்திய 
அற்புதங்கள் திட்டமிட்டவை அல்ல.

சித்தாடல்களை 
உலகுக்கு காட்டும் 
வீண் விளம்பரங்கள் அல்ல.

உடல் 
உணர்வு இன்றி 
வெட்கம், துக்கம் 
மகிழ்வு ஏதுமின்றி 
ஏகாந்த நிலையில் இருந்து வந்தவர் 
சதாசிவ பிரம்மேந்திரர்.

அவர் பாட்டுக்கு 
அவர் இருந்தார். 
அது தானே 
சித்தர் போக்கு.

உடல் உணர்வு 
அற்ற நிலை என்பது பிரம்மேந்திரர் போன்ற ஞானிகளுக்கே
இயல்பாய் 
இருக்கக் கூடியது.


ஒருமுறை.... 
கொடுமுடி 
காவிரிக் கரையில் 
சதாசிவ பிரம்மேந்திரர் சமாதி நிலையில் அமர்ந்திருந்தார்.

பெரும் வெள்ளம் திடுமென வந்தது.

காவிரி வடிந்தபோது அவரைக் காணவில்லை.

காலம் நகர்ந்தது.

பின்னொரு நாள் 
ஆற்று மணலுக்காக
மேடு ஒன்றை 
வெட்டினர் 
கூலியாட்கள்.

ஓரிடத்தில் 
மண்வெட்டி 
தரை இறங்காது 
ஏதோ தட்டுப்பட...
திகைத்து எடுத்துப் பார்த்தபோது மண்வெட்டியில் 
இரத்தம் சிதறி இருந்தது.

பின் மெதுவாக 
மண் அகற்ற
உள்ளே உட்கார்ந்த நிலையில் 
நிர்வாண சாமியார்.

ஆம்....
நம் 
சதாசிவ பிரம்மேந்திரர்.

கண்விழித்த பிரம்மேந்திரர் 
ஏதும் நடக்காதது போல் இத்தனை காலம் மண்ணிலிருந்ததை உணராதவராய்
மெல்ல எழுந்தார்.

இரத்தம் வழிவது கூட தெரியாதவராய் 
தன் பயணம் 
தொடர்ந்தார்.

அதிர்ச்சியில் இருந்த அனைவரும் 
அவர் திசை 
பணிந்தார்கள்.

பிரம்மேந்திரரின் அருளாற்றல் 
அவர்களைத் 
தொழச் செய்தது. தொடர்ந்து
புகழ் பாட வைத்தது.

இன்னொரு சம்பவம்.

உடல் உணர்ச்சியற்ற 
நிறை ஞானியின் 
உன்னத அற்புதம் சொல்லும் நிகழ்வு அது.

ஒருமுறை 
ஆண் பெண் பேதம் 
ஏதுமற்ற 
பிரம்மேந்திரர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

திருச்சி பக்கம் 
ஓர் அந்தப்புரம்.
அதுவும் 
ஓர் இஸ்லாமிய 
சிற்றரசரின் அந்தப்புரம்.

பிரம்மேந்திரர் 
எப்போதும் போல் நிர்வாண நிலையில் திகம்பரராய்
சென்று
கொண்டிருந்தார். 

அந்தப்புரத்திலிருந்த கோஷா பெண்களின் கூக்குரல் 
அரசவையில் இருந்த மன்னன் செவிகளை அறைந்தது.

பதறியபடி ஓடி வந்த மன்னன் 
நிர்வாண 
சாமியாரைப்பார்த்து
கோபம் கொப்பளிக்க
கொடு வாளினை எடுத்தான்.

ஒரு பித்தனைப் போல் நடை போட்டுக் கொண்டிருந்த பிரம்மேந்திரரை
நெருங்கினான்.

அவர் பாட்டுக்கு ஏகாந்தமாய் சென்றுகொண்டிருந்தார். அரசனின் கோபம் 
மேலும் அதிகரித்தது.

அனிச்சையாய் அவசரமாய்
வீசினான் 
கூர்வாளினை.

அந்தோ....! தோள்பட்டையில் 
விழுந்த வீச்சு கையொன்றைத் தகர்த்தது தரையில் வீசி எறிந்தது.

இரத்தம் 
கொப்பளித்து 
சுற்றுச் சூழலைச் 
சிவப்பாக்கியது.

இத்தனை 
களேபரம் நடந்தும் 
எதுவும் 
நடக்காதது போல் பிரம்மேந்திரர் 
நடந்து கொண்டிருந்தார்.

"என்னடா இது சோதனை!" மன்னன் திகைத்தான்.

சிந்தித்தான்.
பயந்தான்.

"இவர் வெறும் 
சாமியார் இல்லை.

மகத்துவமிக்கவர். மாமனிதர்."

மதங்களைத் தாண்டி மன்னன் மனம் 
எச்சரித்தது.

சித்தன் போக்கில் இலக்கற்ற பாங்கில்
சென்று கொண்டிருந்த பிரம்மேந்திரர் முன் 
ஓடி நின்றான். மேற்கொண்டு 
செல்வதைத் தடுத்தான்.

அப்போது தான் 
சுற்றும் முற்றும் பார்த்த திகம்பரர் 
நடந்ததை யூகித்தார்.

"ஐயோ..... 
மன்னியுங்கள் சுவாமி "
தரையில்
விழுந்துகிடந்த 
ஒடிந்த கரத்தை எடுத்து பிரம்மேந்தரரிடம் ஒப்படைத்தான்.

பதட்டமும் பரப்பும் நடுநடுங்க வைக்க
தவித்தபடி 
நின்றிருந்தான். 

வெட்டிய கையை 
வாங்கிய 
பிரமேந்திரர் தன் தோள்பட்டையின் மீது வைத்தார். ஒட்டிக்கொண்டது 
அக்கை.

பீறிட்ட இரத்தம் 
ஒரு துளி கூட 
இல்லாமல் 
மறைந்து போனது. 

சில நொடிகள் 
சிறிது நடந்தவர் அனைவரும் 
பார்த்திருக்க
காணாமல் மாயமாய்
மறைந்து போனார்.

முஸ்லிம் மன்னன் மகானின் 
தெய்வீகம் புரிந்து 
நீண்ட நேரம் 
தொழுதபடி இருந்தான்.

அவனைத் தொடர்ந்து அரண்மனையும் அந்தப்புரமும் பிரம்மேந்திரரின் 
புகழ் பாடின பலகாலம்.


அடுத்து...
பிரம்மேந்திரரின் வாழ்க்கையைத் 
திசை திருப்பிய 
சம்பவம் ஒன்று.

எங்கோ 
ஒரு திறந்தவெளியில் பிரம்மேந்திரர் படுத்திருந்தார்.

தலைக்கு ஏதுவாக 
மண் குவித்து தலைசாய்ந்து
இருந்தார்.

அப்போது 
அவ்வழி வந்த 
கிராம மக்கள் 
"முற்றும் 
துறந்தவருக்குத் தலையணைப் பாரு....!," கேலி செய்தபடி சென்றுவிட்டனர். 

"என்னடா....
வம்பாப் போச்சு" 
என நினைத்தாரோ 
என்னவோ 
மறுநாள் 
மணல் குவிக்காமல்
தரை சாய்ந்திருந்தார்.

அப்போதும்
ஒரு விமர்சனம் 
வந்தது.

"நாம் 
நேற்று சொன்னதை கேட்டு
சாமிக்கு கோபம் வந்துவிட்டது பாரு..."

வேத சித்தாந்த 
யோக ஞானிக்கு 
அதிர்ச்சி.

குருகுல 
குருவாயிருந்த 
ஸ்ரீதர வெங்கடேசரிடம் விளக்கம் கேட்டார் பிரம்மேந்திரர்.

"அகந்தையை விடு" அழுத்தமாய்ச் 
சொன்னார் குருநாதர்.

"பிறர் சொல்லுக்குச்
செவி கொடுக்காதே !கோபம் தவிர்."

இது 
பிரம்மேந்திரருக்குக்
கிடைத்த 
உபதேச சொற்கள்.

அதன் பின் 
அவர் வாழ்வே
முற்றிலுமாய் 
குறையொன்றும் இல்லாமல் 
இறை ஒற்றியே 
இருந்தது.

அற்புதங்கள் 
அதி அற்புதமாய் தொடர்ந்தன.

இப்படித்தான் 
ஒருமுறை 
பிரம்மேந்திரர் புதுக்கோட்டைப் பக்கம் ஏதோ ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தார்.

நேரம் 
நள்ளிரவு.

வழியில் 
ஒரு நெற்குவியல். அருகில் 
வைக்கோல் போர்.

என்ன நினைத்தாரோ அதன் அருகில் 
சென்றார்.

வைக்கோல் போரின் இடையே உட்கார்ந்து நிஷ்டையில் ஆழ்ந்தார்.

அடுத்தடுத்து 
வைக்கோல் போர் ஒன்றன்மீது ஒன்றாய் சுமையேற 
அடியிலே ஆட்பட்டார் அருளாளர்.

பிறகு 
பல மாதங்கள் கழித்து வைக்கோல் போர் 
வேறு இடம் 
கொண்டு செல்ல 
எடுக்கப்பட்டபோது உடையின்றி 
உணர்வின்றி உட்கார்ந்திருந்த பிரம்மேந்திரரைப்
பார்த்தவர்கள் பிரமித்தார்கள்.

எத்தனை காலம் 
இப்படி 
ஊண், உறக்கம்,உணர்வு ஏதுமின்றி தவத்தில் இருந்தாரோ !

அருகில் 
இருந்தோரில் சிலர் 
'திருடன்'
என நினைத்து 
நெருங்கி வந்து 
அடித்து தாக்க 
கைகளை ஓங்கினர்.

ஓங்கிய கைகள் 
ஓங்கிய படியே 
அப்படியே நின்றனர்
அடிக்க வந்த கொழுப்பர்கள். 

கீழிறக்க 
முடியவில்லை. பிரமேந்திரரும்
அப்படியே நின்றுவிட்டார்.

நிலக்கிழார் 
விரைந்து வந்து 
தன் ஆட்கள் 
கல்தூண் போல் 
நிற்பது கண்டு 
அருகிலே 
ஓர் அவதூதர் 
நிற்பது கண்டு 
நடந்ததைப் புரிந்தார்.

பிரம்மேந்திரரின் கால்களில் விழுந்தார். மன்னிக்க வேண்டினார்.

நிர்வாண 
பிரம்மேந்திரர் 
முகக் குறிப்பு 
ஏதும் காட்டாமல் 
அவ்விடம் அகன்றார்.

அவர் 
விலக விலக காவலர்களின் 
கரங்கள் 
அதிசயம் போல் 
கீழிறங்கின.
செயல்பட்டன.

காவலர்களும் மற்றவர்களும் பிரம்மேந்திரர் 
சென்ற 
திசை நோக்கி 
தரை பணிந்து வணங்கினர்.


பின்னொரு முறை...

அரசாங்க 
முகாம் ஒன்று.

அதிகாரிகள் முன்னிலையில் 
விறகு சேகரிக்கும்
வேலை.

கூலிகள் 
தலைகளில் 
கட்டுக்கட்டாக 
விறகுக் கட்டுகளை வைத்து 
வேறிடம் மாற்றிக் கொண்டிருந்தார்கள்.

அங்கு யதேச்சையாக வந்த பிரம்மேந்திரர் தலையிலும் 
விறகுக் கட்டு 
சுமையை 
ஏற்றி விட்டார் 
ஓர் அதிகாரி.

பிரம்மேந்திரர் 
எச்சலனமும் இன்றி 
தாங்க முடியா 
அச்சுமையைச்
சுமந்து சென்று 
பிறர் போட்ட இடத்தில்
தானும் போட்டார்.

உடனே 
அந்த 
விறகுக் குவியல் தீப்பிடித்தது.

பயந்து போயினர் 
பார்த்திருந்தவர்கள்.

ஓடிவந்து அதிகாரிகள் 'நடமாடும் தெய்வம்'
என உணர்ந்து 
சதாசிவ பிரம்மேந்திரரை  வணங்கித் தொழுதனர்.

அது போதும் 
முகபாவம் 
மாற்றமின்றி
போய்க் கொண்டிருந்தார் அந்த மகான்.

பித்தர் போலிருந்தும் பிரம்மேந்திரர் குழந்தைகளுக்குப் பிரியமானவர்.

பரிவு காட்டுவார். அவர்களை 
மகிழ்விப்பார்.
உய்விப்பார்.

விளையாடும் இடத்தில் மரங்களிலிருந்து கனிகளைத் தானாக
விழச் செய்து அவர்களுக்குக் கொடுப்பார்.

கரும்பு ஆலையில் பொங்கும் 
கரும்புச் சாறை மாயமந்திரமாய்
சிறுவர்கள் 
கைகளிலேந்திக்
குடிக்கச் செய்வார்.

ஒரு முறை 
மதுரையில் 
திருவிழா. 

அது மகான் 
கருவூர் பகுதிகளில் அலைந்து திரிந்து கொண்டிருந்த காலம்.

குழந்தைகள் திருவிழாவைக் 
கண்டு களிக்க 
வேண்டும் என்று ஆசைப்பட்டனர்.

பிரம்மேந்திரரிடம்
தம் ஆசையைச் சொல்லினர்.

குழந்தைகளை 
முதுகிலும் 
தோள்களிலும் 
ஏறச் சொன்னார்.

இறுக அணைத்துக் கொள்ளச் சொன்னார். இரு கண்களையும் 
மூடிக் கொள்ளச் சொன்னார்.

அடுத்தகணம் 
அனைவரும் 
மதுரைத் திருவிழாவில் இருந்தனர்.

கள்ளழகர் திருவிழா களைகட்டி இருந்தது.

அதை விட 
குழந்தைகளின் 
முகங்கள் வியப்பிலும் விளையாட்டிலும் ஜொலித்துக்
கொண்டிருந்தன.

திருவிழா கொண்டாட்டத்தோடு கோயிலுக்கும்
அழைத்துச் சென்றார்.

வயிறு நிறைய 
உணவு படைத்து கைநிறைய பட்சணங்களையும் வாங்கித் தந்தார்.

பின்னர் -
வாண்டுகளைக் 
கண் மூடச் சொல்லி கண்ணிமைக்கும் நேரத்தில் 
கருவூருக்கு 
அழைத்துவந்து திருமாநிலையூரில் இறக்கி விட்டு விட்டு விடைபெற்றார்.

பெற்றோருக்கும் உற்றோருக்கும்
செய்தி தெரியவர அவர்களுக்குப்
பெரும் வியப்பு.

கூடவே
அத்தனை பேருக்கும் சுவாமி மீது 
ஏக கோபம்.

ஏன் தெரியுமா ?

குழந்தைகளைத் திருவிழாவிற்கு அழைத்துச் 
சென்றதைப் போல் தங்களை 
அழைத்துச் செல்லவில்லை 
என்பதே 
அவர்களின் 
செல்லக் கோபம்.

படிப்பறிவில்லாத 
பாமரன் ஒருவன் பிரம்மேந்திரர் 
பாதம் பற்றி
அவர் பின்னே 
வந்து கொண்டிருந்தான்.

சுவாமியும் ஏதும் சொல்லவில்லை.

அப்படியே ஒட்டிக்கொண்டான்.

ஒருநாள் 
தன் ஆசையைச் சொன்னான் தயங்கியபடியே.

" ஸ்ரீரங்கநாதரைத் 
தரிசிக்க ஆசை"

'அவ்வளவுதானே !'
 என்கிற மாதிரி 
இருந்தது 
மகானின் நோக்கு.

கண்களை 
மூடச் சொன்னார் சைகையாலே.!

மூடினான்
பாமர பக்தன்.

திறந்து போது திருவரங்கத்தில் இருந்தான்.
கூடவே 
பிரமேந்திரர். 

இறைவனை 
ஆசை தீரத்
தொழுது 
மகிழ்ந்தவன் 
கூட்டத்தில் 
குருநாதரைத் தொலைத்துவிட்டான்.

"அரங்கனை நம்பி அருளாளரைக் கைவிட்டுவிட்டேனே ?" கதறி அழுதான்.

அதன்பின் 
தன் குருவைத் தேடி 
ஊர் ஊராக 
அலைந்தான்.

குரு செல்லும் இடமெல்லாம் 
தேடத் தொடங்கினான்.

காடு மேடு 
கழனி கரை 
ஓரம் சாரமெங்கும் தேடினான்.

தேடினான் 
தேடினான் 
விரக்தியின் 
விளிம்பில் 
ஓடியோடித் 
தேடினான்.

ஒருநாள் 
காவிரிக் கரையோரமாய்
பிரம்மேந்திரரைக்
கண்டான்.

அடுத்த அடி 
வைக்க முடியாதபடி 
அவர் காலடி விழுந்தான். 

அவன் பற்றியதில்
இருந்த பரவசம் பிரம்மேந்திரருக்குப் புரிந்தது.

அவன் வெறும் வேலையாள் அல்ல. வேதம் யோகம் 
கிடைக்க வேண்டிய 
சீடன் 
என உணர்ந்தார்.

சீடனாக ஏற்ற பின்னே மந்திர உபதேசம் 
செய்தார்.

பள்ளி சென்று 
படித்திராத 
கல்வி வாசனை கடுகளவும் இல்லாத 
அந்த பாமரர் 
பண்டிதரானார்.

மகா பண்டிதராகி
புராண புலமையில் இணையற்றவராகி உலகையே 
வியக்கவைத்தார் 
அந்த சீடர்.

பலபடி உயர்ந்தும் பிரம்மேந்திரர் 
சீரடி தவிர 
வேறடி ஓதாது பிரம்மேந்திரர் 
தன்னை 
திருவரங்கம் 
அழைத்துச் சென்றது முதல் 
குரு அருளிய 
அற்புதங்கள் ஒவ்வொன்றையும் அற்புதமாய் சொல்வதை அன்றாடக் கடமையாகக் கொண்டார்.

பின்னாளில் 
'ஆகாச புராண 
இராமலிங்க சாஸ்திரிகள்' என்ற பெயரில் போற்றப்பட்டவர் 
அந்த பாமர சீடரே.
இன்று கூட 
அவரது சந்ததியார் 
பிரம்மேந்திரர் சித்தியடைந்த
நெரூரில் 
வசித்து வருவது
கண்கூடு.



Leave a Comment