சதாசிவ பிரம்மேந்திரர் திவ்விய சரித்திரம்


- "மாரி மைந்தன்" சிவராமன்

சதாசிவ பிரம்மேந்திரருக்கு
தஞ்சை அரசரும்
புதுக்கோட்டை மன்னரும்
இறையருளால் 
வாய்க்கப் பெற்ற
ஆன்மீகத் தொண்டர்கள்.

புதுக்கோட்டை 
மகாராஜா 
விஜயரகுநாத தொண்டமான் 
ஒரு விவேகி. 
ஆழக் கற்றவர்.
ஆளவும் தெரிந்தவர்.

சாஸ்திரம் அறிந்தவர். சாதுக்களிடம் 
பிரியம் கொண்டவர்.

அரசாட்சி எனில் தெரிந்தும் தெரியாமலும் பாவங்கள் பல சூழும்.

அதை 
சாதுக்கள் மூலம் 
தீர்ப்பது 
சாலச்சிறந்தது என நம்புபவர்
தொண்டமான். 

மந்திரிமார்கள் 
சதாசிவ 
பிரம்மேந்திரரை
அரண்மனைக்கு 
அழைத்து வந்து ஆலோசனை 
பெறலாம் என 
ஆலோசனை தந்தனர்.

மைசூர் சமஸ்தானத்தை அலங்கரித்தவர் புதுக்கோட்டையையும்
புனிதப் படுத்துவார் 
என்ற நம்பிக்கையுடன் பிரம்மேந்திரரை அழைத்துவர 
பல்லக்குடன் 
குதிரை ஏறினார் விஜயரகுநாத தொண்டமான்.

கண்ணும் கருத்துமாய் அலைந்தும்
கண்ணுக்குப் புலப்படாத கருணாமூர்த்தி திருவரங்குளம் காட்டில் முள் மரங்கள் 
மத்தியில் 
அமர்ந்திருந்தார்.

கண்ட மன்னர் 
மனம் மகிழ்ந்தார்,
முள்ளென்றும் பாராது நெடுஞ்சாண் கிடையாக தரை பதிந்தார்.

பேசா சுவாமி கவனிக்கவும் இல்லை.
அரசன் அழைத்தும்
செவி சாய்க்கவும் 
இல்லை.

விடாக் கண்டரான புதுக்கோட்டை மகாராஜா கண்கண்ட பிறகு விடுவாரா 
சித்த சூரியனை.

அருகிலேயே 
குடிசை போட்டு 
முழுநேர சேவையிலே மூழ்கிவிட்டார்.

ஓடின நாட்கள்.

மகானிடம் 
குறிப்பு ஏதுமில்லை. மன்னனிடம் 
அவசரம் சிறிதுமில்லை.
 
ஒருநாள் 
துணிந்து பணிந்து தனக்கு 
தீட்சை வேண்டுமென்று குருவிடம் 
மௌனமாய் 
சொன்னார் சீடர்.

மெளன சாமியாருக்கு சம்மதம் போலும்.

மணலிலே
மந்திரத்தை எழுதிக் காண்பித்தார். 
மெளன மொழியிலேயே
கற்பித்தார். 

சிக்கெனப்
பிடித்துக்கொண்டு
தீட்சை பெற்ற சீடர்
தன் 
அங்கவஸ்திரத்தில்
மகான் விரல் பட்ட 
மந்திரம் பதிக்கப்பட்ட அம்மண்ணைத்
தொட்டு வணங்கி மெல்லிய வருடலில் அலுங்காமல் 
குலுங்காமல் எடுத்து நிரப்பிக் கொண்டார்.

அதை அப்படியே அரண்மனைக்கு 
எடுத்துச் சென்று 
ஒரு தங்கப் பேழையில் வைத்து 
அன்றாட பூஜையின் பிரதான 
அங்கமாக்கினார்.

அந்த பூஜை 
இன்றும் 
புதுக்கோட்டை அரண்மனையில் பிரசித்தம்.
அது ஓர் ஆன்மீக 
அருள் சித்தம். 

காடு திரும்பிய மன்னர் சேவை தொடர்ந்தார்.
நாட்கள் நகர்ந்தன. 

அவ்வப்போது சந்தேகங்களைக் 
கேட்ட மன்னருக்கு
அனைத்தும் விளங்கின
அருளாளர் தயவால்.

குரு விட்ட 
உத்தரவினால் 
சொல் விட்ட
பிரம்மேந்திரர் 
ஒருபோதும் மன்னரிடம்
பேசவே இல்லை.

மன்னர் 
மனம் தளரவில்லை. காத்திருந்தார்.

ஒருநாள் 
பிரம்மேந்திரர் 
அவ்விடம் விட்டு 
வேறிடம் 
செல்ல நினைத்தார்.

சீடரை அழைத்தார். 
சீடரின் கண்களில் கடகடவென 
கண்ணீர்.

மௌன மொழியில் 
சேதி சொன்னார்...

"உத்தமர்
கோயில் செல்.
கோபால கிருஷ்ண சாஸ்திரிகள் 
அங்கிருப்பார்.
அவர் சொல்வார் 
சாஸ்திர 
சந்தேகங்களுக்குச் சாஸ்வதமான 
பதில்களை"

பொற்பாதங்களைப் பற்றிய மன்னர் 
தலை நிமிர்த்தி 
மகானின் தலை
பார்த்துச் சொன்னார்..

"சுவாமி...
எப்படியாகிலும் 
தாங்கள் 
என் நாட்டில் 
சில காலம் தங்கி ஆசீர்வதிப்பீர்கள் 
என எதிர்பார்த்தேன்.

காற்றும் 
நதியும் போல் 
நிற்காமல் போய்க்கொண்டே இருக்கும் 
ஞானவான் 
தாங்கள் என 
உணர்ந்தேன்.

தங்கள் 
நிறைவு நாளில் 
நான் உடனிருக்கும் 
அருள் தாருங்கள்
அது போதும்."

பிரம்மேந்திரர் 
எதுவும் 
சொல்லவில்லை. தலையாட்டல் கூட
இல்லை.

மெளன மொழியிலும்
எதையும் உணர்த்தவில்லை. 

சில நொடிகள் 
சிறிது நடந்தார்.
பின் மாயமானார்.

மகான் நடந்து 
மறைந்த திசையில் மன்னர் விழுந்தார்.
தொழுதார்.
எழ மனமில்லாமல் எப்படியோ எழுந்தார்.

கானகத்தில்
இருந்தபோது 
ஒருமுறை 
பிரமேந்திரர்
தனக்கு 
யாரோ தந்து சென்ற
வெண்ணையை
அரசனையும் 
அரசியையும் 
உண்ணச் செய்தார். 

அதன்மூலம் 
பேரருளாளர் 
அருளியது மகப்பேறு. 

மகனுக்கு
மன்னனிட்ட
செல்லப்பெயர் நவநீதகிருஷ்ணன்.

நவநீதம் என்றால் வெண்ணெய்.


இன்னொரு 
இனிய சம்பவம்
பிரம்மேந்திரரின் 
பெருமை சொல்லும்.

பிரம்மேந்திரர் 
குருகுல பாடசாலையில் பயின்ற போது 
அமைந்த தோழர்கள் போதேந்திரர், 
அய்யாவாள். 

ஒருநாள் 
இருவர் நினைப்பும் பிரம்மேந்திரருக்கு
வந்தது.

அஃது எப்படி சாத்தியம் ?

உணர்வற்ற ஞானிக்கு பற்றற்ற மகானுக்கு தோழமை உணர்வு ?

பயிலும் காலத்தில் அவர்களுக்குள் 
ஒரு சங்கல்பம்.

பின்னாளில் 
ஒருமுறை 
சந்திக்க வேண்டுமென்று.

இதுபோன்றே
தோழர் இருவருக்கும் சிந்தையில் எழுந்தது அந்த சத்தியம்.

பிரம்மேந்திரரின் திருப்பாதங்கள் கோவிந்தபுரம் 
நோக்கி நடந்தன .

அங்கேதான் 
போதேந்திரர் தங்கியிருந்தார்.

வாரம் தவறாமல் அங்குவந்து 
குருநாதராக விளங்கிய போதேந்திரரைத்
தரிசித்து அளாவுவது திருவிசைநல்லூர் வாழ் அய்யாவாளின் வழக்கம்.

கோவிந்தபுரம் வந்த பிரம்மேந்திரர் 
வழியில் 
காவிரிக் கரையில் நாணல் புதர் கண்டார்.

வந்த நோக்கம் நினைவில்லை.

நாணற் படுக்கையில் ஏகாந்தமாய் படுத்தார்.
சில நொடிகளில் தவத்தின் உச்சியில்
தவழ ஆரம்பித்தார்.

அவ்வழி வந்த
அய்யாவாள்
நாணற்புதரில்
மகான் ஒருவர் 
படுத்திருப்பதைப் பார்த்தார்.

'யாரோ 
ஒரு மகானுபாவர்' என மனது சொல்லியது.

அருகே வந்து 
பிரதட்சணம் செய்து தோத்திரம் பாடித் தொழுதார்.

மகான் எழவில்லை.
அவர்தான் எழ மாட்டாரே !

அவரது நிலை 
யாருக்கும் கிட்டாத 
உச்சநிலையாயிற்றே !!

பின் 
போதேந்திராவிடம் 
சென்ற அய்யாவாள் 
நாணற் புதர் நாயகன் பற்றி சிலாகித்தார்.

"திகம்பர 
மகானுபாவர்... 
நாணற் புதரில் 
ஒரு கூகை 
கிடக்கிறது.." என 
வியந்து சொன்னார். 

போதேந்திரர் 
அம்மகானை 
தரிசிக்க விரும்பி 
அய்யாவாளுடன் 
காவிரிக் கரை வந்து 
நாணற் புதர் தேடினார்.

ஆட்களை அழைத்து புதர்களை செடிகளை அப்புறப்படுத்தி 
மெழுகு தீபம் ஏற்றி சாம்பிராணி 
புகை எழுப்பி 
அந்த பகுதியையே ஆன்மீக பூமி ஆக்கினார்.

இத்தனை களேபரம் நடந்தும் சித்தர் பிரம்மேந்திரர் 
கண் விழிக்கவில்லை.

பேரொளி 
பரப்பிய வண்ணம் ஒடுங்கிப் படுத்திருந்தார்.

ராம நாம ஜெபம் 
பாடினர்
எழ வில்லை.

ராமபிரானே மயங்கும் இனிய கீர்த்தனைகள் பாடினர்....

ஊஹும்
கண் 
விழிக்கவில்லை.

ஆனால்
இரண்டாவது கீர்த்தனையில் 
அவர்கள் பாடிய 
சப்த பேதங்கள் 
பிரம்மேந்திரரை
மெதுவாக 
கண் விழிக்க
வைத்தன.

பாடல் தொனியின் தவறை உணர்த்தியவர் இருவரையும் 
வணங்கினார்.

அவர் 
சதாசிவமே 
என உணர்ந்த 
இருவரும் 
வணக்கம் செலுத்தினர்.

பேச்சும் மூச்சும் 
அறவே இல்லை.

அருகிருக்கும் ஆசிரமத்திற்கு போதேந்திரர்
அழைத்தார்.

பிரம்மேந்திரரிடம்
பதில் இல்லை.
ஏற்பும் இல்லை.
மறுப்பும் இல்லை.

சில கணங்கள் 
இப்படிச் சிதறின.

பின்
எச்சலனமுமின்றி 
சதாசிவ
பிரம்மேந்திரர் 
எழுந்தார். 
சிறிது நடந்தார்.
ஆகாய மார்க்கமாக
பறந்து மறைந்தார்.
 



Leave a Comment