நவநாத சித்தர்கள் பாகம் -2
- "மாரி மைந்தன்" சிவராமன்
நவநாத சித்தர்களில் ஆறாவது சித்தர்
மதங்க நாதர்.
'சங்கிலிச் சித்தர்'
என்ற பெயரும்
இவருக்கு உண்டு.
மதங்க நாதர்
அருளி
கிடைத்திருக்கிற
பாடல்கள் தொகுப்பில்
36 பாடல்கள்
தொகுப்பொன்றும்
16 பாக்கள் அடங்கிய
'ஞான சூத்திரமும்'
கும்மிப் பாட்டாய் கும்மியடிக்கின்றன.
திருமூலரைக்
குருவாகக்
கொண்டவர்
மதங்க நாதர்.
இறை
எழுத்துக்களான
அகாரம்
உகாரம்
மகாரம்
சிகாரம்
குறித்து
விளக்கி உள்ளது
மதங்க நாத சித்தரின் மங்காப் படைப்புகள்.
நவநாத சித்தர்களில் ஏழாவது
சித்தர் பிரான்
மச்சேந்திர நாதர்.
சிவபெருமானால் நாமகரணம்
சூடப் பெற்றார்.
சிவபிரான்
தாரக மந்திரத்தை உமாதேவிக்கு உபதேசித்துக் கொண்டிருந்ததைக்
கேட்ட -
கருவிலிருந்த
மீன்குஞ்சே
மனித உருவெடுத்துப் பிறந்ததாகப் புராணம்.
அந்த
மீன் குஞ்சே -
சிவபெருமானின் அருள் பார்வையால்
மனித உருக்கொண்ட அந்த மீன் குஞ்சே -
ஆதி சிவனால்
'மச்சேந்திரா..'
என்று
பெயர் சூட்டி அழைக்கப்பட்டவரே
மச்சேந்திர நாதர்.
கோரக்கரை
சாம்பல்
குப்பையிலிருந்து
எழுந்து வரச்செய்து சிறுவனாய் இருந்தவரை சித்தராக உருவாக்கிய சித்தர் பிரானே மச்சேந்திரநாதர்.
மலையாள தேசத்தில்
சில காலம் தங்கி
அத்தேசத்து
இளவரசியை
மணந்தவர்.
அரச வாழ்க்கை வாழ்ந்தவர்.
சீடர் கோரக்கரே
அவரைக்
மலையாள தேசத்திலிருந்தும்
கேரளத்து
இளவரசியிடமிருந்தும் மீட்டெடுத்து வந்தார்.
குருவை மிஞ்சிய
சீடராய்
கோரக்கரே
மச்சேந்திர நாதரின் மாயையைப் போக்கியது ஒரு தனி வரலாறு.
நொண்டிச் சிந்து
மச்சேந்திர நாதரின் பாடல்களில்
மிளிர்ந்திருக்கும்.
அதனால்
'நொண்டிச் சித்தர்'
என்ற பெயரும்
மச்சேந்திரருக்குப்
பெருமை சேர்க்கும்.
அழியாப் பரம்பொருளான இறைவனை
உணர்ந்து
ஞானம் அடையும் நிலையே
மோட்ச நிலை
என்பதை
மச்சேந்திரர் பாடல்கள் தெளிவாய்
உணர்த்தும்
சிறப்பு உடையன.
மச்சேந்திர நாதர்
அருளிய
சிவயோகத்தில் 'வாசியோகம்'
சித்தரின்
அனுபவ வெளிப்பாடாக
விலாவாரியாக உள்ளது.
வாசி யோகத்தின் மகத்துவத்தை
மானிடர்க்கு
உணர்த்த வல்ல
பெருமை கொண்டது
மச்சேந்திரரின் சிவயோகம்.
நவ நாதர்களில்
எட்டாவது சித்தர்
கஜேந்திர நாதர்.
எதையும்
விளையாட்டாக
எடுத்துக் கொள்ளும் மாண்பினர்
ஆதலின்
'விளையாட்டுச் சித்தர்'
என்றும்
பெயர் பெற்றவர்
கஜேந்திர நாதர்.
வாழ்க்கையே விளையாட்டு
என்பது
கஜேந்திர நாதரின் பாடல்களின் சாரம்.
'பிறப்பே
விளையாட்டு.
சிறுவர்கள்
'அம்மா அப்பா
விளையாட்டு '
விளையாடுவதைப் போல வாழ்க்கை
ஒரு தற்காலிக விளையாட்டு.'
எனத் துவங்கி
மரணம்
மரணத்திற்குப் பின்
என அனைத்தையும் விளையாட்டு என்கிறார் சித்தர் பிரான்.
'பிணமாயிருப்பதும் விளையாட்டே.
அதைக் கண்டடைவதும் விளையாட்டே.
அப்பிணத்தைச் சுட்டெரிப்பதும் விளையாட்டே.
பின்
செத்தவர் போக
வீடு திரும்பியோர்
குளித்து விட்டு
வாழ்க்கையைத் தொடர்வதும்
விளையாட்டு தான்.'
மொத்த ஞானமும் விளையாட்டு
என்பவர்
மெய்ஞானம்
காணாததும்
ஒரு விளையாட்டு
என்பார்
ஞான விளையாட்டாக.
'இந்த
மேதினியில் 'போதும்'
என்பது
விளையாட்டே'
என
ஞான உலகிற்கு விளையாட்டாய்
அழைத்துச் செல்கிறது விளையாட்டுச் சித்தரின் பாடல்கள்.
நவநாத சித்தர்களில் ஒன்பதாவது சித்தர்
கோரக்க நாதர்.
கோரக்க நாதரின்
புகழ் வரலாறு
பிரபஞ்சம் போற்றும்
சிறப்பு கொண்டது.
கோரக்கர்
வசிஷ்டருக்கும்
ஒரு
குறப்பெண்ணுக்கும் மகனாய்
பிறந்தவர்
என்பது
செவிவழிச் செய்தி.
நாகார்சுனர்
சாணாக்கிய முனிவர் இருவரும்
கோரக்க நாதரின்
பிரதான சீடர்கள்.
பிரம்மனின்
சிருஷ்டி ரகசியங்கள் பிரணவ உண்மை குண்டலினி யோகம் முதலியன குறித்து
பிரம்ம
ஞான சூத்திரத்தில் தெளிவாக்கியுள்ளார்
கோரக்க நாதர்.
கற்ப சூத்திரத்தில்
கற்ப மூலிகைகளை நற்கவிதைகள் மூலம் விளக்கி உள்ளார்
கோரக்கர் சித்தர்.
ஜெய நீரின்
பக்குவ நிலைகளை
10 பாக்களாக படைத்துள்ளார்.
கோரக்கரின்
'வகார சூத்திரம்'
அற்புத பொக்கிஷம்.
நந்தியம்பெருமான்
கோரக்க நாதருக்கு
உபதேசித்த
ரசாயன சூத்திரம்.
சுண்ணங்களான
பூநாகச் சுண்ணம்
துருசுச் சுண்ணம்
ரோமச் சுண்ணம் கடல்நுரைச் சுண்ணம் கரியுப்புக் கட்டு
திருவங்கச் சுண்ணம்
மற்றும்
காந்தச் சத்து
நவச்சாரக் கட்டு
நாகக் கட்டு
சவுக்கார எண்ணெய்
செந்தூரம்
முதலானவற்றைத் தயாரிக்கும் முறைகள் பக்குவ நிலைகள்
என
100 பாக்களில்
வகார சூத்திரமாய்
விரிந்திருக்கிறது
கோரக்க நாதரின்
ஞான மருத்துவம்.
நவநாத சித்தர்கள் வடநாட்டு சித்தர்கள்.
கயிலாயத்தில் வாழ்ந்தவர்கள்
என்பாரும் உண்டு.
வடநாட்டுச் சித்தர்கள் மக்களோடு மக்களாய் கலந்திருந்தார்கள். மக்களுக்காக வாழ்ந்தார்கள்.
ஆனால்
தென்னாட்டுச் சித்தர்கள் மக்களை விடுத்து
தனித்துத் தவமிருந்து மக்கள் நலன்
பேணினார்கள்
என்கிறது ஓர் ஆய்வு.
இது
மேலாய்வுக்கு உரியது.
உண்மையில் நவநாத சித்தர்களில் மச்சேந்திர நாதர் கோரக்க நாதர் காலாங்கி நாதர் ஆகியோரது வரலாற்றுச் சுவடுகள்
சதுரகிரி தலபுராணத்தில் காணக் கிடைக்கின்றன.
இம்மூன்று சித்தர்களும் சதுரகிரி மலையில் நெடுங்காலம்
தவமிருந்தவர்கள்.
இன்றும்
அருவாய்
உருவாய்
அருவுருவாய் சித்தர் மலையாம் சதுரகிரி மலையில் உலா வருபவர்கள்.
ஒப்பில்லா
ஞானம் பெற்ற
நவநாத சித்தர்கள்
பற்றி
நானிலத்தில்
நிலவும் தகவல்கள்- உலவும் செய்திகள் இவ்வளவே.
சித்தர்கள் குறித்து
ஞான ஆய்வு
செய்வோரும்
முக்காலம் உணர்ந்த ஞானியரும்
நவநாத சித்தர்கள்
பற்றி
இன்னும்
நிறையச்
சொல்ல வேண்டும்.
அதுவே
ஞானத் தேடல்.
(நவநாத சித்தர்கள் சரித்திரம் நிறைவுற்றது)
Leave a Comment