காலாங்கி நாதருக்குப் பிடித்த மலை


- "மாரி மைந்தன்" சிவராமன்

காலாங்கி நாதர் திவ்விய சரித்திரம் பாகம் -1


சித்தர் பரம்பரையில் முதல் சித்தரென சிவனைச் சொல்வர்.
அடுத்து திருமூலர்.
அதற்கடுத்து 
காலங்கி நாதர்.

திருமூலரின் 
சீடர்களில் முதன்மையானவர் காலங்கி சித்தர்.

சித்தர் உலகையே
வியக்க வைத்த
போகர் பிரான் 
காலாங்கி நாதரின் 
அத்யந்த சீடர்.

இப்படி
குருவும் சீடரும் 
காலாங்கி நாதருக்கு கிடைத்தது பேரருள்.

சித்த ஆற்றல்மிக்க காலாங்கி நாதர் 
குறித்த தகவல்கள் 
அதிகம் இல்லை.

அகத்தியரின் 
ஜனன சாசனத்திலும் போகரின் 
சப்த காண்டத்திலும்
காலாங்கி பற்றிய சுவைமிகு பதிவுகளைக் காணமுடிகிறது.

குரு 
திருமூலர் போலவே பல்லாண்டு வாழ்ந்த காலாங்கிநாதர்
சீனா, பாரதம் என அலைந்து அலைந்து 
இரு நாட்டு மக்களையும் மேம்படுத்தியவர்.


அன்றொருநாள்...

பாரத தேசத்தில் 
ஒரு பெரும் பிரளயம் நிகழ்ந்தது.

மழை...
மழை...
மழை...
நாடே வெள்ளக்காடாய்
காட்சியளித்தது.

பேய் மழை 
தொடர்ந்து பெய்து பூமியை நிரப்பியது.

நீர்மட்டம் உயர 
மக்கள் தவித்தனர். மாண்டனர் பலபேர்.

உயரே செல்வதே தப்பிக்க கிடைத்த
ஒரே வழி.
உன்னத வழி.

மலைமீது ஏறினர் மக்களில் சிலபேர்.

அதோ தெரிகிறதே...!

அந்த மலைமீது கிடுகிடுவென 
ஏறிக் கொண்டிருந்தார் ஒரு மனிதர்.

அருகில் சென்று பார்த்தால் 
அவர் 
சாதாரண மனிதர் அல்ல என்பது மட்டும் தெளிவாய் தெரிந்தது.

அவரின் 
பார்வையில் 
ஒளி இருந்தது.
தேகம் கூட ஒளி வீசிக்கொண்டிருந்தது.

அவர் யாராயிருக்கும்...!

மேலே
மலை மேலே 
அவரைப் போலவே பலரும் இருந்தனர்.

எல்லோருக்கும் 
ஓர் ஒற்றுமை.
அவர்கள் 
அத்தனை பேரும் சித்தரைப் போல 
ஞானியைப் போல பித்தரைப் போல ஒருமித்து இருந்தனர்.

புதிதாய் வந்தவரைப் பார்த்ததும் 
அவர்கள் மகிழ 
பார்த்தவர்களைப் பார்த்து 
வந்தவர் மகிழ அறிமுகப்படலம் ஆரவாரமாய் இருந்தது.

"நான் காலாங்கி"
 என்றார் வந்தவர். இருந்தவர் யாவரும் சமகால சித்தர்கள்.
தவஞானிகள். சித்துக்கள் பல 
அறிந்த வித்தகர்கள்.

அன்பு விரிந்தது.
நட்பு பூத்தது.
ஆனந்தம் அருகில் தாண்டவமாடியது.

தான் கற்றதையும் பெற்றதையும் 
பிற சித்தர்களுக்குக் கற்பித்தார் 
காலங்கி நாதர். 

பதிலுக்கு தாங்கள் கற்றதை 
காலங்கி நாதருக்குச்
சொல்லித் தந்தனர் மலைவாழ் சித்தர்கள்.

காயகல்ப முறைகளும்
ரசவாத வித்தைகளும் பிரதானமாக இருந்தன அவர்கள் குருகுலத்தில்,

இப்படிச் சிலகாலம் அமைந்ததால் காலாங்கிநாதர் பேரானந்தம் அடைந்தார். பெருமகிழ்வு கொண்டார்.

அந்த மலை 
வந்த சித்தருக்குப் பிடித்துப்போனது.
அங்கேயே தங்கிவிட முடிவு செய்தார்.

அவருக்குப் பிடித்த
அந்த மலை சதுரகிரி.
எவர்க்கும் பிடிக்கும் சதுரகிரி மலை.

அன்றும் இன்றும் 
என்றும் 
அருவாய் உருவாய் அருவுருவாய் 
எண்ணிலா கோடி
சித்தர் பெருமக்கள் அருள்பாலிக்கும் மலையே சதுரகிரி.

பதினெண் சித்தர்கள் பார்வையும் பாதங்களும்
பதிந்த இடமே சதுரகிரி. 

ஒருநாள்.

காலாங்கிநாதர் 
சதுரகிரி மலையில் 
ஒரு தடாகம் கண்டார்.

அருகில் 
ஒரு புலி.... 
கம்பீரம் பீறிட படுத்திருந்தது.

அந்தப் புலி
ஆன்மீகம் தவழும் சித்தரைக் கண்டு 
உறும வில்லை. பாயவில்லை. 
அமர்க்களமாய் பார்த்தபடி இருந்தது. 

காலாங்கி நாதருக்கா தெரியாது....?!

அது புலி அல்ல... 
ஓர் ஞானப் புலி.
புவி போற்றும் பேரொளி எனப் புரிந்தார்.

புலி வடிவத்தில் இருக்கும் 
சித்தர் அருகில் 
காலாங்கி வந்தார்.
காலடி தொழுதார்.

மக்கள் தொந்தரவு தவிர்க்க 
தவத் தன்மை
கெடாதிருக்க
இப்படி ஏதேனும் 
வடிவம் எடுப்பது சித்தர்கள் வழக்கம்.

புலிச் சித்தர் உருமாறினார். காட்சியளித்தார்.

நிறைய
உபதேசங்கள் செய்தார்.

காலாங்கி நாதருக்கு
சதுரகிரித் தாய் 
ஆதி மனோன்மணி அருள் இருப்பதாய் அகமகிழ்ந்து வாழ்த்தினார்.

மனம் நிறைந்து மறைந்தார்.

அதன்பின் 
காலாங்கி நாதர்
மகா சித்தர் ஆனார்.

இப்படித்தான் 
ஒரு நாள்...
ஓர் ஆமையைக்
கண்டார்.

அது ஆமை அல்ல... அதுவும் சித்தர் 
என அறிந்து 
தாழ் பணிந்தார்.

சித்தரின் கருணையையும் அருளையும் 
காலாங்கி பெற்றார்.

பிறிதொரு நாள் 
வராக வடிவில் 
வாராது வந்த மாமணியாய் 
வராக சித்தர்.

யாருமே 
யூகிக்க முடியாத அவரைக் கண்டுணர்ந்து வணங்கியதால் 
யாருமே பெற முடியாத ஞான உபதேசங்களைப் பெற்றார்.

யார் கண்களுக்கும் புலப்படாது 
புனிதர் கண்களுக்கு மட்டும் தென்படும் 
வராக சித்தர் 
காலாங்கி நாதருக்கு புலப்பட்டது 
குருவருள் திருவருள் அன்றி வேறென்ன !

இப்படி 
சிங்க சித்தர்
வாமன சித்தர்
பரசுராம சித்தர்
ராம சித்தர்
பலராம சித்தர்
கிருஷ்ண சித்தர் குதம்பைச் சித்தர் பாம்பாட்டிச் சித்தர் வேதாந்தச் சித்தர்
தவ சித்தர்
போகர் சித்தர்
ஞான சித்தர் 
கஞ்சிமுகிச் சித்தர் 
என வாழையடி வாழையென வந்த சித்தர் திருக்கூட்டத்தை சதுரகிரியில் கண்டார். ஞானக் கல்வி பெற்றார்.

பிற்பல வழிகளில் 
பற்பல பயின்றார்.

ஆதி சித்தரை,
நவநாத சித்தர்களை,
பதினெண் சித்தர்களைப் பார்த்து மகிழ்ந்தார்.

அவர்களுடன் 
கலந்து மகிழ்ந்தார்.

கற்றார். பெற்றார்.
கற்றதையும் பெற்றதையும் 
வழங்கி மகிழ்ந்தார்.

சதுரகிரி உச்சியில் 
சித்தனுபவ உச்சத்தில் உலவி வந்தார்.


( சரித்திரம் தொடரும்.)
 



Leave a Comment