சிதம்பரம் கோயிலின் ஆதிமூலர் திருமூலரே
- "மாரி மைந்தன்" சிவராமன்
திருமூலர் திவ்விய சரித்திரம் பாகம் - 4
கருவூரார் செய்த
தங்க விக்கிரகத்தில் சிக்கல் வந்ததும்
நடந்ததைச் சொல்லி கருவூராரைக்
கை காட்டினர் சிற்பிகள்.
காவலர்கள் ஓடிச்சென்று கருவூராரைப் பிடித்து வந்தனர்.
"சிறையில் தள்ளுங்கள்" அதிரடித் தீர்ப்பை
அரசன் தந்தான்.
திருமூலர் பெருமான் பிரசன்னமானார்.
கூடவே சீடர்கள்.
அவர்கள் வசம் மூட்டைகள்.
அவை நிறைய
தங்கத் துகள்கள்.
" மன்னா....
கருவூரான்..
என் மாணவன்.
அவனையா சிறையில் வைத்தாய்?"
"மாபெரும்
மோசடிக்குத் தண்டனை..... சிறைவாசம்."
கோபத்தின் உச்சியில் கத்தினான்
மன்னன் உறுதியாக.
"மன்னர் மன்னா... தெய்வச்சிலையாகச்
செய்து
வணங்க வேண்டியவனைச்
சிறைப்படுத்தி விட்டாய்..
இது பெரும் பாவம்...
உனக்குத் தெரியுமா ?
சுத்தத் தங்கத்தில் விக்கிரகம்
செய்ய முடியாது.
செம்பு கலந்தாலே
வடிவம் கைகூடும்.
மேலும்....."
மெல்லிய குரலில் சொன்னார் மூலர்.
"சுத்தத் தங்கம் கொடுக்கும் ஒளி
நாளாக நாளாக பார்ப்போர்
பார்வைத் திறனை பாழ்படுத்திவிடும்...."
பின்
உரத்துச் சொன்னார்.
"நீ கொடுத்த தங்கத்தை தந்துவிடுகிறேன்.
என் மாணவனை விடுதலை செய்....
இதோ...
மாற்றுத் தங்கம்.
அதிகமாய் வேண்டுமானாலும் தருகிறேன்."
தராசுத் தட்டில்
விக்கிரகம் வைக்கப்பட்டு ஈடான தங்கமும் நிறைக்கப்பட்டது.
"உன் தங்கத்தை
எடுத்துக் கொள்...
என் தங்கத்தை
என்னிடம் தா..."
வேகமாய்
நடராஜ விக்கிரகத்தை எடுத்தபடி
கிளம்பத் தயாரானார் திருமூலர்.
அவரது ஆற்றல் கண்டு மிரண்டு போன அரசன் திருமூலரின் பாதம் பணிந்தான்.
கண்ணீர் சொரிந்து காலடி தொழுதவன் கருவூராரை விடுவிக்க கட்டளை இட்டான்.
சிறையில்
பூட்டிய பூட்டு
பூட்டியபடி இருக்க அறைக்குள்
கருவூராரைக் காணவில்லை.
"சீடனைத் தா...."
உரத்த குரல் கொடுத்தார் .
மன்னன் பதில் ஏதும் இல்லாமல் பரிதவித்தான்.
தயங்கியபடியே காவலர்கள் சொன்னார்கள்.
"அரசே...…
அவரைக் காணவில்லை"
"அப்படியா..."
கலகலவென்று
சிரித்த மூலர்
"கருவூரானே .....
நீ எங்கே போனாய் ?எல்லோரும்
பார்க்கும்படி
தரிசனம் தா....."
"குருவே...
தங்கள் திருவருளால் இங்கேதான் இருக்கிறேன் ..."
கூறியபடி
திருவடிவு தாங்கியபடி வெளியே வந்தார்
கருவூர் சித்தர்.
அரசன்
சிற்பிகள்
காவலர்
அத்தனைபேரும் வணங்கினர்
இரண்டு
சித்தர் பெருமக்களையும்.
அம்பலவாணராம் நடராஜர் சிலையை அரசனிடம் தந்தார் திருமூலர் பெருமான்.
கோயில் அமையவேண்டிய முறை, தெய்வத்திற்கு உரிய இடங்கள்,
பிரதிஷ்டை முறை,
பூசை வகைகள்
என கோயில் இலக்கணம் சொன்னார் கருவூரார்.
விடைபெற்றனர் ஈடில்லாத
சித்தர் பெருமக்கள் இருவரும்.
பின் எத்தடையும் இல்லாது
கோயில் உருவானது.
நடராஜர் விக்கிரகம் பேரருளோடு அருள்பாலிக்க ஆரம்பித்தது.
கடைசியில் சோழமன்னன்
முற்றும் துறந்து
முனிவனானான்
என்பது
கொங்கணர்
வடித்த காவியத்தில் முடிவாய் இருக்கிறது.
சிதம்பரம்
ஆதிமூலர் சன்னதியில்
லிங்க வடிவில் இருக்கும் திருமூலரைத்
தரிசிக்க - தியானிக்க எண்ணியதெல்லாம் எண்ணியவாறு கைகூடும் என்பதே
திருமூலரின் சிறப்பு.
அருட்தன்மை.
திருமூலரின்
கிருபை
பொருந்திய இடமாக காட்டுமன்னார்கோயில் அருகே
திருநாரையூர்
பொல்லாப் பிள்ளையார் கோயிலைச் சொல்கிறார்கள்
சித்தர் தேடல்
கொண்ட சிலர்.
தமிழ்நாட்டில்
மூலனூர்
என்ற பெயரில் இருக்கும் அத்தனை ஊர்களும் திருமூலரின்
கிருபை பெற்ற தெய்வத்தமிழ் தலங்களே.
சதுரகிரி மலையில் இன்றும்
உலா வருகிறார் திருமூலர்.
அங்கு அவரது
தவக் குகை
ஆழ்நிலைத் தவத்திற்கு அடித்தளமாய்
இன்னமும் இருக்கிறது.
குளித்தலை அருகே ஐவர்மலை என்னும் இரத்தினகிரீஸ்வரர் மலையில்
மன்னன் வீரசேனன் உருவில் இருந்த திருமூலரின்
சொரூப சமாதி முகம் இருப்பதாகவும்
அங்கு தான்
திருமூலரைத்
தரிசித்ததாகவும்
போகர்
தனது சப்தகாண்டத்தில் 12 பாடல்களில் பரவசத்தோடு குறிப்பிடுகிறார்.
'வழியுடனே இரத்தினகிரி மேலே சென்றேன்.
வாகுடனே இரத்தின மென்ற கிரியிற்கண்டேன்.
அழியாத ஆஸ்தான கோட்டை கண்டேன்.
அதற்கப்பால் திருமாலின் கோயில் கண்டேன்.'
என்கிறது
போகர் பாடல்.
இதில் கூறப்படும் திருமாலின் கோயில் ஸ்ரீரங்கம் என்பது
ஓர் ஆன்மீகக் கணிப்பு.
இன்னொரு பாடலில்
'சமாதி இடம் கொண்டு சென்றார்
நிலையான
இரத்தினகிரி மலையோரம் தான்..'
என்கிறார்
போகர் பெருமான்.
திருமூலரைத் தரிசித்து அருள் பெற உகந்த இடம் இரத்தினகிரீஸ்வரர் மலை என்பது
இக்குறிப்பு உணர்த்தும் போகர் அனுபவம்.
9 மனைவிகளோடு
90 மக்கள் செல்வங்களோடு வாழ்வாங்கு வாழ்ந்த திருமூலர்
புரட்டாசி அவிட்டம் மூன்றாம் பாதத்தில் அவதரித்தார்.
அவரை வழிபடத்
தக்க நாள் அது.
திருமூலரின்
திருமந்திரம்
தமிழுக்கும்
சைவத்திற்கும்
சித்தர் உலகுக்கும் ஆன்மீகத் தேடலுக்கும்
கிடைத்த
ஒரு பொக்கிஷம்.
திருமூலரே
சித்தர் உலகிற்கு கிடைத்த
மூலவர் தானே !
(திருமூலர் திவ்விய சரித்திரம் - நிறைவு)
Leave a Comment