கண்ணபிரானுக்கு உபதேசம் செய்த சித்தர்பிரான்
- "மாரி மைந்தன்" சிவராமன்
திருமூலர் திவ்விய சரித்திரம் பாகம்-3
ஒருநாள்
நள்ளிரவு.
அரண்மனை துறந்து காடேகினார் திருமூலர்.
சதுரகிரி மலை ஏறினார்.
அங்கே
போகும் வழியில்
ஓர் அந்தணன்
கற்சிலை போல் நின்று கொண்டிருந்தான்.
அவனுக்கு உதவ அருகில் சென்றார். பிரமித்து நின்றார்.
அவர்
கைப்பட்ட போது
அவன் உயிர்
விடை பெற்றிருந்தது.
'ஏன் இப்படி ?
என்ன நேர்ந்தது அவனுக்கு ?'
சிந்தனையில் ஆழ்ந்தார். காட்சி விரிந்தது.
நடந்தது தெரிந்தது.
ஜம்புகேஸ்வரம் எனும்
திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வரன்
என்ற பெயரில் வாழ்ந்தவன் அவன்.
குரு துணையின்றி பிரணாயாமம் செய்திருக்கிறான்.
வெளியே மூச்சை
விடக் கற்றவனுக்கு
உள்ளே காற்றை
இழுக்கத் தெரியவில்லை.
மறந்து விட்டான்.
அருகே குருவோ
வேறு யாருமோ
இல்லை.
ஆட்டம் காலி.
வீரசேனன்
உருவிலிருக்கும் திருமூலருக்கு
கூடுவிட்டுக்
கூடுபாய்தல்
கைவந்த கலை அன்றோ !
சவமாய் இருந்த ஜம்புகேஸ்வரன்
உடம்பில்
வீரசேனன் உருவிலிருந்த
திருமூலர் ஏகினார்.
அருகிருந்த
மரப்பொந்தில் வீரசேனனின்
உடலை வைத்தார்.
அது எப்போதும் அழியாதிருக்க
ஜோதி மரப் பூக்களை
சிற்சில மூலிகைகளை கலந்து அரைத்து
தன் மந்திர சக்தி ஏற்றி அரசன் உடலில் பூசினார்.
இலை, தழை மரப்பட்டைகளால் மரப்பொந்தினை மூடினார்.
'அழியாத அரசன் உடல்.
தீர்க்க சுமங்கலியாய் அரசி'
அரசி குணவதிக்கு
கொடுத்த வாக்கு
நிறைவேறிய திருப்தியில்
அடுத்த கட்டத்திற்கு பயணமானார் திருமூலர்.
இப்போது மூலர்
ஜம்புகேஸ்வரன்
உடலைப்
போர்த்திக் கொண்ட
மூன்றாம் மூலர்.
'ஜம்புகேஸ்வரர்' மூலர்.
சதுரகிரியில்
நீண்ட காலத் தவம்.
மீண்டும் காயசித்தி.
சித்தர்களே வியக்கும் அழகிய இளைஞரானார்.
காலப்போக்கில்
சீடர்கள் பெருகினர்.
சீடன் குரு ராஜனும் சேர்ந்து கொள்ள
அவர் இருப்பில்
சதுரகிரி மலையே தவச்சாலையாய் ஒளிர்ந்தது.
ஓங்கி உயர்ந்தது.
சுமங்கலியாய்
நாடாண்டு வந்த
அரசி குணவதி
கால முதிர்ச்சியில் நம்
சதுரகிரிச் சித்தர் பற்றி அறிந்து
அவர் யார் என்று அறியாமலேயே மலைக்கு வந்து
உதவி கோரினாள்.
தன் துயர்துடைக்க
தாழ் பணிந்து நின்றாள்.
"மகா யோகியான
என் கணவர் கிடைக்க வேண்டும்.
பந்தம்
தொடர வேண்டும்."
என்பதே அவள் பிரார்த்தனை.
தன் தவ சக்தியால்
மாமுனி திருமூலர்
அரசன் உடலை
ஒரு மரமாக உருவாக்கினார்.
அந்த மரமே
அதுமுதல்
அரச மரம் என அழைக்கப்படுவதாகச்
சொல்கிறது ஒரு செவிவழிச் செய்தி.
"அம்மா....
இந்த மரத்திற்குப்
பூஜை செய்...
அதுவே
உனக்கான சேவை...
பதி சேவை...
பக்தியோடு செய்
பலன் கிட்டும்.."
ஆசியோடு சொன்னார்
அரசியால்
அறிந்து கொள்ள முடியாத
உருவிலிருந்த
திருமூலர்.
அரசி அழுதவண்ணம்
அரசமரத்தைத் தொழுதாள்.
விடைபெற்றாள்.
பின்
பலகாலம்
நாடாண்டாள்.
இந்நிகழ்ச்சிக்குப் பின் திருமூலரின்
சித்தர் பணி
உலகை உய்வித்தது.
சீடர்களை ஊக்குவித்தார்.
மக்களை மேம்படுத்தினார்.
20க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்தார்.
தவம் செய்தோருக்கு உதவி செய்தார். உபதேசம் தந்தார்.
துவாரகைபதியான கிருஷ்ணனுக்கே
உபதேசம் செய்ததாக அகத்தியர்
மூலர் புகழ் பாடியுள்ளார்.
ஆம்...
கீதா உபதேசம் செய்த கிருஷ்ண பரமாத்மாவுக்கே
உபதேசம் செய்த
பாக்கியம் பெற்றவர்
திருமூலர்.
அதேபோன்று மார்க்கண்டேயரையும்
மகிழ வைத்திருக்கிறார் திருமூலர்.
"நீ சாகாவரம் பெற்றிருக்கலாம். இருப்பினும் சுழிமுனையில்
நிலைத்து நின்று
தவம் செய் " என மார்க்கண்டேயருக்கு உபதேசித்ததாக
அகத்தியர் அகமகிழ்ந்து சொல்கிறார்.
ஏற்கனவே
3000 ஆண்டுகள் பாடல்கள் எழுதினார்.
அது பின்
மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததாகத் தகவல் உள்ளது.
'நம்ப முடியவில்லை.. நம்பகத்தன்மை இல்லை..'
என்பார் சிலர்.
உண்மையில் சித்தர்கள் யுகங்கள் கடந்தவர்கள்.
அழியா உடல் அவர்தம் சொத்து.
எக்காலத்திலும் தோன்றுவது
சித்தர்களின் தவபலம்.
நம் எல்லைக்கோடு, காலக்கெடு,
அறிந்த அறிவியல் சித்தர்களைப் புரிய சிறிதும் உதவாது.
அதற்கு வேறோர் ஆற்றல் வேண்டும்.
அதன் பெயர் ஞானம்.
கயிலாயத்திலும்
பூலோக கயிலாயத்திலும்
திருமூலருக்கு சீடர்கள் இருந்தனர்.
12 மடங்களை நிறுவி மக்கள் தொண்டே மகேசன் தொண்டென பணி செய்தார்.
சனகர்
சனந்தனர்
சனாதனர்
சனத்குமாரர் ஆகிய நான்கு சனகாதி முனிவர்கள்...
பதஞ்சலி முனிவர் அகத்தியர் ஆகியோர் மூலரின் சமகாலத்தவர்.
ஒரு சாலையில் பயின்றவர்கள். அவர்களுக்கு குருவாக இருந்தவர் நந்தீசர்.
வாழ்ந்த காலமெல்லாம் வள்ளலாய் இருந்தவர்.
தக்க தருணம் வரவே இதுவே நல்ல சமயம் என்று எண்ணி
இறையோடு இறையாய் இரண்டறக் கலந்தார்.
இது நிகழ்ந்த தலமே சிதம்பரம்.
திருமூலர் லயமான இடமே
ஆதிமூலநாதர்
சன்னதி ஆனது.
திருமூலர் சமாதியை மூலவராகக் கொண்டு
அமைக்கப்பட்ட கோயிலே சிதம்பரம்
நடராஜர் கோயில் என்கிறது
கருவூர் புராணம்.
சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றி
இன்னொரு சுவாரசியமான கதையைச்
சுவைபடக் கூறுகிறார்
கொங்கணர்.
சிதம்பரத்தில்
ஒரு பிரச்சனை.
சோழ மன்னன்
இரணிய வர்மன்
தீர்த்த யாத்திரைப் பிரியன்.
பயணத்தின் போது தில்லை வந்தான்.
அங்கு சிற்றம்பலத்
திருக்குளமான சிவகங்கைத்
தீர்த்தத்தில் நீராடினான்.
தண்ணீரில்
மூழ்கிய போது
ஓர் ஓங்கார நாதம் கேட்டது.
தண்ணீர் மேலே வந்தான்.
ஏதும் கேட்கவில்லை.
மீண்டும் நீரினுள் மூழ்கினான்.
கண் திறந்து பார்த்தான்.
இப்போது ஆடல்வல்லானின்
அற்புத நடனம் காட்சியாய் தெரிந்தது.
கூடவே
ஓங்கார நாதமும்
ஓங்கி ஒலித்தது.
வியந்த மன்னன்
தான் கண்ட நாதனை ஓவியமாய் எழுதினான்.
அவ்வோவியத்தை விக்கிரகமாக்கி பொன்னம்பலத்தில் வைத்து
உலகோர் அனைவரும் தரிசனம் செய்ய
ஆர்வம் கொண்டான்.
தமிழகத்தில் சிறந்த சிற்பிகளை அழைத்து
தன் விருப்பத்தைச் சொன்னான்.
48 நாட்களில் செய்து முடிப்பதாக
சிற்பிகள் சொல்ல.. வேண்டிய தங்கம்
வாரிக் கொடுத்தான் சோழ அரசன்.
சிற்பிகள் சாதாரணமானவர் அல்லர்.
கோயில் சிலைகளை வார்ப்பதில் வல்லவர்கள்.
அவர்கள்
ஆசை ஆசையாய் முயற்சிக்கையில் ஒவ்வொரு நாளும்
ஏதோ ஒரு காரணத்தால் விக்கிரகத்தில்
குறை எழுந்த வண்ணமே இருந்தது.
ஆயிற்று 47 நாட்கள்.
மன்னனின் கோபம் சிற்பிகளுக்குத் தெரியும்...
'அரச தண்டனை'
அழுதே விட்டனர்.
விஷயம்
திருமூலருக்குப் போனது.
ஞானவழித் தந்தி மூலம் கருவூராருக்குச் செய்தி போனது.
திருமூலரின் உத்தரவை ஏற்றார் கருவூரார்.
விரைந்தார் சிதம்பரத்திற்கு.
"கவலைப்படாதீர்கள்.... ஒரு மணி நேரத்தில் தங்க விக்கிரகம் தயாராகியிருக்கும்..."
ஆறுதல் சொன்னார்.
அடுத்து காரியத்தில் இறங்கினார்.
நம்பிக்கை இல்லை தான்.....
இருப்பினும் காத்திருந்தனர்
சிற்பிகள்
கலக்கத்துடனும்
கண்ணீரோடும்.
கருவூரார்
பணி முடித்து அனைவரையும் அழைத்தார்.
அம்பலக் கூத்தனின் அழகுத் திருவுருவம்
அப்படி ஓர் அம்சமாய் அமைந்திருந்தது.
அரசன் வந்தான். அகமகிழ்ந்தான்.
நினைத்தபடி
விக்கிரகம் செய்த சிற்பிகளைப் பாராட்டினான்.
அருகிருந்த
கூர்த்தமதி மந்திரி
"அரசே...
கொடுத்த தங்கம்
மிக அதிகம்.
மீதக் கணக்கைச் சோதித்து விட்டு
பரிசு மழைகளால் சிற்பிகளை மகிழ்விக்கலாம்..."
சரியாய் போட்டார் குறுக்கே அரிவாளை.
மீதமிருக்கும் துகள்கள் சோதிக்கப்பட்ட போது
செம்பு கலந்து இருப்பது கண்டறியப்பட்டது.
சோழ சாம்ராஜ்யமே அதிரக் கத்தினான் இரணிய சோழன்.
"கலப்படம்...
கலப்படம்...
நம்பிக்கை மோசடி…"
(திவ்விய சரித்திரம் தொடரும்)
Leave a Comment