கூடுவிட்டுக் கூடுபாயும் கருணை வள்ளல்
- "மாரி மைந்தன்" சிவராமன்
திருமூலர் திவ்விய சரித்திரம் பாகம் -2
திருமந்திரம்
வலியுறுத்தும் தர்மம்
எக்காலத்துக்கும் பொருத்தமானது.
'இறைவனுக்கு
ஒரு துளசி அல்லது
வில்வ இலை கொடு.
பசுவுக்கு ஒரு வாய் உணவு.
யாசிப்பவருக்கு
ஒரு பிடி உணவு.
பிறருக்கு இனிய சொல். இவையே தர்மம்'
என்கிறார் திருமூலர்
திருமந்திரத்தில் மென்மையாக.
'பத்து பெண்களுக்குத் திருமணம் செய்வித்தால்
குழந்தையின்மை என்ற பாவமெல்லாம் தீரும்.
தர்மம் மட்டுமே
பூர்வ ஜென்மப்
பாவங்களைத் தீர்க்கும்'
என்பதும்
திருமூலரின் திருமந்திரமே.
'மறு மந்திரமில்லை திருமந்திரத்திற்கு !
ஈடில்லை ஒரு மந்திரமும் திருமந்திரத்திற்கு !!
ஈடில்லை ஒரு சித்தரும் திருமூலருக்கு !!!'
இது
சித்தர் அனுபவம்
சிறக்கப் பெற்றோரின்
சீரிய வாக்கு.
திருமந்திரம்
படைத்த பின்னரும் தொடர்ந்து
மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததாகச் சொல்கிறது
சேக்கிழார் பெருமானின் பெரிய புராணம்.
வேறொரு கதை
இன்னொரு விதமாய் சதுரகிரி தலபுராணத்தில்.
இதில்
கூடுவிட்டுக் கூடு பாய்ந்த நிகழ்வு
நயம்பட கூறப்பட்டுள்ளது.
பாண்டிய நாட்டில்
ஒரு மன்னன்.
வீரசேனன் அவன் பெயர்.
மனைவி குணவதி.
ஒருநாள் நகர சோதனை சென்று வந்தவன்
தள்ளாடி வந்தான்.
தன்னிலை மறந்தான்.
சில மணித்துளிகளில் மரணித்தும் போனான்.
இளம் வயது மன்னன்,
இனிய மனது உள்ளவன் இறந்த செய்தி
மக்களை - மகாராணியை ஓலமிடச் செய்தது.
அவர்களின் கூக்குரல் விண்ணை எட்டியது.
அப்போது தான் சரியாக திருமூலர்
விண் வழியே
பயணத்திருந்தார்.
ஐந்தறிவு கொண்ட பசுக்களின் துயரையே பொறுக்காதவர்
ஆறறிவு படைத்த மக்களின் அழுகுரல் சகிப்பாரா !
ஒருகணம் யோசித்தார். அக்கணமே
மன்னன் சாவை
முறியடிக்க
மன்னன் உடலில் உட்புகுந்தார்.
வானிலிருந்து வந்த
சித்தர் திருமூலர்
மண்ணில் இருந்த
மன்னன் வீரசேனனின் உடலில் உயிராய் புகுந்து
'வீரசேனன்' மூலர் ஆனார்.
அதுமுன்
தான் தவமிருந்த
சதுரகிரியில்
அந்தரங்கச் சீடன்
குருராஜன் என்பவரை நியமித்து
தன் பழைய உடலைப் பத்திரமாய் பாதுகாக்கச் சொன்னார்.
மன்னர் உயிர் பெற
மாநிலமே மகிழ்ந்தது.
மக்கள் துள்ளி
மகிழ்ந்தனர்.
மகாராணி குணவதி எல்லையில்லா
மகிழ்வு கொண்டாள்.
ராஜ வாழ்க்கை....
அழகின் விளிம்பில்...
அதிசயம் காட்டிய
இளம் மகாராணி....
அருகில்... மிக அருகில்.
நாட்கள் நகர்ந்தன
ஆடலும் பாடலுமாய்
அரசும் ஆட்சியுமாய்.
வீரசேனனாகவே
மூலர் மாறிப்போனார்.
இருப்பினும்
அரசியின் மனத்தில்
சந்தேகம் இருந்தது.
ஒரு நாள்
கேட்டேவிட்டாள்.
"மன்னன் மறைந்ததை
ராஜ வைத்தியர்தான்
சொன்னார்.
நான் கூட உடலைத்
தொட்டுப் பார்த்தேன். உணர்ந்தேன்.
மரணமடைந்தார் என்பதைப் புரிந்தேன்.
எதிலும்
உங்கள் ஆற்றலும் அணுகுமுறையும்
வேறாய் இருக்கிறது.
அனுதினமும்
இதை உணர்ந்து துய்க்கிறேன்.
என் மனம் தான்
ஏனோ துன்புறுகிறது.
கோபமே
என் மன்னவனின்
மரபு குணம்.
முற்றிலுமாய்
அது
உங்களிடம் இல்லை.
அவன் நாட்டம் வேறு.
உங்கள் நாட்டம் புதிது.
சொல் புதிது.
பொருள் புதிது.
ஆற்றல் புதிது.
அனுபவம் புதிது.
"யார் நீங்கள்?
எனக்கு ஏதும் விளங்கவில்லை.
அறிவால்
அரச சபையும்
அன்பால்
அந்தபுரமும்
மாறி இருப்பதை
அறிய முடிகிறது."
'வீரசேனன்' மூலர் உண்மையைச்
சொன்னார்.
"விஷப்பாம்பு
ஊர்ந்த பூ ஒன்றை முகர்ந்ததாலே
உன் கணவன்
இறந்து போனான்.
பின் அவன்
பிழைத்ததும்
இப்போது இருப்பதும் ஆச்சரியமே !
அது என் கருணையே !!"
அரசனாய் இருப்பவனின்
பதில்
அரசிக்கு
குழப்பம் தந்தது.
அடுத்து
அவன் காத்த
அமைதியால்
கலங்கிப் போனாள்.
அதன்பின்னே
தன்னுள்
புலம்பி ஓய்ந்தாள்.
ஆனால்
அடுத்த முறை
அரசியார்
அதே கேள்வியைக்
கேட்ட போது
கேட்டு கேட்டு
நச்சரித்த போது
வீரசேனன்
உருவிலிருந்த மூலர்
உண்மையைப்
போட்டு உடைத்தார்.
"அரசியே...!
இவ்வுடல்
உன் தலைவன் வீரசேனனுக்கு உரியது.
உள்ளிருக்கும்
உயிர் என்னுடையது.
நீ சேர்ந்தது
அவன் உடலிலேயே.
உறவும் பிணைப்பும் உடலுக்குரியன.
உயிருக்கு அல்ல.
ஆன்மாவுக்கு என்றும் களங்கம் கிடையாது"
உடலின் உண்மையையும்
உயிரின் மேன்மையையும்
தெள்ளத் தெளிவாய் எடுத்துரைத்தார்.
நடந்த அனைத்தையும்
நயமாய் எடுத்துச் சொல்லி....
"உன்னைச் சொல்லிக் குற்றமில்லை...
என்னைச் சொல்லி குற்றமில்லை...
இது இறையருளின் கட்டளை."
என நியாயப்படுத்தினார்.
அரசிக்கு
குற்ற உணர்வு
குறுகுறுக்கவில்லை.
கற்பு கெட்டதாக
கதறவில்லை.
மூலரின் கூற்று
அரசிக்கு ஏற்புடையதாக இருந்தது.
அரசு சுகமும்
ஆட்சி சுகமும்
மூலர் தந்த முழு சுகமும் அவளை அப்படிக்
கட்டிப் போட்டிருந்தன.
'இந்த
சாகா முனிவரிடம்
சமரசம் கொண்டால் தான்
சகல பாக்கியங்களும் நிரந்தரமாகும்.
மகாராணியாய்
வலம் வர முடியும்'
என கணக்குப் போட்டாள்.
விதவைக்கோலம்
கண்களில் விரிய விவேகமாய்
முடிவெடுத்தாள்
சாகசக்காரி.
'வீரசேனன்' மூலரை
ஆரத் தழுவினாள்.
சகலமும்
அறிந்தவரென்றாலும்
அந்த
காற்றும் புக முடியா
அணைப்பில்
கொஞ்சம் கிறங்கித்தான் போனார் மூலர்.
"ஆமாம்... சுவாமி,
உங்கள் உடல்
சதுரகிரியில்
பத்திரமாய்
இருக்கும்தானே?
சீடன் கவனம்
அதிலேயே சிதறாமல் இருக்குமா ?"
சிக்கென கேள்விக்கணை எறிந்தாள்.
"பயமில்லை... பாதுகாப்புக்கும் குறையில்லை..."
"எனக்கென்னவோ பயமாயிருக்கிறது...
சுவாமி....
யாரேனும் எடுத்து
செத்த உடம்பென்று எரித்துவிட்டால்....!"
சந்தேகமாய் தான்
கேட்டாள்
சல்லாபக் குரலில்.
"முடியாது....
யாராலும் முடியாது...
காய சித்தி
அடைந்த தேகம்.
அதனை எரிக்க
சாதாரணத் தீயால்
முடியாது.
வெடி உப்பும்
குங்கிலியமும்
பொரிகாரமும்
போட்டுத் தூளாக்கித் தேகத்தில் பூச வேண்டும்.
பின் விராலி இலைகள்
பரப்பி மூட வேண்டும்.
அதன்பிறகு
அகில் கட்டைகள்
அடுக்கி தீ மூட்ட வேண்டும்.
அப்போதுதான் சிதை எரியும்...
இந்த ரகசியம்
எவருக்கும் தெரியாது..."
ரகசியமாகச் சொன்னார்.
காமக்கிழத்தியிடம் ரகசியத்தைச் சொல்லிவிட்டு
உலகில் இது யாருக்கும் தெரியாதென
ரகசியமாய் சிரித்தார், சிதம்பர ரகசியம் அறிந்த
அரச உருவ திருமூலநாதர்.
அந்த ரகசியம்
தீயாய் படர்ந்தது
அரசியின் உள்ளத்தில்.
"அழகிய இளைஞனாய்
இந்த அரசன்.... அமர்க்களமாய்
அரசு கட்டில்...
ஆர்ப்பரிக்கும்
அரச வாழ்க்கை. எல்லையில்லா இன்பம்.
அரசன் உருவில் இருக்கும் இந்த புதுக் கணவனைப்
பிரிந்தால் எல்லாம் பறிபோகும்...."
"எவராயிருந்தால் என்ன ? கணவனைப் பிரிய
எந்த மனைவிக்கு மனது வரும்??
சொத்து சுகம் குறைய யாருக்குதான்
மனசு வரும் ?"
அரசியின் மனதில்
அதீத தீ கொழுந்தாய்
எரிந்தது.
மனதே அதில்
நெய் ஊற்றியது.
வெளிக்காட்டிக்
கொள்ளாமல்
ஒரு திட்டம் தீட்டினாள்
பட்டத்து ராணி.
அவளது திட்டம்
மிகச் சிறியது.
கனக்கச்சிதமானது.
நம்பிக்கையான
வீரர்களை அழைத்தாள்.
மூலரின்
உடல் இருக்கும்
இடம் சொல்லி
எரிக்கும் முறைகளை எடுத்துச் சொல்லி
சடலத்தை கொஞ்சமும் விட்டுவிடாமல்
எரித்து வரச் சொன்னாள்.
சாம்பலையும்
கரைத்துவிட்டு வர உத்தரவிட்டாள்.
அதேசமயம்
'போன குரு
நீண்டகாலமாக
காணவில்லையே '
என புலம்பியபடியே
சீடன் குருராஜன் மூலரைத்தேடி
மதுரை நோக்கிப்
புறப்பட்டான்.
இது
வீரர்களுக்கு காரியத்தை எளிதாக்கியது.
மூலரின் பூவுடல்
அவர்கள் இட்ட தீயால்
நிர்மூலமானது.
இத்தனை நடந்தும்
ஏதுமறியாதவள் போல் இனிய முகத்தோடு
ராஜ வாழ்க்கையைத் தொடர்ந்தாள்
மகாராணி குணவதி.
பின்னொருநாள்
அரசன் காட்டிற்குச்
சென்றார் வேட்டையாட.
அருகில்
ஒளித்து வைத்திருக்கும் உடலும்
உத்தம சீடனும்
நினைவுக்கு வரவே
கண்டு வரலாம்
என குகைக்குச் சென்றார்.
குகையில்
வைத்த இடத்தில்
உரம் கொண்ட
உடல் இல்லை.
ராணி செய்த சூழ்ச்சி
லேசாய் புரிந்தது.
அமைதியாய் நாடு திரும்பினார் அவர்.
ஏதும் அறியார் போல் ராணிக்கு
அரசாளும் பொறுப்பைத் தருவதாக
ஒரு நாள்
அறிவிப்பு செய்தார்.
அகமகிழ்ந்தாலும்
சூதாய் எரித்த கதை
தெரிந்திருக்குமோ
என அஞ்சினாள்.
ஆனால்
நாளாக நாளாக
ராணி குணவதிக்குத்
தன் தவறு
மெதுவாய் புரிந்தது.
தனது செயல்
சூழ்ச்சி துரோகம்
என பூரணமாய்
உணர்ந்தாள்.
மூலரின்
காலடி விழுந்தாள்.
தன் அன்பே காரணம்
என நியாயப்படுத்தினாள். வாய்த்த கணவன்
என்றும் பிரியாதிருக்க
கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதவர்களே
மனைவிமார்கள்
என தர்க்கம் செய்தாள்.
நம்ப வைத்து செய்த துரோகம்
எனினும் கணவன் வேண்டும் என்ற மனைவியின்
அடிப்படை ஆசை எதார்த்தமானது
என்பதை மூலரும் ஏற்றார்.
"மன்னிப்பீர்களா..." மகாராணியார்
மூலரின் மலர்ப் பாதம்
மீண்டும் பணிந்தாள்.
"பரவாயில்லை...
நடந்தது
நடந்ததாக இருக்கட்டும்...
விரைவில் ஒரு நாள்
நான் சென்று விடுவது நிச்சயம்.
இனி என்னால்
ஒன்று மட்டும் தர முடியும்.
அது வரம்....
என்ன வரம்
வேண்டும் கேள் ?"
திருமூலர்
மனம் இரங்கினார்.
பெண் மனம் ஆயிற்றே ! முடிச்சுப் போட்டது.
"நான்
என்றும் சுமங்கலியாக இருக்க வேண்டும்."
ஒரே கல்லில்
எத்தனை மாங்காய் !
'வரம் கேட்பதில்
வல்லவர்கள்
வனிதைகள்!'
கைகேயி கேட்ட வரங்கள் கணப்பொழுது
நினைவுக்கு வரவே
திருமூலர்
சிரித்துக் கொண்டார்.
"இனி
இந்த சித்தாதி சித்தர் நம்முடனே தான்
இருந்தாக வேண்டும் !
உடல் மாறாது...
உயிர் போகாது...."
சிந்து பாடியது
அவள் உள்ளம்.
ஆனால் அரசன்
உருவில் இருந்த
திருமூலரின் சிந்தனை வேறாக இருந்தது.
(திருமூலர் திவ்விய சரித்திரம் தொடரும்)
Leave a Comment