தமிழ் மணம் பரப்பிய திருமந்திரம்


- "மாரி மைந்தன்" சிவராமன்

திருமூலர் திவ்விய சரித்திரம்  பாகம் - 1


சித்தர்களில் 
சிறந்தவர்
திருமூலர். 

கயிலாயப் 
பரம்பரையின் 
முதன்மைச் சித்தர்.

ஆதி சித்தரான 
சிவ பெருமானிடம்
உபதேசம் பெற்றவர்.

கயிலாய நாயகன் 
சிவ பிரானின் 
பிரதம சீடரான
நந்தி தேவரின் 
அனுகிரகம் பெற்ற 
அற்புதச் சீடர்.

'ஒன்றே குலம் 
ஒருவனே தேவன்'
என்ற 
ஒருமைக் கோட்பாட்டை உலகுக்கு அளித்தவர்.

சித்தர் பெருமக்களிடையே தமிழைக் காதலித்து 
தமிழாய் வாழ்ந்த தன்னிகரில்லாச் சித்தர்.

'என்னை இறைவன் 
நன்கு படைத்தனன் 
தன்னை நன்றாகத் 
தமிழ் செய்யுமாறு...'
எனப் பாடிய 
தமிழ் நெஞ்சத்தார்.

'இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடும் மானிடரே..!
உடம்பினுள் உத்தமன் கோயில் கொண்டான்'
என உறுதிபடச் சொல்லி உடம்பே ஆலயம் 
உள் உறைபவனே 
இறைவன் என 
புதிய வேதம் சொன்னவர்.

பல கோடி யுகங்கள் 
வாழ்ந்து 
மூவாயிரம் ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒன்றாய் 
நான்கு அடிகளில் 
ஒரு பாடல் பாடி 
மூவாயிரம் பாடல்களைக் கோர்த்து 
திருமந்திரம் என்னும் திருமந்திர மாலை 
தந்தவர்.

திருமூலர் அருளியவை 'திருமந்திரம் எண்ணாயிரம்' என வள்ளல் பெருமான் போற்றித் துதிக்கிறார்.

திருமூலர் வர்க்கம்
என்று
ஒரு சித்தர் வர்க்கமே வர்ணிக்கப்படுவதும் பூஜிக்கப்படுவதும் 
உண்டு.

திருமாளிகைத் தேவர் காலங்கி நாதர் 
கஞ்சமலையார்
இந்திரன் 
சந்திரன் 
பிரம்மன் 
ருத்திரன் 
உள்ளிட்ட 
ஏழு சித்தர்கள் 
திருமூலரின் 
சீர்மிகு சீடர்கள்.

சிதம்பரத்தில் நேரில் 
நடராஜர் நடனத்தைத் 
தரிசித்து மகிழ்ந்தவர்.

அங்கேயே 
ஆதிமூலநாதர் 
சன்னதியில் 
மூலவராய் 
ஆதிசிவன் ரூபத்தில் அருள்பாலித்து வருபவர்.

திருமூலரின் 
அருமைகளும் 
பெருமைகளும் 
அளப்பரியன.

வரலாற்றில் இரண்டு திருமூலர்கள் இருந்ததாக சொல்வார் உண்டு.

கூடு விட்டுக் கூடு பாயும் சித்தர் கலையான 
பரகாயப் பிரவேசத்தில் வல்லவர் திருமூலர்.
ஆதலால் 
வான் புகழ் பெற்றவர்.

பன்முறை
பரகாயப் பிரவேசம் செய்திருந்தாலும் 
அவரைப் பற்றிய 
சித்தர் குறிப்பில் பதிவாகியுள்ளது 
மூன்று முறையே.

அவற்றை 
ஒவ்வொன்றாகத்
தரிசிப்போமா ?

 
எல்லா சித்திகளும் 
கைவரப் பெற்று கயிலாயத்தில் சிறப்புற்றிருந்த 
சுந்தர நாதருக்கு 
ஆத்ம நண்பரான அகத்தியரைப்
பார்த்து வரலாம் 
என்று 
ஓர் ஆசை உதித்தது.

கயிலாயம் விட்டு 
அகத்தியர் வாழும் 
பொதிகை மலைக்குப் பயணித்தார் சுந்தரநாதர்.

வழியில் 
பசுபதிநாத் (நேபாளம்)
கேதார்நாத் (திருக்கேதாரம்)  காசி (கவி முத்தம்)
விந்தமலை 
திருப்பருப்பதம் திருக்காளத்தி திருவாலங்காடு
காஞ்சிபுரம் என 
சிவ தலங்களை அடைந்து சிவபாதம் போற்றி 
சிதம்பரம் வந்தார்
சுந்தர நாதர்.

சிதம்பரத்தில் 
தில்லை நடராஜரின் திருநடனம் கண்டார்.
அது 
அவருக்குக் கிடைத்த 
பெரும் பாக்கியம்.

அடுத்து வந்தது 
ஆவடுதுறை.
ஆம்...
நம் திருவாடுதுறை,

அங்கு 
காவிரிக்கரையில் 
பூஜை முடித்து
எழுகையில் 
ஓரிடத்தில் 
பசுக்கூட்டம்.

அவை 
விம்மி விம்மி 
செருமி செருமி 
அழுத வண்ணம் 
இருந்தன.

பசுக்களின் அழுகுரல் சித்தரின் சித்தத்தைக்
கலங்கச் செய்தன.

பசுக்களின் 
பரிசுத்த 
ஆன்மாக்களின் 
கூக்குரல் 
சுந்தர நாதரிடம் 
தங்கள் 
துயர் நீக்க கோரின.

சுந்தர நாதர் விசாரித்தார்.

சாத்தனூரைச் சேர்ந்த 
மூலன் என்பவன்
பசுக்களை 
மேய்ப்பவன்.

மேய்க்கும்போது 
உயிர் ஏய்த்து விலக
அவன் மரணித்து  விட்டதாகவும் ,
அவனின் 
பிரியத்துக்குரிய பசுக்கள் பிரிய முடியாது என துடிதுடித்து வருவதாகவும் பதில் வந்தது.

பசுக்களின் 
துயர் தீர்ப்பது தனது 
கருணைப் பெருக்கு 
எனக் கருதிய 
சுந்தர நாதர் 
ஒரு கணம் யோசித்து 
மூலன் உடலில் 
பரகாயப் பிரவேசம் 
செய்ய முடிவெடுத்தார்.

மூலன் 
உயிர்தெழுந்தாலே பசுக்கூட்டம் மகிழ்வுறும் என்பதனால் 
சித்தர் சுந்தரநாதர்
தனது உடலை ஓரிடத்தில் ஒளித்து வைத்துவிட்டு 
உயிராய் 
மூலன் உடலில் ஐக்கியமானார்.

துடித்திருந்த பசுக்கள் 
மூலன் உடல் 
அசைவதைக் கண்டதும் அருகில் ஓடின.
நாவால் 
அவனை மேவின.
முகர்ந்தன. 
வால் தூக்கித் துள்ளின. 'மா'எனக் குரல் உயர்த்தின. ஆடின. மகிழ்ந்தன.

ஏதுமறியாது 
எழுந்த மூலன்
மாலை வரை 
மாடுகளை மேய்த்தான்.

இரவு நெருங்க 
வழக்கப்படி 
பசுக்களை ஒட்டியபடி
வீட்டை நெருங்கினான்.

ஓடிவந்த மனைவி 
மூலனை 
ஆசையாய் நெருங்கி அரவணைக்க முயல அதிர்ந்து அவன் 
தள்ளிப் போனான்.

'உண்மை உரைப்பதே உத்தமம்'
என மூலன் 
மனைவியிடம் 
நடந்ததைச் சொன்னார் மூலன் உருவிலிருந்த 
சுந்தர நாதர்.

ஏற்கவில்லை 
அந்த 
அப்பாவிப் பெண்.

ஊரைக் கூட்டினாள். பஞ்சாயத்து நடந்தது.

மூலன் உருவில் வந்த 
சுந்தர நாதர் 
நடந்ததைக் கூறி 
நம்ப மறுத்தவர்களிடம் மூலனின் உடலை விட்டு உயிரைப் பிரித்துக் காட்டி மீண்டும் அவனைச் 
சடலம் ஆக்கி 
தன் பக்கத்தை 
நியாயம் ஆக்கினார்.

வியந்த ஊர்மக்கள் 
சுந்தர நாதரை 
வணங்கித் தொழுது 
விடை கொடுத்து 
அனுப்பினர்.

சுந்தர நாதர் 
பசுவின் துயர் தீர்த்த நிறைவில் 
மூலன் மனைவி 
மறுத்திடாத மகிழ்வில் 
தன் உடலைத் தேடக் கரையோரம் வந்தார்.

உடம்பைத் தேடினார்.

என்ன நடந்ததோ 
அப்பூவுடல் காணவில்லை.

மெளனித்து தியானித்தார்.

நடந்தது 
மனத்திரையில் ஒளிபரப்பானது.

அது இறைவனின் சித்தம் 
என சித்தருக்குப் புரிந்தது.

இறை விருப்பத்தை உணர்ந்தவர் 
மூலனின் உடலிலேயே 
தங்கி விட முடிவெடுத்தார்.

மீண்டும் மூலன் 
வீடு திரும்பி 
மூலனின் 
உடலில் புகுந்தார்.
மூலன் ஆனார்.

அது முதல் 
அவர் 
'சுந்தரநாதர்' மூலன்
ஆனார்.

அவரை 
சுந்தர நாத மூலர் 
எனக் குறிக்கிறது 
பக்தி உலகம்.

திருவாடுதுறை திருக்கோயிலில் 
மூலனுடைய 
உடலிலேயே தங்கித் தான்
மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து 
ஆண்டுக்கொரு பாடலாய் திருமந்திரம்  படைத்தார்.

ஞானம், யோகம்,கிரியை, சரியை 
எனும் நால்வகை நன்னெறிகள் விளங்க அந்நன்நெறிகளான பண்புகள், யோகம்,
ஞானம், மந்திரம், தந்திரம், எந்திரம், வைத்தியம் 
என சகலமும் 
உள்ளடங்கிய 
திருமந்திரங்களாக ஜொலிக்க செய்தார்.

திருமந்திரத்தைத்
திருக்கோயிலின் 
வெளிப் பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் 
ஓர் அரச மரத்தின்
கீழ் தங்கித் தவமிருந்து படைத்தார்
திருமூலர் பெருமான்.

அவர் முதலில் 
இட்ட பெயர் 
'தமிழ் மூவாயிரம்'

திருவாவடுதுறையில் 
இருந்தே திருமந்திரத்தை வெளியிட வேண்டுமென வேண்டுகோள் வைத்தவர் ஒரு பெருமானே.

அவர் 
திருவாடுதுறை இறையான
மாசிலாமணி பெருமான்.

திருமூலரின் திருமந்திரம் தமிழுக்கும் சித்தர்களுக்கும் ஆன்மீகத்திற்கும் 
கிடைத்த ஒரு பொக்கிஷம்.

திருவாடுதுறையில் திருமந்திரம் 
மணம் எழுப்பியது பற்றி 
ஒரு சுவையான 
வரலாறு உண்டு.

திருவாடுதுறை திருக்கோயிலுக்கு 
வழிபட வந்தார் 
ஒரு தமிழ் ஞானி.

கோயிலின் அருகே 
விழுந்து வணங்கி எழுந்தபோது 
அவருக்கு ஓர் ஆச்சரியம்.

அருகிலிருந்தோரை
அழைத்து 
'இங்கே தமிழ் மணம் கமழ்கிறது...
தோண்டிப் பாருங்கள்.....' என்றார் ஆர்வமாக.

தோண்டிய போது 
நூல் ஒன்று இருந்தது.
அது 
பரப்பிய நறுமணம் கும்மென்று 
கோயிலை நிரப்பியது.

அந்நூல் 
திருமந்திரம் 
என்கிறது ஒரு வரலாறு.

தமிழ்மணம் கண்டறிந்த 
அந்த ஞானி....
தமிழ் மனம் கொண்ட திருஞானசம்பந்தர்.

(திவ்விய சரித்திரம் தொடரும்)
 



Leave a Comment