அறக்கருணை மறக்கருணை


- "மாரி மைந்தன்" சிவராமன்

வள்ளலார் சரித்திரம் பாகம் - 7


எளிமையாய்
அதிராமல் உலாவும் 
வழக்கம் கொண்ட
வள்ளல் பெருமான்
ஒருமுறை 
மதியவேளை 
ஞான சபையை விட்டு வெளியே கிளம்பினார்

சூரியன் சுட்டெரிக்கும் 
கடும் வெயில் நேரம்.

சபை அன்பர் 
சண்முகம் பிள்ளை 
பெருமானைக்
காணவில்லை என்று கொஞ்ச நேரம் கழித்து
தேடிப் போனார்.

சற்று தூரத்தில் பெருமானாரின் 
உடல்  
தலை வேறு உடல் வேறு கைகள் வேறு வேறென அக்கக்காய் அங்கங்காய்
பரவிக் கிடந்தன.

பயந்துபோன 
சண்முகம் பிள்ளை
அரண்டு போய் கத்த
உடலைச் சீராக்கிக் கொண்ட வள்ளல் பெருமான்....

"இங்கு கண்டதை 
யாரிடமும் சொல்லாதே..! இனி இப்படி 
என்னைப்
பின் தொடர்ந்து வராதேங்காணும்..!" 
என உத்தரவு போட்டார்.

இன்னொருமுறை 
வெயிலில் நடந்து கொண்டிருந்த 
வள்ளல் பெருமானை அன்பர்கள் பார்த்தபோது பயந்து ஒதுங்கினர். பரவசமடைந்தனர்.

அதற்கு காரணம் 
இருந்தது.

வானத்து சூரியனுக்கும் வள்ளல் பெருமானின் 
உச்சந்தலைக்கும் 
இடையே 
சூரியப் பேரொளி 
நீள் ஒளித் தூணாய் 
ஒளிமயக் கம்பாய் 
ஒளிர்ந்து கொண்டிருந்தது.


அக்காலத்தில்
வள்ளல் பெருமான் மீது வழக்கொன்று நடந்தது மஞ்சக்குப்பம் கோர்ட்டில்.

வழக்குப் போட்டவர் இலங்கையும் இந்தியாவும் போற்றிய நற்றமிழ் அறிஞர் சிவநேய சைவச் செல்வர் நாவலர் ஆறுமுகனார்.

சிதம்பரத்தில் பெருமானும் பெருமானின் அன்பர்களும் நாவலரை நயமில்லாமல் நாகூசப் பேசி விட்டார்கள் என்பதே வழக்கு.

அது ஓர் 
அவதூறு வழக்கு. 

தில்லை தீட்சிதர்கள் 
ஐவரும் பெருமானும் 
குற்றம் சாட்டப்பட்டவர்கள். ஆறாவது நபரே 
நமது நாயகர்.

திரு என்னும் 
மதிப்புமிகு சொல்லை திருஅருட்பாவிற்கும்
திரு அருட்பிரகாச வள்ளலாருக்கும்
சேர்க்க கூடாது 
என்பதில் நேர்ந்த தகராறை ஒட்டிய விவாதத்தில் 
எழுந்த வழக்கு அது.

வழக்கு துவங்கும் நேரம்.

'வள்ளல்பெருமான் கோர்ட்டுக்குச் செல்வார்,
உடன் செல்லலாம்' என அன்பர்கள் 
தருமச்சாலையில் 
அவர் அறைக்கு வெளியே காத்திருந்தனர்.

கதவு திறந்த பாடில்லை. உள்ளே மெல்லிய ஒலியில் பிரார்த்தனை கீதம் 
எழுந்த வண்ணம் இருந்தது.

நேரம் நகர்ந்து கொண்டிருந்தது.

அதேநேரம் 
'ராமலிங்க பரதேசி 
ராமலிங்க பரதேசி 
ராமலிங்க பரதேசி'
கடலூர் கோர்ட்டில்  அழைத்தார் 
கோர்ட் பணியாளர்.

எங்கிருந்து வந்தாரோ 
எப்படி வந்தாரோ 
திடுமென வந்த 
வள்ளல் பெருமான் 
கோர்ட் அறைக்குள் நுழைந்தார்.

கோர்ட்டில் வழக்கு தொடுத்த ஆறுமுக நாவலர் 
வள்ளலைப் 
பார்த்த மாத்திரத்தில் தன்னையும் அறியாமல் கைகளைக் குவித்து வணங்கியபடி 
தன் இருக்கையை 
விட்டு எழுந்தார்.

அவரது ஆதரவாளர்களும் அப்படியே எழுந்தனர்.

இதைக் கவனித்த 
ஆங்கிலேய நீதிபதியும் அனிச்சையாய்
எழுந்தார்.

வணங்கினார்.
மீண்டும் அமர்ந்தார்.

விசாரணை தொடங்கியது.

நீதிபதி கேட்டார் 
நாவலரைப்  பார்த்து,
"குற்றம் சாட்டப்பட்டவரைக் கண்டு எல்லோரும் 
ஏன் எழுந்தீர்கள் ?"

"அவர் 
வணங்கப் படவேண்டிய மகான்" 
என்றார் நாவலர்.

"வணங்கப் படவேண்டியவர் மீது வழக்கு ஏன் ?
உங்கள் வழக்கே 
தார்மீகமாகத் தப்பு.

வழக்கைத் 
தள்ளுபடி செய்கிறேன்,"

நீதிபதி
தீர்ப்பு எழுதினார்.

தனித்து வந்த 
வள்ளல் பெருமான் 
தனித்தே திரும்பினார்.

இதில்
மனத்தில் பதிய வைக்க செய்தி ஒன்று உள்ளது.

கோர்ட்டுக்கு வந்தது யார் ?

வள்ளல் பெருமானா ??

அவர் தர்மச் சாலையில் அல்லவா 
தவத்தில் இருந்தார்..!

அப்படியானால்....

வள்ளல் பெருமான் தான் பற்பல இடங்களில் தோன்றுவாரே !

அப்படி நடந்திருக்கும்.

இல்லாது போனால் ஆட்கொண்ட அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் 
பெருமானுக்குப் பதிலாக பெருமானாய் 
வழக்காட வந்திருப்பார்.

இது ஓர் 
இறை குறிப்பு.


வள்ளலார் கருணை ஆச்சரியமானது. அற்புதமானது.

ஒருநாள் இரவு 
ஒற்றியூர் சத்திரத்தில் வள்ளல்பெருமான் 
தங்க நேர்ந்தது.

அப்போதெல்லாம் வள்ளல்பெருமான் 
காதில் 
கடுக்கன்
அணிந்திருப்பார்.

காதுக் கடுக்கன்
கள்வன் ஒருவனைக்
களவாடத் தூண்டியது.

ஒருக்களித்துப் 
படுத்துக் கொண்டிருந்த வள்ளல் பெருமானின் காதருகே
பூனைபோல வந்தவன் திறமையோடு 
காதணியைத் 
திருகித் திருடினான்.

இன்னொரு காதணியும் அவனது திருட்டு 
நோக்காக இருந்தது.

வள்ளல் பெருமான் அவனுக்கு வாய்ப்பாக திரும்பிப் படுத்தார்.

மறு காதணியையும் 
கழற்றிய திருடன் வெற்றிவாகை சூடிய மகிழ்வில் புறப்பட்டான்.

அவன் கரம் பற்றி, "இத்தொழில் 
விட்டு விடு "
என கனிவாகச் சொல்லி அனுப்பி வைத்தார். 

பின்னொரு முறை....
கடலூர் அருகே குள்ளஞ்சாவடியில் இருந்தபோதும்
இம்மாதிரிச் சம்பவம்
ஒன்று நிகழ்ந்தது.

ஹெட் கான்ஸ்டபிள் ஒருவரின்
அழைப்பின் பேரில் சென்றிருந்து 
இருட்டாகி ஆகிவிட்டதால் சத்திரத் திண்ணையில் படுத்திருந்தார்.

பாதுகாவலுக்குப் 
போலீசும் பக்கத்தில் 
படுத்து இருந்தார்.

வந்த திருடனின் 
கண்களில் 
சுவாமிக்குப்
போலீஸ் போர்த்திய பொன்னாடையை 
அவர்
போர்த்தித் தூங்குவது தெரிந்தது. 

நைசாக அருகில் வந்து ஆடையை உருவினான்.

அவனுக்கு ஏதுவாக பெருமாள் 
உடல் தளர்த்தி 
புரண்டு படுத்து அனுமதித்தார்.

ஆனால்
பக்கத்தில் இருந்த போலீஸ்காரரோ 
அக் கள்வனைக்
கையும் களவுமாக 
பிடித்து விட்டார்.

"பாவம்... விட்டு விடுங்கள்... ஏழை... என்ன செய்வான் ?"
என காவலரின்
கையைத் தட்டி விட்டார்.

ஆடையை உருவ வந்தவன் உருகிப் போனான். 
அக் கள்வன் கை குவித்தான்.

மாட்டிக்கொண்ட
கள்வரைக் கூட 
கனிவுடன் நடத்தி 
உதவி புரிவதும் 
புத்தி சொல்வதும்
ஒருவகைக் கருணை.

அறக்கருணை 
என்பார்கள்.

இன்னொன்றும் உண்டு.
அது மறக்கருணை,

தண்டித்துப் 
புத்தி சொல்வது...
திருந்த வைப்பது மறக்கருணை.

மஞ்சக்குப்பம் 
ராமச்சந்திர முதலியார் குடும்பத்தோடு 
வள்ளல் பெருமானைத் தரிசிக்க வந்தார்.

இரவு நெருங்கி விட்டதால் அவரைத் 
தனியாக அனுப்ப 
வள்ளல் பெருமான் விரும்பவில்லை.

தானும் அவர்களின் 
மாட்டு வண்டியில் ஏறி அவர்களை ஊர் சேர்க்கப்
பயணப்பட்டார்.

வழியில் 
குள்ளஞ்சாவடி.
அது
திருடர்கள் நிறைந்த 
காட்டுப் பகுதி.

கள்வர்கள் 
வண்டியைச் சூழ்ந்து முதலியார் அணிந்திருந்த 
வைர மோதிரத்தைக்
கழற்றச் சொல்லி 
அதட்டினர்.

அதுவரை 
அமைதியாயிருந்த வள்ளல்பெருமான் "அவசரமோ..."
என்று கேட்டார்.

அதே வினாடியில் 
அந்த அற்புதம் 
நிகழ்ந்தது.

சூழ்ந்திருந்த கள்வர்கள் சிலைபோல் ஆயினர்.

தடியை ஓங்கியவனின் 
கை தூக்கியபடியே செயலிழந்தது.

"ஐயோ.... சாமி 
தவறிழைத்து விட்டடோம்" கதறினர் கள்வர்.

அமைதியாய்
இருந்தார் 
அருளாளர். 

"இனிச் சத்தியமாகத்
 திருட மாட்டோம்..."

அமைதியின் சொரூபம் அசையவில்லை.

"உயிர் தாருங்கள்...
இனி உழைத்து மட்டுமே உணவு உண்போம் "
உறுதி சொல்லினர். 

வள்ளல் பெருமான் 
திருவாய் மலந்தார்.
'பிச்' என்றார்.

சிலை போல் இருந்த 
திருடர்களால் 
அசைய முடிந்தது.
அடுத்த நொடியே 
அருளாளர் காலில் விழுந்தனர். 

இதுதான் 
மறக்கருணை.

தண்டித்துத் திருத்துவது. மறக்கருணை.

இடை விடாத 
இறை சிந்தனை. இடையிடையே 
உலகம் உய்ய 
உபதேசங்கள்.
உலகோரை 
உணரவைக்க 
சித்தாடல்கள்.

ஆண்டவரை 
உள்ளொளியாய் 
உணர்ந்து அனைவருக்கும் அவ்வனுபவத்தை வழங்க தயாராக இருந்த பேருள்ளம்.

இப்படியெல்லாம் 
இருந்தும் 
வள்ளல் பெருமானின் 
முகம் எப்போதும் 
வாடியே இருந்தது.

மக்கள் நெருங்கி 
வராத நிலை. 
நெருங்கி வந்த 
அன்பர்களும் 
உபதேசங்களை 
உள்ளத்தில் 
ஏற்றாத நிலை.

'கடைவிரித்தேன் கொள்வாரில்லையே '
என்னும் மனநிலை.

வந்த தன் நோக்கம் நிறைவேறாத ஏக்க நிலை. சித்தர்கள் பலருக்கும் 
நேர்ந்த நிலை.

உலகுக்கே உபதேசம் 
அருளிய 
வள்ளல் பெருமானின் 
உள் மனமோ 
வேறு ஒரு உபதேசம் சொல்லியபடியே இருந்தது.

இது 
சீரிய சித்தர்களுக்கே 
இயலும் நிலை.

வழக்கம்போல 
சித்தர்கள் 
இறையடி சேரும் 
இயல்பான நிலை அல்ல.

அதற்கு மேலே.

எந்த சித்தரும் 
அடையாத 
சித்தி நிலை.

முத்தேக சித்தி நிலை.


(சரித்திரம் விரியும்)



Leave a Comment