நொடிப்பொழுதில் நோய் தீர்க்கும் சித்தர்
- "மாரி மைந்தன்" சிவராமன்
வள்ளலார் சரித்திரம் பாகம் - 6
நாடி வரும்
அன்பர்களின்
நோய் நொடி
தீர்த்தல்
வள்ளல் பெருமானுக்கு மிகவும் பிடித்த காரியம்.
பிறர் துன்பம்
பொறுக்காத
பேரருளாளர்
அல்லவா !
உயிர் இரக்கத்தின் இலக்கணம்
அவர்தானே !!
கண்ணாடி
அப்பராய முதலியார் என்பவருக்குப்
பலகாலம் வாதநோய்,
அவரின்
நெடுங்கால நோயை
நொடி நேரத்தில்
தீர்த்து வைத்தார்.
கண்ணாடிப் புலவர் "அகத்தியனோ
வால்மீகியோ
ஆதிசேடனோ !"
எனப் புகழ் மாலை
பாடி மகிழ்ந்தார்.
இதே மாதிரி
சீர்காழியில்
ஓர்அன்பருக்குத்
திருநீறு கொடுத்து
பெரும்
குன்ம நோய் தீர்த்தார்.
கருங்குழியில்
குஷ்டநோய் கண்டிருந்த
பாலு ரெட்டியார்,
கண்நோய் பீடித்திருந்த
முத்துநாராயண ரெட்டியார், உள்நாக்கு வளர்ந்து வதைப்பட்ட
சேலம்
ஜவுளி வியாபாரி,
மகோரதம்
நோய் கொண்ட
வேட்டவலம் ஜமீன்தாரிணி, தலைமை மாணாக்கர் தொழுவூரார்...
என நோய்
நீக்கப் பெற்றவர்
பட்டியல் நீளும்.
நோய் நீங்கப்
பெற்றவரை
ஆட்கொண்டு
அவர்களை
அன்பெனும் பிடிக்குள் வைத்துக் கொண்டு
பல நற்பணிகளைச் செய்விப்பது பெருமானாருக்கு
கைவந்த கலை.
உணவு என்பதும்
பசி என்பதும்
பசி நீக்குதலும் பெருமானாரின்
திவ்ய சரித்திரத்தில் அனுதினமும்
நடந்த அற்புதங்கள்.
தர்மச் சாலையில்
அரிசி தீர்ந்து விட்டதாக தகவல் தருவார்கள்.
கவலையோடு
'மறுநாள்
பசி ஆற்றுவது எப்படி ?'
என்று
பதற்றத்தோடு
படுக்கச் செல்வர்.
இரவில்
மாட்டு வண்டி வரும்.
வண்டி நிறைய
நெல் மூட்டைகள்
அரிசி, பருப்பு
அணிவகுத்து வரும்.
வண்டி ஓட்டி சொல்வார், "நாங்கள்
திருத்துறையூரிலிருந்து வருகிறோம்.
எங்கள் எஜமானர்
கனவில் வந்து
பெருமானார்
அரிசி கேட்டு
உத்தரவிட்டார்."
சில சமயம்
தருமச்சாலையில் எதிர்பாராது
கூட்டம் கூடிவிடும்.
ஆக்கிய உணவு
தீர்ந்து போய்
கைகளைப் பிசைவர் பொறுப்பாளர்கள்.
வள்ளல் வருவார்.
உணவுச் சட்டியிலிருந்து பசித்தவருக்கு உணவு போட்டபடி இருப்பார்.
உணவு தீராது.
வந்தவண்ணம் இருக்கும். வயிறு பல நிறைக்கும்.
வாய் பிளந்து நிற்பர்
தர்மச்சாலையினர்.
ஒரு முறை
ஓரிடத்தில்
குடிக்கக்கூட
நீர் இல்லை என
மக்கள் அழுதனர்.
ஒரு சொம்பு
நீர் கொண்டு வந்து
தன் கால் மீது
கொட்டச் சொன்னார்.
மறுகணமே மழை
கொட்டோ கொட்டென்று கொட்டிப் பஞ்சம் தீர்த்தது.
அம்மக்கள்
வள்ளல் பெருமானின் திருவடிகளில் தஞ்சமடைந்தனர்.
இச்செய்தி கேட்டு
ஒரு நாள்
ஓர் ஊரே
திரண்டு வந்தது.
அவ்வூரில்
மழை பொழிந்து
பல காலம்
கழிந்திருந்தது.
குளம் குட்டை
கிணறுகள் எல்லாம் தரைகாட்டி தவித்தன.
பெருமானின் கருணை அவர்களின் ஊரான புதுப்பேட்டைக்கு கணப்பொழுதில்
கிடைத்தது.
ஆறு குடம் தண்ணீர் கொண்டு வந்து
ஊற்றச் சொன்னார்.
மேலே
மழை வெள்ளம்.
கீழிருந்தும்
ஊற்று வெள்ளம்.
ஆறு கூட
அளவில்லா நீருடன்
இருகரை தொட்டு
இறுமாப்பு கொண்டது.
இன்று கூட
அவ்வூர்ப் பக்கம்
தண்ணீர் பஞ்சமில்லை என்கிறது வரலாறு.
ரசவாதம் என்னும்
அற்புதச் சித்து
பிடிவாதமாய்
அவர் ஏவலுக்கு
காத்திருக்கும்.
ஏழை எளியோருக்கு
தங்கம் செய்து தருவார்.
அவர்கள் ஏழ்மை நீக்குவார்.
ரசவாதம்
கற்றுக்கொள்ள வந்த சுயநலக் கூட்டத்தை கண்டிப்போடு
ஒதுக்கி வைப்பார்.
ஒரு சமயம்
கூடவே இருந்த அன்பர் ரகசியமாய்
பொருள் சேர்த்து
ரசவாதம் செய்த போது
கண் போனதே
மிச்சமாய் இருந்தது.
அவரையும்
புத்தி சொல்லி
ஆட்கொண்டு
புத்தொளி வழங்கினார்.
வள்ளல் பெருமான்
ஞான சபையை
ரசவாதம் செய்து
பொருளீட்டிக்
கட்டி முடித்ததாக
அன்பர்கள் வியப்பர்.
ஞானசபையைச்
சுற்றியிருக்கும்
பிரமாண்ட சங்கிலி ஆரம்பத்தில் அனைத்தும் தங்கமாய் தான் இருந்தது.
பின் தான்
வள்ளல் பெருமான்
இரும்புச் சங்கிலியாய் மாற்றினாராம்.
நாடிவரும் அன்பர்களின் வேண்டிய உதவிகள் பூர்த்தியானதும்
மீதம் இருப்பதை
கிணற்றில் வீசி
அழித்து விடுவாராம்
பற்றற்றப் பெருமகனார்.
பெருமானாரின்
உருவமும் உடையும்
நடையும் பேச்சும்
பணிவும் ஒழுக்கம் நிறைந்தது.
வாழையடி வாழையென
வந்த திருக்கூட்ட மரபில் வேறெந்த ஞானிகளிடம் காண முடியாதது.
ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு பார்வையிலும் ஒவ்வொரு பேச்சிலும் ஒவ்வொரு செயலிலும் அன்பும் கனிவும் பணிவும் தயையும் இறையும் இணைந்திருக்கும்.
மெலிந்த உடல்.
நடுத்தர உயரம்.
நிமிர்ந்த தோற்றம்.
அழகிய திருமுகம்.
ஒளி வீசும் கண்கள்.
இவையே
வள்ளல் பெருமான்.
உடை வெள்ளை.
இரண்டு ஆடை
உடல் முழுதும் மறைக்கும். முக்காடு தலை மறைக்கும்.
ஊர் உலகத்திற்கு உணவளித்த
அவரின் உணவு
மிக சாதாரண
சாத்வீக உணவே.
சிலகாலம்
இருவேளை உணவு. காலப்போக்கில்
இரண்டு மூன்று தினங்களுக்கு ஒரு முறை.
பல நாட்கள் பட்டினி. பின்னாளில்
உணவையே தவிர்த்தார்.
உறக்கம் பெருமானுக்கு
ஒரு பொருட்டல்ல.
இளமையில்
நாலு மணிநேரம்.
பின் அது ஆனது
இரண்டு மணி நேரம். அதுவும் தேய்ந்து
ஒரு மணி ஆனது. பிற்காலத்தில்
தூக்கமே இல்லை.
நடையும் பாவனையும் அடக்கம் நிறைந்தது.
கைகட்டிய நிலையே
அவரது நித்திய நிலை.
அதிர்ந்து பேசுதலோ
அதிர நடப்பதோ
அவரிடத்து இல்லை.
கைகளைக் கூட
வீசி நடக்க மாட்டார்.
கை கட்டியபடியே நடப்பார்.
காலில்
அதுவரை
எச்சித்தரும்
அணிந்திராத
ஆற்காடு ஜோடு.
பெயரையும் புகழையும் சற்றும் விரும்பார்.
யாருக்கும் தெரியாமல் இருப்பதே
அவருக்குப் பிடித்த ஒன்று.
எப்போதும் உலகக் கவலை. உள்ளத்தில்
பரம்பொருளைச் சேர பெருங்கவலை.
அதனால்
எப்போதும்
கவலை தோய்ந்த முகம். சட்டென உருகிக்
கண்ணீர் விடும் கண்கள்.
இறை சிந்தனை
ஒன்றே அவரது
அகத்தில் நிறைந்திருக்கும்.
தமிழறிஞராயினும்
ஆன்மிக ஆர்வலராயினும் அவர்களுக்கு
உரிய உதவி புரிந்து ஆட்கொண்டு
அரவணைப்பது
அவர் சிறப்பு.
கல்பட்டு ஐயாவைத்
தேடிச்சென்று அருள்பாலித்தார்
அருளாளர்.
இன்று அவரும்
வடலூரில்
அருள்பாலித்துக் கொண்டிருக்கும்
பேறு தந்தவர்
வள்ளல் பெருமான்.
பல இடங்களில்
ஒரே சமயத்தில்
தோன்றி அன்பர்களை ஆச்சரியப்படுத்துவதும்
வள்ளலாரின் வழக்கம்.
கடலூர்
பேரை தேவநாதன்
பெருமானின் பக்தர்.
அவரது
அன்பு மகன்
அய்யாசாமி
ஒருநாள் இரவில்
நோயால் துடித்தார்.
துடிப்பைக்
காணச் சகிக்காத
தந்தை தேவநாதன்
வள்ளல் பெருமானை நினைத்து நினைத்து தியானத்தில் ஆழ்ந்தார்.
தியானத்தைக்
கலைத்தது
கதவை தட்டும்
மெல்லிய ஓசை.
ஓடிப் போய்
கதவைத் திறந்தால்
வேண்டி நின்ற
அன்பர் அருகில்
நின்றார்
வள்ளல்பெருமான்.
கட்டிலில்
துடித்த வண்ணமிருந்த
மகனைஅன்பொழுகப் பார்த்தார்.
அருள் ஒழுக
திருநீறு பூசினார்.
சில நிமிடங்களில்
துடிப்பும் களைப்பும்
நோயும் துடுக்கென
ஓடி விடைபெற்றன.
புத்துணர்வோடு
துள்ளி எழுந்த
அய்யாசாமி
பெருமானை
வணங்கினார்.
இருவரும்
வியந்து நிற்க
பெருமானார்
விடைபெற்றார்.
மறுநாள்
தருமச்சாலைக்கு
அப்பாவும் மகனும்
ஆவலுடன் வந்தனர் பெருமானுக்கு
நன்றி சொல்ல.
அவர்களைப்
பார்த்த மாத்திரத்தில்
எதிர்கொண்டு
வழக்கத்திற்கு மாறாக வேகமாய் வந்தார் வள்ளல்பெருமான்.
"நேற்று இரவு வந்ததை
இங்கு யாரிடமும் சொல்லாதேங் காணும்.."
"சரி '
என்ற தேவநாதன்
ஆர்வக் கோளாறினால் அங்கிருந்தவர்களிடம் அளவளாவின் போது பெருமான் இரவு எங்கிருந்தார்
என கேட்டார்.
முதல் நாள் இரவு
நீண்டநேரம்
சத்சங்கம் நடந்ததாகச் சொல்லி பெருமானின் பேச்சைச் சிலாகித்தனர் அவர்கள்.
தேவநாதன்
முதல் நாள் இரவு
தங்கள் வீட்டிற்குப்
பெருமான் வந்ததை பெருமையோடு
சொன்னார்.
தர்மச்சாலை முழுதும்
செய்தி பரவ
உலகிற்கு ஓர் உண்மை தெரிய வந்தது.
அது
வள்ளல் பெருமான்
பல இடங்களில்
ஒரே நேரத்தில் காட்சியளிப்பார்
என்பதே.
இப்படித்தான்
ஒருமுறை
திருபொதிகைக்கு
வழிபடச் சென்றார்.
அது திருவிழாக் காலம். கூட்டம் அலைமோதியது.
பெருமானைக் கண்டதும் அவரை வழிபட
ஆர்வம் கொண்டது.
தள்ளுமுள்ளு.
அடிதடி,
மக்களுக்கு நெருக்கடி.
பொறுப்பாரா
பூமனத்தார் ?
அங்கே கூட்டத்தில்
பல இடங்களில்
ஒரே சமயத்தில் தோன்றி பக்தர்களை ஆசீர்வதித்தார் அருளாளர்
வள்ளல் பெருமான்.
இன்னொருமுறை.
பெருமானைத்
தரிசிக்க வந்தது
அன்பர் கூட்டம்.
தருமச்சாலையிலிருந்து உலாவப் புறப்பட்டார்
வள்ளல் பெருந்தகை.
அதுபோது
தனித்து இருப்பது
அவர் வழக்கம்.
அன்பர்கள் விரைந்து நெருங்கிவர வர
அவரோ அப்போதும்
தொலைவிலிருந்தார்.
அவர்கள்
விரைந்து நெருங்கி நிற்க அப்போதும் பெருமான் தொலைவில் காணப்பட்டார்.
இந்த அதிசயம்
மாயாஜாலம் அல்ல.
சித்தர் ரகசியம்.
சத்திய தருமச்சாலை
கட்டடப் பணிக்கு
மரம் வாங்கும் நேரம்.
காண்ட்ராக்டர்
ஆறுமுக முதலியார் சென்னைக்குச் செல்வதாகவும்
பெருமானும் கூட
வர வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தார்.
' ஆகட்டும் பார்க்கலாம் '
என்றார் அருளாளர்.
மறுநாள்
சென்னை மரக்கடையில் பெருமான் முன்னதாகவே காத்திருந்து
ஆறுமுக முதலியாருக்கு
உதவியாய் இருந்தார்.
ஆனால்
அதேநேரம்
வடலூரில் நடமாடிக் கொண்டிருந்தார்.
விஷயம் தெரியவர
இந்த அற்புதம் பெருமானாரின்
புகழைப் பாடியது.
- வரலாறு விரியும்.
Leave a Comment