ஒளி தேக நிறை ஞானி


- "மாரி மைந்தன்" சிவராமன்

வள்ளலார் சரித்திரம் பாகம் - 4


ஆரவாரம் நிறைந்த சென்னையும் 
அன்பு நிறைந்த 
உற்றாரும் உறவினரும்
ஒருவித அமைதி தேடிய வள்ளல் பெருமானுக்கு சுமையாகப் பட்டனர்.

வயதோ முப்பத்தைந்தை எட்டிப்பார்த்து இருந்தது.

சிதம்பரம் 
நடராஜர் வேறு 
அடிக்கடி கனவிலும் நினைவிலும் 
ஏக்கத்தோடு 
அழைத்தார்.

கடைசியாக 
குழந்தையாக 
ஐந்து மாதத்தில் 
பார்த்தது.

தேச சஞ்சாரம் திருக்கோயில்கள் 
ஏழை எளிய 
பாவப்பட்ட மக்கள் விருப்பமாக இருந்தது.

இறை தேடலை 
ஒட்டி 
ஞானத்தேடல் 
பாக்கியிருந்தது.

சென்னைக்கு விடைகொடுத்தார்.

வள்ளலாரின் 
ஞானப் படை 
தரைவழிப் பயணமாய் ஒவ்வொரு கோயிலாக வழிபட்டு 
சிதம்பரம் வந்தது.

வழிபட்டது.

அங்கு கோயிலில் 
வள்ளல் பெருமான் மீது கருங்குழி மணியக்காரர் வேங்கட ரெட்டியார் விழிபட்டது.

"எனது இல்லத்தில் தங்குங்கள்...

அங்கிருந்தபடியே 
கோயில் கோவிலாய் போகலாம்.
ஆன்மீகம் அருளலாம். தமிழமுது படைக்கலாம்."

மறுக்க விடாமல் 
வற்புறுத்தி 
கருங்குழிக்கு அழைத்துச்சென்றார்.

ஒன்பது ஆண்டுகள் கருங்குழியே 
வள்ளல் பெருமானின் வசிப்பிடம் ஆனது.

இக்காலத்தைச் 
சிதம்பர வழிகாட்டு காலம் என வரலாறு
குறிப்பிட்டு மகிழ்கிறது.

நான்காம் திருமுறையும்
ஆறாம் திருமுறையின் முற்பகுதியும்
இக்காலத்தில் 
வள்ளல் பெருமானால் அருளப் பெற்றன. 

கருங்குழியில் 
இரவுநேரத்தில் எழுதுவது வள்ளல் பெருமானின் வழக்கம்.

ஒரு நாள்
விடிய விடிய 
எழுதினார்.

வெளிச்சம் குறையவே அருகில் இருந்த 
எண்ணெய் செம்பைக் கவிழ்த்து ஊற்றி எழுத்துப்பணி 
தொடர்ந்தார்.

மறுநாள் காலை 
ஓர் உண்மை 
அதிசயமாய் 
உலகிற்குத்
தெரியவந்தது.

எண்ணெய் செம்பில் 
அன்று எண்ணெய் இருக்கவில்லை.

எண்ணெய் 
ஊற்றி வைக்கும் 
பணி செய்யும் 
ரெட்டியார் வீட்டம்மாள் 
ஏதோ 
ஊருக்குச் செல்லும் அவசரத்தில் 
தவறிழைத்து விட்டார்.

புதிய செம்பில் 
நீர் ஊற்றி 
அதை பதமாக்க 
ஓரத்தில் வைக்க நினைத்தவர் 
ஏதோ நினைப்பில் வள்ளல்பெருமான் 
பக்கத்தில் வைத்துவிட்டார்.

மறுநாள் காலை...
வள்ளல் பெருமான் தண்ணீரில் 
விளக்கெரித்த தன்னிகரில்லா 
தவ ஆற்றல் 
ஊருக்குத் தெரியவர அன்பர்கள் 
கொண்டாடி வணங்கினர்.

தண்ணீரில் விளக்கெரித்து
தன்னிகரில்லா 
அகவல் அருளியதும் 
அன்று இரவு தான்.

அன்று
ஓர் இரவில் 
பெருமாள்
திருக்கரத்தால் 
அருளியது தான் 
இன்றளவும்
ஒப்புயர்வற்ற 
ஞான பொக்கிஷமாக
விளங்கும் அகவல்.

வள்ளலார் அருளிய
அருட்பெருஞ்ஜோதி அகவல்
தமிழ் இலக்கிய உலகில் எழுதப்பட்ட 
1596 அகவல் பா
வரிகள் கொண்ட
முதல் மற்றும் முதன்மை இலக்கியம்.

இன்றளவும் 
அதை விஞ்சிய 
அகவலும் இல்லை.
ஞானமும் இல்லை.

உபதேசம் 
நோய்க்கு மருந்து அற்புதங்கள் 
சித்தாடல்கள் 
என்பன 
அக்கம்பக்கம் பரவி அன்பர்கள் பெருகினர் 
இக் காலகட்டத்தில்.

அவரது 
ஆன்மீகக் கட்டமோ 
தேடலை அடுத்து 
ஞானத்தை 
நெருங்கி நின்றது.

ஆம்....
வள்ளல்பெருமான் 
சமரச சுத்த சன்மார்க்கம் என்ற புதிய நெறியை உணர்ந்து திளைக்கும் உயர்ந்த நெறியை பின்னாளில்
உலகுக்கு 
அர்ப்பணித்தார்.

'கடவுள் ஒருவரே.
உண்மை அன்பால் 
அவரை ஒளி வடிவாய் உணரலாம்.
வழிபடலாம்.

அவரே 
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் '
என்று இறைவனை வணங்கவும்
வழிபடவும் 
நெருங்கவும் 
உணரவும் 
வழி சொன்னார்.

வாழ்வியல் நெறிகளை வரிசைப் படுத்தினார்.

சன்மார்க்க 
கொள்கைகளை
அறிவித்தார்.

ஒரு நன்னாளில்
சுத்த சன்மார்க்கத்தை கருங்குழியில் நிறுவினார்.

அதுவரைத் 
தான் உள்பட 
உலகத்தார் வணங்கிய தெய்வங்கள் யாவும் 
மறை தெய்வங்கள் 
என்றும் 
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான் 
நிறை தெய்வமென 
தான் உணர்ந்ததை 
உலகிற்குச் சொன்னார்.

புலால் மறுத்தலும் பசித்தவருக்கு உணவிடுதலும் ஜீவகாருண்யம் 
என்றும் 
ஜீவகாருண்யமே 
மோட்ச வீட்டின் திறவுகோல் என்றும் 
ஜீவகாருண்யம் இல்லாத இறை வழிபாடு பயனற்றது இறையிடம் சேர்க்காது என்றும் 
உண்மை சொன்னார்.

அன்பர்கள் சேர்ந்ததால் ஆர்ப்பரிப்பது
வள்ளலாரின்
வழக்கமில்லை.

குறைவான பேச்சும் நிறைவான தவமும்
அவரது 
வாழ்வியல் கொள்கை.

பசியாற்றும் 
அன்னதான பணிக்கு 
சத்திய தருமச்சாலையை வடலூரில்
1867-இல் துவக்கினார்.

அவர் 
இட்ட கருணைத் தீ 
இன்றும் அணையா 
அடுப்பாய் 
154 ஆண்டுகளாய் 
அன்பர்கள் பசியை 
ஆற்றி வருவது 
உலகமே வியந்து போற்றும் அறப்பணி.

உலகிற்கே வழிகாட்டும் ஜீவகாருணியப் பணி.

ஊரும் உலகமும் 
வள்ளல் பெருமானை ஊன்றிப் பார்த்து 
வியந்த வேளை.... 

தொழுவூர் 
வேலாயுதனாரும் 
இறுக்கம் 
ரத்தினசாமி முதலியார் போன்றோரும் 
வள்ளல் பெருமான் 
அதுவரை 
அருளியவற்றைத் தொகுத்து ஐந்து திருமுறைகளாக வெளியிட்டனர்.

அவரது பாடல்களை திருஅருட்பா என்றும் 
அவரை 
திருஅருட்பிரகாச வள்ளலார் என்றும் 
உலகம் அழைக்க ஆரம்பித்தது.

இதற்கு வித்திட்டவர் தொழுவூராரே.

திருவருட்பா என்றும் திருமுறை என்றும் 
பெயர் சூட்டப்பட்டதற்கு எதிர்ப்பும் வழக்கும் 
வந்தது.

அது காலப்போக்கில் காணாமல் போனது.

தர்மச் சாலை 
தொடங்கப் பெற்றதும்
கருங்குழி விடுத்து 
வடலூர் வந்தார் 
வள்ளல் பெருமான்.

தர்மச் சாலையே இருப்பிடமானது.

வடலூர்
தமிழக வரைபடத்தில் முக்கியம் ஆனது.

இறையனுபவம் 
தேடுபவர்களின்
புகழிடம்
புகலிடமானது.

தனிமை வேண்டி 
வள்ளல் பெருமான் 
அருகிருக்கும் 
மேட்டுக்குப்பம் சென்று அங்கேயே உறையத் தொடங்கினார்.

சித்தி வளாகம்.

மேட்டுக்குப்பத்தில் பெருமானார் தங்கிய திருமாளிகை.

அதன் பெயரை 
சித்தி வளாகம் 
என வைத்த 
பெருமான் மனதில் 
ஒரு கணக்கு இருந்தது. 
அது இறை சித்தம்.
 அவருக்கு மட்டும் உணர்த்தப்பட்ட 
நிறைநிலை.

சித்தி வளாகத்தில் 
இருந்த படி 
சத்திய ஞானசபையை உருவாக்கினார் 
வள்ளல் பெருமான்.

ஞான சபையில் 
ஏழு திரைகள் அமைத்து
ஏழு தத்துவங்களை 
விளக்கி 
எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதியை அனுபவமாய் 
உலகுக்குக் காட்டினார்.

அதை உணர்வோர் கூட்டம் ஞான சபையை 
கோயிலாகக் கொண்டு இன்றும் கூடி வழங்குவது கண்கூடு.

ஞான சபையைத் 
தொடர்ந்து 
சன்மார்க்கத்தின் 
கொடியைப் படைத்தார்.

கொடியைப் பறக்க விட்டு பெருமான் உபதேசித்தது 
மகா உபதேசம் 
பேருபதேசம் 
என்ற பெயரோடு 
ஞான வழிகாட்டி வருகிறது.

அதுவே 
வள்ளல் பெருமானின் தீர்க்கமான கொள்கை வழிபாடு.


அது 
1874 ஆம் ஆண்டு.

கார்த்திகைத் தீபத்தன்று 
ஒரு விளக்கைச்
சித்திவளாகத் திருமாளிகையில் 
புறத்தில் வைத்தார்.

'இதை ஜோதியாய் ஆராதியுங்கள்.
தடைபடாது ஆராதியுங்கள்... நினைந்து நினைந்து 
என்று தொடங்கும் 
ஞான சரியை
28 பாடல்களாக அருளப்பட்டுள்ளது.

அதனைப் பாடியபடி 
தெய்வ பாவனையை ஜோதியில் செய்யுங்கள்.

நான் இப்போது 
இந்த உடம்பில் 
இருக்கிறேன்...

இனி 
அனைத்து உடம்பிலும்
புகுவேன்.'

உபதேசித்தார் 
மெல்லிய குரலில்.

'அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி '
என்று உள்ளம் உருகி குரலெழுப்பியது 
அன்பர்கள் கூட்டம்.

'சாகாதவனே சன்மார்க்கி' என்பது 
வள்ளல் பெருமானின் உபதேச மொழி.

பெருமானார்
அறைக்குள் நுழைந்தார்.
கதவு சாத்தப்பட்டது.
பெருமானின் உருவம் உலகின் கண்களில் 
இருந்து மறைந்தது.

அன்பர்கள் 
இக்கணம் வரை 
அவர் வரவுக்கென 
வழிமேல் விழிவைத்து 
காத்த வண்ணம் இருப்பது ஒருபுறம் இருக்கட்டும்.

அறைக்குள்ளே 
நடந்தது என்ன ? 
என்ன நடந்திருக்கும் ?

வள்ளல் பெருமான் இறையோடு இறையாக இரண்டறக் கலந்துவிட்டார்.

உலகில் 
பல சித்தர்கள் 
இப்படித்தான் 
கலந்தார்கள். 

ஆனால் 
நிறைஞானியான 
வள்ளல் பெருமான் 
ஒளி தேகம் பெற்றவர்.

அதனால் அருட்பெருஞ்ஜோதியில் ஒளியாய் கலந்துவிட்டார். கரைந்து விட்டார்.

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை போல் 
வள்ளல் பெருமானும் எல்லாவற்றிலும்
வியாபகம் ஆனார்.

பிறப்பில் 
வளர்ப்பில் 
எழுத்தில் 
பேச்சில் 
சித்தாடல்களில் 
அருளில்
மட்டுமில்லாது 
நிறைவிலும் 
உலகை 
வியக்க வைத்தவர் 
வள்ளல் பெருமான்.

(வள்ளலார் சரித்திரம் விரியும்)
 



Leave a Comment