அண்ணனை விஞ்சிய தம்பி


- "மாரி மைந்தன்" சிவராமன்

வள்ளலார் சரித்திரம் பாகம் -3

வள்ளல் பிரானின் அண்ணன் 
சபாபதி பிள்ளைக்கு 
ஒரு சனிக்கிழமை அன்று 
கடும் சுரம்.

சனி தோறும் அவருக்கு 
சோமு செட்டியார் என்னும் 
செல்வந்தர் வீட்டில் சொற்பொழிவு இருக்கும்.

மனைவியின் 
பரிந்துரையின் பேரில் தம்பியை 
அனுப்பி வைத்தார் 
சுரத்தில் மூழ்கிய 
சபாபதி பிள்ளை.

ஆன்றோரும் சான்றோரும் கூடியிருந்த 
சபையில் சின்னஞ் சிறுவரான 
வள்ளல் பெருமான் 
பேசிய பேச்சு 
அதுவரை...... ஏன் 
இன்றுவரை 
தமிழ் உலகும் 
ஆன்மீக உலகும் 
கேட்டிராத பேச்சு.

ஞானப்பால் அருந்திய ஞானசம்பந்தரின் 
திவ்விய சரித்திரத்தை ஞானச்செல்வன் 
நீண்ட நேரம் 
பிரசங்கம் செய்தார்.

வழக்கத்திற்கு மாறாக நள்ளிரவு வரை 
நீண்டிருந்தது சத்சங்கம்.

ஆனால் 
பாடல் வரிகளில் 
இரண்டு வரிக்குத் தான்
விளக்கம் சொல்லியிருந்தார்.

சொற்பொழிவின் போது
'உலகெலாம்' என்ற சொல்லை 
அவர் விளக்கிய விதம் அத்தனை பேரையும் வியப்பில் ஆழ்த்தியது.

அன்றுதான் 
வள்ளல் பெருமானின் பேச்சாற்றல் 
ஊருக்குத் தெரிந்தது.

மறுநாள் 
சொற்பொழிவுக்கு அழைப்பதற்காக 
சோமு செட்டியார் தரப்பு பிரமுகர்கள் 
வந்திருந்தார்கள்.

சபாபதி பிள்ளை 
அவர்களை வரவேற்று உபசரித்து 
காய்ச்சல் சரியானவுடன் 
வந்து விடுவதாகச் சொன்னார்.

ஆனால் வந்தவர்களோ,
"ஐயா...  நீங்கள் நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்...
உங்கள் தம்பி 
உங்களை விட பிரமாதமாக சொற்பொழிவாற்றினார்.
செட்டியார் 
உங்கள் தம்பியைத் தான் பேசி சம்மதம் 
பெற்று வரச் சொன்னார்..."

என்று சொல்ல 
முகம் சுருங்கியதே தவிர 
மனம் விரிந்து மகிழ்ந்தது சபாபதி பிள்ளைக்கு.

பின்னொரு நாள்...

வள்ளல்பெருமான் பேச்சை  மறைந்து நின்று கேட்டு 
பிரமித்துப் போனார் அண்ணன்.

அதுமுதல் 
அண்ணன் பெருமைப்படும் தம்பி ஆனார் 
வள்ளல் பெருமான்.

சிதம்பரம்
அப்பைய தீட்சிதர்
சொல்லிய சொற்கள் உண்மையாவதைக் கண்ட சபாபதி பிள்ளை 
தம்பியைத் 
தெய்வக்குழந்தை 
என உணர்ந்து
தொழவும் 
தயங்கவில்லை.

ஒன்பது வயதில் கண்ணாடியில் 
காட்சி தந்து 
ஆட்கொண்ட இறைவன் 
12 வயதில் 
அருளியல் வாழ்க்கைக்கு ஆணையிட்டார்.

வள்ளல் பிரானின்
அருளியல் வாழ்க்கை தொடங்கியது.

தினமும் கால்நடையாக திருவொற்றியூர் சென்று 
தியாகராஜப் பெருமானையும் 
வடிவுடை அம்மனையும் வழிபடுவார்.

அக்கோயில்
முருகன் சிலைக்கு 
முன் நின்று 
திருத்தணி முருகனாக பாவித்துக் கவி பாடுவார்.

இடையிடையே திருத்தணி விஜயமும் இனிதே நடந்தது.

இவையே 
வள்ளல் பெருமானின் 
35 வயது வரை நிகழ்ந்த ஆன்மிக நிகழ்வுகள்.

அவர் திருவாய் மலர்ந்தவை தமிழுக்கு கிடைத்த 
அற்புத பாடல்கள் ஆகின.

பின்னாளில் 
திருமுறைகள் ஆகின.

சென்னையில் 
இருந்த காலம் 
பெருமானின் 
வாழ்க்கைக் தடத்தில் 
அருளும் ஆன்மீகமும் 
ஆற்றலும் தமிழும் 
செழித்த காலம்.

ஓதாது உணர்ந்த பெருமானிடம் 
ஆன்றோரும் சான்றோரும் கற்றோரும் 
கவி படைப்போரும் 
மேலும் கற்க 
தேடி வந்தனர்.

எந்நேரமும் 
சூழ்ந்து நின்றனர்.

காலையிலே சிறுவர்களுக்கான வகுப்பு.

மதியம் 
தமிழ் 
ஆர்வலர்களுக்கான புலவர்களுக்கான 
தமிழ் வகுப்பு.
இலக்கண வகுப்பு.

மாலை சத்சங்கம்.
கூடவே 
திருவொற்றியூர் பயணம்.

இதுவே பெருமானின் அன்றாட நிகழ்ச்சி நிரல்.

எண்ணற்ற 
தமிழ் வித்துவான்கள் புகழ்பெற்ற தமிழ்க் கடல்கள் 
பெருமானிடம் வந்து சேர்ந்து தமிழ் கற்றது 
அவரால் புலமை பெற்றது வரலாற்றுப் பதிவு. 

வள்ளல் பெருமானின் 
முதல் மாணாக்கர் 
என்ற பெருமை பெற்றவர்  
தொழுவூர் வேலாயுதனார்.

பெருமானோடு சேர்ந்து
தமிழ் மணம் பரப்பிய பேறுபெற்றவர் அவர்.

தொழுவூரார்
பெருமானைத் 
தொழுத நிகழ்வு சுவாரசியமானது.

பெருமானாரைச் 
சந்திக்க நினைத்த தொழுவூரார் 
அவரைச் சோதித்தறிய முற்பட்டார்.

தானே கடின நடையில் 
நூறு செயல்களை இயற்றி அவற்றைக் கையோடு 
எடுத்து வந்து 
பழைய ஏடுகளில் 
காணப்பட்ட 
சங்கப் பாடல்கள் என பெருமானார் கைகளில் வைத்தார்.

படித்துப் பார்த்த 
மாத்திரத்தில் 
"இவை 
சங்கப்பாடல்கள் இல்லை...
யாரோ 
பொருளிலக்கணம் தேரா கடைக்குட்டி பாடியவை"
என்று புறம் தள்ளினார் தமிழ்ப் புலமையில் இணையற்ற 
இறைப் புதல்வர் தமிழ்த்தாயின் 
தவப்புதல்வர் வள்ளல் பெருமான்.

தொழுவூரார் 
நாணிக் கோணி 
தாள் பணிந்தார்.
பெருமானிடம் 
மன்னிப்புக் கோரி சரணடைந்தார்.

அது முதலே 
வள்ளல் பெருமானின் சீடரானார்.
அவருடனேயே இருந்தபடி தமிழ்ச் சேர்த்தார். 
பெரும்புலவர் ஆனார்.

பின்னாளில் 
மாநிலக் கல்லூரியின் தமிழ்த்துறைப் 
பேராசிரியராக உயர்ந்தார்.

'உபய கலாநிதி பெரும்புலவர்'
என பட்டமும் பெற்றார்.

இறுக்கம் இரத்தினம் முதலியார் 
பொன்னேரி சுந்தரம் நரசிங்கபுரம் வீராசாமி 
பாயாறு ஞானசுந்தரம் ஐயர் கிரியா யோகா 
பண்டாரம் ஆறுமுகம் ஐயா 
என பயின்றவர் 
பட்டியல் நீளும்.

இதுதவிர 
தமிழ் பெரியார்கள் 
பெரும் புலவர்கள் வள்ளல்பெருமான் தொடர்பில் இருந்தனர்.

ஒரு முறை
அப்போதைய சங்கராச்சாரியாருக்கு வடமொழியில் 
ஒரு சந்தேகம்.

அதைத் தன் மாணாக்கர் தொழுவூராரைக் கொண்டு தீர்த்து வைத்தார்.

இப்படி ஆன்றோர் சான்றோர் பலர் 
சந்தேகம் கேட்டு தெளிந்தனர். 
சத்சங்கம் கேட்டு சிறந்தனர்.

சென்னையில் வாழ்ந்த காலகட்டத்தில்தான்
நூல்கள் பல அருளினார். அரிய நூல்களைப் புதுப்பித்தார்.
பதிப்பித்தார்.

மாயூரம் 
வேதநாயகம் பிள்ளை போன்றோருக்கு 
சாற்றுக் கவி அளித்தார்.

அருளியல் வாழ்க்கையை 
12 வயதில் தொடங்கி 
இறை அருளுக்கும்
தமிழ் அருள்வதற்கும் தன்னை 
அர்ப்பணித்துக் கொண்ட வள்ளல் பெருமானுக்கு 
வந்தது ஒரு தொந்தரவு 
27 வயதில்.

பிள்ளைப் பருவத்திலேயே மூவாசைகளையும்
முற்றும் துறந்து 
துறவொழுக்கம்
பூண்டவருக்கு 
ஓர் அன்பு நெருக்கடி.

தமையனும் தாயும் சகோதரிகளும் சகோதரர்களும் 
தந்த குடும்பப் பிடி.

சகோதரி உண்ணாமுலை அம்மையாரின் மகள் 
தனகோடி அம்மாளைத் திருமணம் செய்துகொள்ள நிர்ப்பந்தித்தனர்.

எவ்வளவோ மறுத்தும் 
வீட்டாரே வென்றனர்.

பெருமான் 
இறைவனை 
வேண்டியபடி 
தாலி கட்டினார்.

முதலிரவன்றே 
தன் நிலையை 
விளக்கினார். 
வீட்டார் ஏற்காத 
வள்ளலின் சிந்தனையை கட்டிய மனைவி 
கலங்கியபடி 
முழுதும் ஏற்றார்.

பெருமானாரின் துறவறப்பயணம் 
மனம்போல் தொடர்ந்தது.

-    வள்ளல்பிரானின் சரித்திரம் தொடரும்..
 



Leave a Comment