ஓதாது உணர்ந்தவர்
- "மாரி மைந்தன்" சிவராமன்
வள்ளலார் சரித்திரம் பாகம் - 2
இறை அருளோடு
இராமையா பிள்ளை சின்னம்மை தம்பதியரின்
செல்லக் குழந்தை....
சிதம்பரம் நடராஜப் பெருமானின்
அருட்பார்வையைத் தரிசித்த ஞானக்குழந்தை
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வந்தது.
குழந்தையைப் பார்க்க வரும்
உற்றாரும் உறவினரும் ஒன்றை உணர்ந்தனர்.
பார்த்துவிட்டுத் திரும்பிய மாத்திரத்தில் ஆகாத காரியங்களெல்லாம் ஆகத் தொடங்கின.
அகமகிழ்ந்து
குழந்தையைக்
'குழந்தை வடிவில்
தோன்றிய குமரவேல் '
எனப் போற்றினர்.
ஆனால்
காலச் சக்கரத்தின் சுழற்சி அப்படி ஒன்றும்
கனிவாய் இருக்கவில்லை.
தந்தை
இராமையா பிள்ளை
காலமானார்.
தாய் சின்னம்மை
தன் தாய் வீடு இருந்த சின்னகாவனம் சென்று
சில காலம் இருந்து பார்த்துவிட்டுப்
பிழைப்பிற்காக சென்னையில்
குடியமர்ந்தார்.
சின்னம்மைக்கு
மொத்தம்
ஐந்து குழந்தைகள்.
மூத்தவர் சபாபதி பிள்ளை
ஐந்தாவது கடைக்குட்டியே
இறை விரும்பிய இராமலிங்கம்.
சபாபதி பிள்ளையின் வருமானத்தில்
வறுமையை விரட்டி வாழத் தலைப்பட்டது
வள்ளலின் குடும்பம்.
சபாபதி பிள்ளை
சிறு பிள்ளைகளுக்குப்
பாடம் சொல்லித் தருவார்.
கணக்கு எழுதுவார்.
நில அளவைக்குச் செல்வார்.
இவையே வருமானம்.
அப்பா இல்லாத
பிள்ளையைத் தப்பாக வளர்த்து விடக்கூடாது
என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தார் சபாபதி பிள்ளை.
அவருக்கு வாய்த்த மனையாட்டி
பாப்பாத்தி
ஓர் அற்புதத் திருவாட்டி.
அன்னையாய்
கணவரின் தம்பியை அரவணைத்தார்.
தாயினும் மேலாய்
தயவுடன் வளர்த்தார்.
சபாபதி பிள்ளை
தம்பி இராமலிங்கத்திற்கு அடிப்படைக் கல்வி
சொல்லித் தந்தார்.
கல்வியில்
தம்பி காட்டாத அக்கறை
வருத்தத்தைத் தந்தது.
அடுத்த கட்டமாய் பள்ளிப்பருவத்தில்
தனக்கு கல்வி தந்த காஞ்சிபுரம்
மகாவித்துவான்
சபாபதி முதலியாரிடம் சேர்ப்பித்தார்.
பள்ளிக் கல்வியிலும்
வள்ளல் பிரானுக்கு நாட்டமில்லை.
அவர் நோட்டம் எல்லாம்
பள்ளி செல்லும்
வழியில் இருந்த
கந்தக் கோட்டம்
கந்தவேல்
மேல்தான் இருந்தது.
பள்ளிக்கு வராது
கோயிலில் ஒதுங்கும் இராமலிங்கத்தின்
பின் சென்று பார்த்தார்கள் உடன் படித்த மாணவர்கள்.
அவர்
சிறுவயதுக்கு மாறாக
அந்த இளம்
பிராயத்திலேயே
இறைவன் திருவடி பற்றி...
'ஒருமையுடன்
உனது திருவடி
நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு
வேண்டும் '
என இயல்பாய் பாடிக் கொண்டிருந்தார்.
'வேண்டாம்... வேண்டாம்'
என
எதிர்மறையாய்
பாடல்கள்
உலா வந்த காலத்தில்...
'வேண்டும்.... வேண்டும் '
என்று இறைவனை
வேண்டிக் கொண்டிருந்தார்.
ஆசிரியர் சபாபதி முதலியாருக்கு
எளிதில் புரிந்தது.
'ஒன்பது வயது
இராமலிங்கம்
சாதாரண மாணாக்கன் அல்ல.
ஏற்கனவே
எங்கேயோ
கற்று முடித்தவன்.
அவனுக்குக் கற்பிக்க ஏதுமில்லை.
எல்லாம் அறிந்தவன். கல்லாது பெற்றவன்.
ஓதாது உணர்ந்தவன்.'
பிரமிப்பு நீங்காமல்
சபாபதி பிள்ளையை
அழைத்தார்
வித்துவான்
சபாபதி முதலியார்.
"அப்பா... உன் தம்பி
கற்பிக்கத்
தகுந்தவன் அல்ல..."
அடுத்து
அவர்
'ஞானம் செறிந்தவன்..'
என்று சொல்வதற்குள் கோபத்தோடு
தம்பியை
இழுத்துக்கொண்டு
வீடு திரும்பினார்
சபாபதி பிள்ளை.
வீடு
அல்லோல
கல்லோலப்பட்டது.
முடிவில்
'இராமலிங்கத்திற்கு
வீட்டில் இடமில்லை. உணவில்லை.
உடையும் இல்லை...'
தடை போட்டார் தனையன்.
அண்ணி
பாப்பாத்தி அம்மாவால்
அழத்தான் முடிந்தது.
இது
வள்ளல் பெருமானுக்கு இன்னும்
நல்லதாய்ப் போனது.
கந்தக் கோட்டத்திலேயே காலம் கழித்தார்.
களிப்போடு இருந்தார்.
கந்தா கந்தாவென
நாள் முழுதும்
கனிந்துருகி அழுதார்.
எப்போதாவது
வீட்டிற்கு வருவார்...
அண்ணன் இல்லாத நேரம் அல்லது அவர்
அயர்ந்து தூங்கும் சமயம்.
அண்ணி அழுதபடி
அமுது ஊட்டுவார்.
'அண்ணன் சொல்
கேளேன்' என்பார்.
அமைதியாய் சென்றுவிடுவார்
சிறுவர் இராமலிங்கம்.
அன்று
அப்பாவிற்குத் திதி.
ஊரே திரண்டிருந்தது
மதிய விருந்துக்கு.
அறுசுவைப் படையல்.
சபாபதி பிள்ளை
கால் வயிறு
உண்ட களைப்பில்
உறங்கிக் கொண்டிருந்தார்.
பின்பக்க வழியில்... கிணற்றடியில்...
இராமலிங்கம்.
அண்ணிக்கு
அன்று கடுங்கோபம்.
கூடுதல் கவலை.
காரணம்,
தம்பியை நினைத்து
அவன் இல்லாத நிலையில் திதி நடத்துகிறோமே
என்ற கவலையில்
விருந்துண்ணாமல்
பாதியில்
எழுந்து சென்றுவிட்டார் சபாபதி பிள்ளை.
அண்ணியார் இராமலிங்கத்தைப்
பார்த்த மாத்திரத்தில் கொட்டிவிட்டார் கோபத்தையும் கண்ணீரையும்.
"அண்ணன்
சொல்வதைக் கேள்...
உன் நன்மைக்குத் தானே படிக்க சொல்கிறார்...
'படிக்கிறேன் 'என்று சொல்.. வீட்டிலே தங்கு...
மீதியை நான்
பார்த்துக் கொள்கிறேன்.."
'சம்மதம்'
என்று சொன்ன வள்ளல்பெருமான்
சில நிபந்தனைகள் விதித்தார்.
"மாடியில்
தனி அறை வேண்டும்.
அங்கு பூஜைப் பொருட்கள்
எப்போதும் தயாராய்
இருக்க வேண்டும்...
தொந்தரவு ஏதும் இருக்கக்கூடாது..."
'சரி'
என்று சந்தோஷப்பட்ட
அண்ணியார்
அவசரமாய்
வீட்டினுள் ஓடி
கணவரிடம்
விஷயத்தைச் சொல்லி
அவர் சம்மதம் பெற்றார்.
சிறுவர் ராமலிங்கம்
வீட்டிற்கு வந்தார்.
தனித்த அறையில்
நாள் முழுக்க
இறை தொழுதார்.
உணவு உண்ண
கீழே வருவார்.
உணவுக்குப்பின்
மேலே
மாடிக்குப்
படியேறிப்
போகும்போது
படிக்கத் தமையனார்
சேகரித்து வைத்திருந்த புத்தகங்களை
எடுத்துச் செல்வார்.
அண்ணனை
நேரில் கண்டால்
ஒன்றும் பேசாமல்
பணிவுடன்
ஒதுங்கிச் செல்வார்.
உணவு
உடை
இருப்பிடம்
தனிமை
பிரார்த்தனை
இறைசிந்தனை
இப்படியே
நாட்கள் நகர்ந்தன.
மாடியிலிருக்கும்
முகக் கண்ணாடியில்
முருகப்பெருமானின்
உருவை நினைத்தபடி
மாலை சூட்டி
தீபம் காட்டி
தியானிப்பது
வள்ளல் பெருமானின்
வழக்கம்.
ஒருநாள்
அப்படி கண்ணாடி முன்
தவம் கொண்டபோது
திருத்தணிகை முருகன் கண்ணாடியில்
நேரடியாகக் காட்சி தந்தார்.
பொதுவாக
கண்ணாடியில்
ஒருவர் பார்த்தால்
அவரது உருவம் தான் பிரதிபலிக்கும்.
ஆனால்
வள்ளல் பெருமான் நின்று
பிரார்த்தித்தபோது
தணிகைவேலன் கண்ணாடியில்
தெரிந்தார்.
உண்மையில்
கண்ணாடியில் தெரிந்த உருவம்தானே
எதிரில் நின்ற உருவம் ?
இதை எண்ணி கண்ணாடியில்
காட்சியளித்த
திருத்தணிகை வேலன் புன்னகை புரிந்தார்.
'நானே நீ...நீயே நான்..'
என உணர வைத்தார்.
ஆனந்த கண்ணீரில்
மூழ்கிய
வள்ளல் பெருமானின் சிந்தையில்
கந்தப் பெருமான்
தானே வந்து
கலந்து போனார்.
கரைந்து போனார்.
ஆம்....
அந்த
ஒன்பது வயதிலேயே
சிறுவர் இராமலிங்கம்
எல்லையில்லா
ஞானம் எய்தினார்.
(சரித்திரம் விரியும்)
Leave a Comment