சீமானாய் இருந்த சித்தரும்...  கோமானாய் இருந்த சித்தரும்.


- "மாரி மைந்தன்" சிவராமன்

 

பட்டினத்தார் கதை - பாகம் 5


பாண்டிய நாட்டில் 
மதுரை 
கொங்குநாட்டில் 
பேரையூர்,
அவிநாசி,
திருமுருகன்பூண்டி 
என பட்டினத்தாரின் 
தேச சஞ்சாரம் தொடர்ந்தது.

ஏதோ ஓர் ஊர்.
பட்டினத்தார் பயணத்தில் இடையில் அவ்வூர்.

ஒரு வீட்டின் முன் நின்றார்.

மௌனமே 
மொழியாய் போனதால் 
வீட்டில் இருந்தவரைக் கைதட்டி அழைத்தார்.

'பிச்சை '
என சைகை காட்டினார்.

வீட்டில் இருந்தவன் 
கோணல் புத்திக்காரன்.

'என்ன திமிர்....
கைதட்டி அழைக்கிறான் '
என 
ஒரு கோலோடு வந்தான்.

பட்டினத்தாரைச்
சாத்து சாத்து 
என்று கம்பால் 
பின்னி எடுத்தான்.

ஒரு துளி சத்தம் இல்லை. அப்படியே நின்றிருந்தார் அருளாளர்.

பக்கத்து வீட்டுக்காரன் 
ஓடி வந்தான். 
அடித்தவனைத் தடுத்து,
"இவர் 
சிவனடியார் போல் இருக்கிறார்.... அடிக்காதே... பாவம் சேர்க்காதே..."

கோபித்தான்.
கோல்பறித்துத் 
தூக்கி எறிந்தான்.

உடம்பில் 
பட்டை பட்டையாய் 
தடியடிப் பதிவுகள்.

அடுத்த அடி நகர்ந்தார் பட்டினத்தார் 
ஏதும் நிகழாதது போல்.

அவர் சிந்தையில் 
ஒரு ஜோதி எழுந்தது.
அது சொன்னது...

'ஒரு சாண் வயிற்றுக்காக இந்த பாடு....
இத்தனை அடிகள்....

கேள்வி கேட்ட 
அகச்சுடரே பதிலும் 
தந்தது...

'இனி உணவுக்காக
கையேந்த வேண்டாம்... தேடிவரும் 
உணவை மட்டும் 
எடுத்துக் கொள்ளலாம்'

மௌன சாமிக்கு 
உணவு குறித்தும் 
தெளிவைத் தந்தது 
இறை உணர்வே.

திருகோகர்ணம் சென்றார் அங்கு சில நாட்கள்.

பின் 
உஞ்சேனை மாகாளம் 
எனும் ஊரை அடைந்தார்.

அவ்வூர் தான் 
இன்றைய உஜ்ஜயினி.

அவ்வூர் 
ஒரு புதிய பாடத்தை 
ஒரு புதிய சீடரை 
ஒரு புதிய சித்தரை 
உலகுக்கு அளித்தது.

உஜ்ஜயினியில் மகாகாலேஸ்வரர் 
என்ற பெயரில் 
இறைவன் அருளாட்சி 
புரிந்து கொண்டிருந்தார்.

பட்டினத்தார் 
பட்டினத்தில் தங்காமல் ஊரின் ஒதுக்குப்புறத்தில் 
ஒரு விநாயகர் கோயிலில் தங்கியிருந்தார்.

ஒரு கள்வர் கூட்டம் விநாயகருடன் 
ஒரு கள்ளக் கூட்டணி அமைத்து இருந்தது.

திருடுவது,
அதில் ஒரு பகுதியை விநாயகருக்குத் தந்து விடுவது என்பது 
கள்வர்கள் போட்டிருந்த ஒப்பந்தம்.

இந்த 
ஒரு தலை திருட்டில் விநாயகர் 
ஒரு நற்செயலுக்காக காத்திருந்தார். 

அன்று அரண்மனையில் பழுத்த வேட்டை.

திருடிய கள்வர்கள் 
விநாயகர் கோயிலில் 
பங்குப் பிரித்தனர்.

ஏதோ சலசலவென்று 
சத்தம் கேட்க 
காவலர்கள் துரத்தி வருவதாக நினைத்த 
கள்வர் கூட்டம் 
விலை உயர்ந்த பதக்கம் ஒன்றை 
பிள்ளையார் பங்காக 
அவர் இருந்த திசையில் 
வீசி எறிந்து விட்டுத்
தப்பித்து ஓடினர்.

அந்த பதக்கம் இருட்டில் அமர்ந்த நிலையில் 
தவத்தில் இருந்த 
தவமணியாம் பட்டினத்தார் கழுத்தில் விழுந்து 
ஜெகஜோதியாய் ஜொலித்தது.

விரட்டி வந்த காவலாளிகள் அரண்மனை நகையோடு கண்மூடி அமர்ந்து இருந்த பட்டினத்தாரைப் பிடித்தனர்.

மெளனம் 
சலனமற்ற முகம் 
எதையும் தடுக்காத 
ஏகாந்த நிலை.

அடித்தார்கள்.
உதைத்தார்கள்.
அரசன் முன் 
நிறுத்தினார்கள்.

'திருடன் '
 என்றான் ஒருவன்.

'திருடர்கள் தலைவன் ' என்றான் இன்னொருவன்.

'ஏதோ உளறுகிறார்...
உற்றுக் கேட்டால் 
சிவசிவ 
என்கிறது உதடு.'

'சிவனடியாராய் இருப்பார் போலிருக்கிறது....'
ஒரு காவலன் பயந்தான்.

'நம் கடமை கயவனைப் பிடிப்பது....
தீர்ப்பளிப்பது நம் அரசர்'

மூத்த காவலன் 
கையும் களவுமாக பட்டினத்தாரைப் பிடித்ததாகப் பதக்கத்தை காட்டினான்
அரசவையில். 

அரசன் சினந்தான். ..!' ஆணையிட்டான்.

புன்முறுவல் ஒன்றே பட்டினத்தாரிடம் வெளிப்பட்டது.
அது அரசனை 
மேலும் வெறியூட்டியது.

அடுத்த கணங்களில் 
கழுமரம் முன்
பட்டினத்தார் 
நிறுத்தப்பட்டார்.

கனிவோடு மரத்தைக் கண்ணுற்றார் காவிரிப்பூம்பட்டினத்துச்
சாமியார்.

மெலிதாக அவர் 
மனது பாடியது 
தத்துவ பாடல் ஒன்றை...

'முன்செய்த 
தீவினையோ 
இங்ஙனே வந்து 
மூண்டதுவே...'

பாடும் போதே 
கழுமரம் 
தீப்பற்றி எரிந்தது.

பயந்து போயினர் 
காவலர்கள். 
செய்தி போனது 
மன்னனுக்கு. 

ஓடோடி வந்தான். தவறிழைத்தமைக்காக 
தாள் பணிந்தான்.

"தப்பான தீர்ப்பளித்து 
தவறிழைத்தேன்.... மன்னியுங்கள்..."

மனமொடிந்து 
கால் பிடித்தான்.

அது போது 
ஒரு பாடல்.
அது அரசனுக்கு 
கேட்டது,.. புரிந்தது.. தெளிந்தது சித்தம்.

அக்கணமே 
அரச உடைகளை 
கம்பீர அணிகலன்களை உதறினான் அரசன்.

"சுவாமி...
என்னை 
உங்கள் சீடனாக்கி 
அருள் புரியுங்கள்..."

"வா... என்னோடு.."

பட்டினத்தாரின் 
மௌன பாஷை
புதிய சீடனுக்குப்
புரிந்தது.

திரும்பிப் பார்க்காமல் பட்டினத்தார் பின்தொடர்ந்தான் அரசன்.

பட்டினத்தார் 
உபதேசம் செய்தார். சிவயோக அனுபவம் போதித்தார்.

பெற்ற மன்னன் 
பெரும் பேறு பெற்றான்.
அவனும் பின்னாளில் 
சித்தரானான்.

அவன்.....
இல்லை.... இல்லை...
அவர்... பத்ரகிரியார்.

பட்டினத்தாரின் 
பாதம் பற்றி
சிவனடி ஒற்றிய 
சீரிய சித்தர்.

குருநாதர் 
பட்டினத்தாருக்கு 
முன்னரே
பரமனடியில் 
ஐக்கியமான 
புண்ணிய சித்தர்.



Leave a Comment