குழந்தையாய் வந்த இறைவன்


- "மாரி மைந்தன்" சிவராமன்

பட்டினத்தார் கதை  பாகம் - 2

பிரம்மச்சாரி 
உருவில் வந்து 
சிவலிங்கம் தந்து 
அருளாசி தந்து
தீட்சை தந்து திடீரென்று
மறைந்துபோன 
இறைவன் சொன்னது அடிக்கடி 
பட்டினத்தாருக்கு நினைவிற்கு 
வந்தவண்ணம் இருந்தது.

"பூஜை தானம் 
இரண்டிற்கும் 
இரவு-பகல் 
பார்க்காதே...

இருபத்து நான்கு 
மணி நேரமும் 
இச்சிந்தனையே இருக்கட்டும்."

பட்டினத்தாரின் 
மனம் இதை
ஓயாது நச்சரித்தது. 

தாயாரின் மனமோ இன்னொரு விதமாய் நச்சரிக்க ஆரம்பித்தது.

'திருவெண்காடனுக்குத் திருமணம் '

தாயின் விருப்பம் 
மறுக்காது ஏற்றார்
சுய விருப்பம் 
இல்லாமலேயே.

அடியார் உறவு 
இறை பூஜை
பெரும் வணிகம் 
இவற்றோடு 
புதிய உறவு 
திருமணமாய் மலர்ந்தது.

சிவகலை எனும்
மங்கை நல்லாள் 
சிவ மைந்தனின் மனைவியானாள்.

காலச்சக்கரம் 
விரைந்து சுழன்றது.

பட்டினத்தார் 
தான தர்மத்தில் 
வாணிபத்தில் 
செல்வாக்கில் 
ஓர் அரசனைப் போல்
திகழ்ந்து வந்தார்.

இப்போது 
பட்டினத்தாரின் 
வயது 35.

ஊரே போற்ற வாழ்ந்த 
அவர் வீட்டில் 
ஓடி விளையாட 
ஒரு குழந்தைச் செல்வம் பூக்கவில்லை.

வழக்கம்போல் 
இறையைச் 
சரணடைந்தது 
பட்டினத்தார் குடும்பம்.

பரமன் 
இக்குறைதீர்க்க 
நாள் ஒன்று
குறித்தார்.

திருவிடைமருதூரில் 
ஒரு சிவ தம்பதி. சிவதொண்டே
அவர்தம் வாழ்வு.

அடியார்க்கு உணவிட்டு உபசரித்தலே
அத்தம்பதிக்கு 
மனநிறைவு.

அவர் பெயர் சிவசருமர். 
மனையாள் சுசீலை.

ஒருநாள் தம்பதியினர் அயர்ந்து போயினர்... காரணம்.....
அடியவர்களுக்கு 
உணவிட 
வீட்டிலும் கையிலும் ஏதுமில்லை.

செல்வம் இல்லாது அன்னதானம் எப்படி ?

அப்போது 
சிவபெருமான் 
ஒரு முதியவர் வேடத்தில் வந்து அன்னம் கேட்டார்.

"அம்மா... தாயே...
 பசிக்கிறது... உயிர் போகிறது"

நன்றாகவே நடித்தார் 
நடிகர் திலகம்.

வந்த அடியவருக்கு 
கொடுக்க ஏதும் இல்லை 
என தம்பதியினர் 
துடிப்பதை ரசித்த சிவபெருமான் 
கோயிலில் படைத்த நைவேத்யத்தைப் போல பலமடங்கு 
அத் தம்பதியினர் கண்ணெதிரே
மாயமாய் வரவழைத்து 
பசிதீர உண்டார்.

அவர்கள் திகைத்திருக்க அவர்கள் கண் பட
வீட்டோரமாய்
ஓய்வெடுக்கச் சாய்ந்ததார். 
காதுபட பெரிதாக 
ஏப்பம் விட்டார். 

சற்று நேரத்தில் 
குறட்டை ஒலி 
தேவகானமாய் 
ஒலிக்கத் தொடங்கியது.

கவலையாய் 
கண்ணீர் சொரிந்த 
மனைவி சுசீலை 
மெதுவாய் 
கணவரின்
காது கடித்தாள்.

"சுவாமி எழுந்தவுடன் அடியவர்களுக்கு 
தொடர்ந்து 
தொண்டு செய்ய 
கொஞ்சம் ஐஸ்வர்யம்
கேளுங்கள்...

மாயமாய் 
உணவு வரவழைத்து 
உண்ட மகானுபாவர் கண்டிப்பாய் 
ஏற்பாடு செய்வார்."

காத்திருந்தார் சிவசருமர்.

விழிப்பாய் 
சுவாமிகள்
எழும் நேரம் 
எதிர்பார்த்திருந்தும் கண்விழித்த
முக்கண்ணர் 
கண்சிமிட்டும் 
கணநேரத்தில் 
மறைந்து போனார். 

தம்பதியினர் தவித்தனர்.
துடிதுடித்துப் போயினர்.

அன்றிரவு
கவலையோடு கண்ணயர்ந்தனர்
விதியை நொந்தபடி.

இரவில் 
இருவர் கனவிலும் 
வந்தார் ஈஸ்வரன்.

"திருவிடைமருதூர் காருண்யாமிர்தத் தீர்த்தக்கரையில் 
வில்வ மரத்தடியில் 
நானே
ஒரு குழந்தையாய் இருப்போம்.

காலையில் சென்று அக்குழந்தையை எடுத்து காவிரிப்
பூம்பட்டினத்தில் 
என் நினைவாய் வாழும் பட்டினத்தார் வசம் ஒப்படையுங்கள்.

குழந்தைக்கு 
எடைக்கு எடை 
தங்கம் கேளுங்கள்...

அதைப் பெற்று 
இறைப்பணி
தயைப் பணி 
தொடருங்கள்..." 

கனவு கலைந்தது.
அடுத்த நாள்
அது காட்சியானது.

வில்வ மரத்தடியில்
வீறிட்டு அழுத 
தெய்வக் குழந்தையை சிவநேசர் தம்பதி 
கண்டு எடுத்து 
உச்சி முகர்ந்தனர். பரவசத்தில் 
திளைத்தனர்.

கனவில்
சிவபெருமான் 
சொன்னபடி 
பட்டினத்தாரைப் பார்க்க ஆயத்தமானார் சிவநேசர்.

மனைவி சுசீலைக்கோ
அதில் ஆர்வமில்லை.
எல்லையில்லா வருத்தம்.

"தெய்வக் குழந்தையைத் தருவதா ?

தெய்வமே 
குழந்தையாகி 
மகனாகக் 
கிடைத்திருக்கும் 
வாய்ப்பை இழப்பதா ?

தங்கத்திற்காக
குழந்தையை விற்பதா ?

குழந்தையைப் 
பெற்றுக் கொள்ளத்தான் கொடுப்பினை இல்லை.
வளர்க்க பாக்கியம் வாய்க்காதா !"

மன சஞ்சலம்
மாறி மாறிக்
குடைந்தது.

மனைவியின் 
குரலுக்கு 
செவிசாய்க்க 
மறுத்துவிட்டார்
சிவசருமர்.

மகேஸ்வரனின் 
குரல்தானே 
அவருக்கு உயிர் !!! 

இதற்குள் -
ஆண்மகவோடு 
அரும் தொண்டர் 
சிவநேசர் சிவசருமர் 
வரும் தகவலைப் 
பட்டினத்தார் கனவில் சுட்டியிருந்தார் சிவபெருமானார்.

அந்த காட்சி காவிரிப்பூம்பட்டினம் கண்டிராத 
திருவிழாக் காட்சி.

அருள் செல்வமும் 
பொருள் செல்வமும் 
நிரம்பப் பெற்றிருந்த பட்டினத்தார் வந்தவர்க்கெல்லாம் 
வாரி வழங்கிக் கொண்டிருந்தார்.

வாரிசு வந்த சந்தோசம்.

எப்போதும் தானதர்மம் நடக்கும் அவர் வீட்டில் குழந்தை தானம்.

நேரம் வந்தது. 

பெரிய தராசு ஒன்றில் 
ஒரு தட்டில் குழந்தை இன்னொரு தட்டில்
தங்கம் 
மாணிக்கம் 
வைரம் 
வைடூரியம்....

வள்ளல் பட்டினத்தார் 
கையே வலித்துவிட்டது.. எவ்வளவு நிரப்பியும்
இரு தட்டுகளும் 
சமமாக வில்லை.

எவ்வளவு தரவும் 
பட்டினத்தார் 
தயாராக இருந்தும் 
வைத்து நிரப்பியும் 
சரிசமமாக வில்லை 
தராசுத் தட்டுகள்.

ஒரு தட்டில் இருப்பது 
இறை அல்லவா !
எப்படி நிறையாகும்?

சிவசருமரே
போதும் போதும் 
என நெஞ்சுருக நஞ்சுண்டேஸ்வரரை
வணங்கி அழுதார்.

இறைவன் சிவசருமர் 
காதினுள் ஒலித்தார்..

"கவலை கொள்ளாதே...
சிவசருமரே !
சும்மா கொஞ்சம் விளையாடிப் பார்த்தேன்.

இவற்றை எடுத்துச் செல்.

இது தப்பில்லா வருமானம். தீதிலாச் சொத்து.

தானதர்மம் 
பூஜை யாவும் 
விரும்பியபடி 
செய்து வா...

சரியாக 16 ஆண்டுகள்.

நானே வந்து உன்னை ஆட்கொள்வேன்."

"சரி "என்று 
தலையசைத்தார் 
சிவசருமர்.

உடனே
தராசுத் தட்டுகள்
சமமாயின. 
ஊரே கைதட்டி 
மகிழ்ந்தது.

அப்போது
தங்கத்தேர் ஒன்று தயங்கியபடி வந்தது.

அத்தேர்
பட்டினத்தாரின் 
செல்வச் செழுமையைக் காட்டும் திருத்தேர்.

சிவசருமரும் 
சுசீலையும் 
கண்ணீர் மல்க அமர திருவிடைமருதூர் நோக்கி பயணமானது 
அந்த தங்கத்தேர்.

நன்றியோடு 
நகர எல்லை வரை
பட்டினத்தார் 
தொடர்ந்து நடந்து வர 
சிவசருமர் கைகள் தூக்கி-
சுசீலை கண்கள் கலங்கி வணங்கி விடை பெற்றனர்.

(மீதம் பாகம் -3 இல்)...



Leave a Comment