குபேரன் பட்டினத்தாராய் பிறப்பெடுத்த கதை
- "மாரி மைந்தன்" சிவராமன்
பட்டினத்தார் கதை - பாகம் 1
ஊரின்
ஒதுக்குப் புறம்.
அது ஒரு சுடுகாடு.
உற்றார் ஒருசிலர் சூழ்ந்திருக்க
எரியூட்டுவதற்குத்
தயாராக ஒரு பிணம்.
விறட்டிகள் அடுக்கப்பட்டு விடை பெறுவதற்குக் காத்திருக்கிறது
அப்பூதவுடல்.
அதோ ...
வெறும் கோவணமும்
உடல் முழுக்க திருநீறும் அணிந்து
சாமியார் ஒருவர்
வருகிறார்.
வந்தவர்
ஓரிரு நிமிடங்கள்
பாடையைத் தரிசிக்கிறார்.
"அம்மா..."
என்கின்ற குரல்
அவர் அடிவயிற்றிலிருந்து மெல்ல எழுகிறது.
விறட்டிகளைச்
சூழ வைத்திருந்த
விறகுக் கட்டைகளை விரைந்து விலக்குகிறார்.
"ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம்
நொந்து பெற்று..,"
பாடலாய் வடிவெடுக்கிறது அவரது துயரம்.
விறகுகளையும்
விறட்டிகளையும்
தள்ளி விட்டு விட்டு
தன் தாயை
அரவணைத்துத் தூக்கி அருகிருக்கும்
வாழைமட்டை மீது வைக்கிறார்.
அவரது திருவாய்
தாயை - தன்னிகரில்லா
தாய் உறவை
ஒப்பாரியாய் உணர்ச்சிபூர்வமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.
"முன்னை இட்ட தீ முப்புறத்திலே...
பின்னை இட்ட தீ
தென் இலங்கையிலே ...!
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே...
யானும் இட்ட தீ
மூழ்க மூழ்கவே..."
என்று கதறும் போது
வாழை மட்டைத்தானே
தீப் பிடிக்கிறது.
புத்தம் புதிய
ஈர வாழைமட்டை
தீப்பிடித்து எரிவதை வியப்பாய்
உறவினர் பார்த்து
வியந்திருக்க....
பாடை எரிகிற
பாங்கைப் பார்த்தபடி அவ்விடம் விட்டு
விலகுகிறார்.
அதுவே
அவ்வூரில் அவர்
பிறர் கண்களில்பட்ட
இறுதி நிகழ்வு.
அவர்....
பட்டினத்தார்.
அவரை
பட்டினத்தடிகள்
திருவெண்காடர்
சுவேதாரண்யர்
பட்டினத்துப் பிள்ளையார் என்றெல்லாம்
அழைப்பார்கள்.
தாய்க்குச்
செய்ய வேண்டிய கடமைக்காக
பிறந்து வளர்ந்து
செல்வ சீமானாக இருந்த காவிரிப் பூம்பட்டினத்தில் ஒதுக்குப்புறத்தில்
பொது சத்திரத்தில்
துறவறம் பூண்டு காத்திருந்தவர்
சிதைக்குத் தீ மூட்டி
கடனை அடைத்தார். கிளம்பிவிட்டார்.
பற்றற்றவருக்கு
தாய் மீது பற்று.
ஓர் ஒட்டு.
தாமரை
இலை நீர் போன்றது
அவ்வொட்டு .
பின்
பித்தனைப் போல்
சித்தனைப் போல்
ஊர் ஊராய்
தேச சஞ்சாரம் செய்யத் துவங்கிவிட்டார்.
பட்டினத்தாரின்
திவ்விய சரித்திரம் வித்தியாசமானது.
சிவம் ஆன
அவரது சரிதை
சிவம் நோக்கிய
ஒரு வழிப்பாதை.
சிவநெறிப் பாதை.
சிவபிரான்
அம்பிகையுடன்
ரிஷப வாகனத்தில்
வெளியே
திரு உலாவிற்கு
புறப்பட்டுக்
கொண்டிருந்தார்.
தெய்வங்களும் முனிவர்களும்
ரிஷி மார்களும்
இறைவன்
இறைவியுடன்
பயணம் காணத்
தயாராக இருந்தனர்.
'ஜய ஜய சங்கர...
ஹர ஹர சங்கர ... '
என
அவர்கள் ஒலித்த
இறையம்ச மந்திரங்கள் சூழலைத்
தெய்வீகமாக்கிக் கொண்டிருந்தன.
அதுபோது
குபேரன்
அங்கு வந்தார்.
இறைவன்
புறப்படும் சூழலை
அறிந்த அவர்
இரு கைகளையும் தூக்கி வணங்கியபடியே
உலாவிலும் பங்கேற்றார்.
பற்பல
தலங்களை தரிசித்த இறைவனின் குழு திருவெண்காடு வந்தது.
அங்கிருக்கும் காவிரிப்பூம்பட்டினம் அனைவரையும் கவர்ந்தது.
ஆனால் குபேரனை
ஈர்த்தது அதிகம்.
அவ்விடத்தை
விட்டுச் செல்ல
மனம் வரவில்லை குபேரனுக்கு.
சிவபெருமானிடம்
மெதுவாகக் கேட்டார்..
"இறைவா....
இந்த இடம்
எனக்கு மிகவும்
பிடித்துப் போய்விட்டது. கொஞ்ச காலம்
தங்கிவிட்டு வரவா ?"
இறைவன்
புன்னகைத்தார்.
இதற்குத்தானே
இறைவன் ஆசைப்பட்டார் !? திரு உலாவின்
நோக்கமே அதுதானே ?!
"குபேரா....
யோகமயமான
உடம்பு பெற்ற
உனக்கு இப்படி
ஒரு ஆசை
எப்படி வந்தது ?
சரி....சரி
ஆசைப்பட்டு விட்டாய் !
ஆசையே
பிறவிக்கான விதை.
நீ பூமியில் பிறப்பாய்."
'கொஞ்ச காலம்'
என்பதை
சிவபெருமான்
இப்படிப் புரிந்து
கொண்டாரே
என்று பயந்து போன
குபேரன்,
"சுவாமி....
இப்படி குபேரனாகவே கொஞ்ச காலம்
இங்கே
இருக்கத்தான் நினைத்தேன்.
நீங்கள்
'மனிதப் பிறப்புக்கு '
வரம் தந்து விட்டீர்களே !?
ஏற்கிறேன்.... பிரபு.
ஆனால்...
உரிய காலத்தில்
என்னை நீங்கள் எடுத்தாட்கொள்ள
வேண்டும்.
உறுதி தாருங்கள்..."
"உறுதி"
என்றார்
உலகாளும் உமையவளின் உள்ளம் கவர்ந்தவர்.
திரு உலா முடிவுற
திருவிளையாடல் நாயகன் ஆசிர்வதித்துப் புறப்பட்டார்.
இறைவன் திருவுளப்படி குபேந்திரன்
பூமியில் ஜனிக்க
ஒரு கரு காத்திருந்தது.
அது
சிவ சிந்தனையோடு
தவ வாழ்வோடு
பரோபகாரியாக காவிரிப்
பூம்பட்டினத்தில் வாழ்ந்து வந்த
சிவநேசர் என்பாரின்
நேச மனைவி
ஞான கலாம்பிகையின் சிவஞானக் கரு.
அக்கரு
திருவாகி
உருவாகி
ஒருநாள்
பூமியில் பூத்தது.
இப்படித்தான்
குபேரன் காவிரிப்பூம்பட்டினத்தில் செல்வச் சீமான்
சிவநேச தம்பதிக்கு திருவெண்காடராக பின்னாளைய
பட்டினத்தாராக
அவதாரம் கண்டார்.
ஐந்து வயதிலேயே
ஞானம் பேசியது
குழந்தை.
சிவ சிந்தனையே
வளர்ப்பாய் இருந்தது.
ஒருநாள்
சிவபெருமான்
கனவில் வந்தார்.
பின்னொரு நாள்
நேரில் வந்தார்.
வந்த இறைவன்
பட்டினத்துப் பாலகன்
நெற்றியில் விபூதி இட்டு
ஆசி தந்து
அப்பாலகனின்
விசாரணைக் எல்லாம்
விடை சொன்னார்.
"சிறுவனே....
திருவெண்காட்டுக்குபோ...
சுவேதாரண்யப் பெருமானையும் அம்பிகையையும்
பூஜை செய்.
அடியார்களுக்கு
அன்னமிடு.
காத்திரு.
தக்க நேரத்தில்
ஒரு சன்னியாசி வருவார்.
அந்த ஒழுக்க சீலர்
உனக்கு ஒரு
சிவலிங்கம் தருவார்.
தீட்சை அளிப்பார்.
மந்திர உபதேசம் தருவார்.
முழுமை அடைவாய்."
சிவனே சொல்லிவிட்டார்... எதற்கு
காத்திருக்க வேண்டும் ?
புறப்பட்டார்
திருவெண்காடு ஆலயத்திற்கு.
தாய் தான் யோசித்தாள்.
'சிறு வயது'
என கலங்கினாள்.
"அம்மா...
இன்னும் கொஞ்சம்
வயது கூடி
இளைஞனாகி
பூஜையில் இறங்கு என்கிறாய்.
தாயே...
மார்க்கண்டேயருக்கு
என்ன வயது ?
சிவபூஜை செய்து
அக்னிப் பதவியை அடைந்தபோது
துருவனுக்கு ஏழு வயது.
திருப்பாற்கடலை சிவபிரானிடம்
வேண்டிப் பெற்ற
உபமன்யு
கிழவரா என்ன ?
ஞானத் திருவடியில் சங்கமமான
சம்பந்தருக்கு
12 வயதுதான்.
வயது தடையில்லையே ... தாயே....
விடை தாருங்கள்.. அம்மா"
அம்மா
அரைமனதோடு
சம்மதித்தாள்.
திருவெண்காடு கோயில் பட்டினத்தார்
உறைவிடம் ஆனது.
முக்கண்ணன் சொல்லி இருந்த மாதிரியே
சிவந்த திருமேனி
சடைமுடி
விபூதி
ருத்ராட்சம் சகிதம் வேதமந்திரங்கள் சொல்லியபடி
ஒருநாள்
பிரம்மச்சாரி ஒருவர் கோயிலுக்கு வந்தார்.
வந்தவர் வினவியது, "பட்டினத்தார் எங்கே ?
பார்க்க வேண்டும்
அவனை. "
முதல் நாள் இரவு
'நாளை ஒரு
பிரம்மச்சாரி வருவார்'
என்று கனவு சொல்லியிருந்தது பட்டினத்தாரிடம்.
இறையருள் நிரம்பிய இருவரும் சந்தித்தனர்.
கோயிலில் ஒரு சம்பவம்.
பிரம்மச்சாரி கையோடு
ஒரு சம்புடம்
கொண்டு வந்திருந்தார்.
அது சமயம்
கோயிலில்
இருந்தவர்களிடம்
அதைத்
திறக்கச் சொன்னார்.
கோயிலில் இருந்தவர்கள் எவ்வளவு முயன்றும் யாராலும் திறக்க முடியவில்லை.
"திருவெண்காடா ...
நீ திற...."
கட்டளையிட்டார்
பிரம்மச்சாரி.
எங்கேயோ கேட்ட குரல்
போல் இருக்கிறதே...!
பட்டினத்தார்
கை தொட்டார்.
காத்திருந்தது போல்
பட்டுத் துணியால் மூடப்பட்டிருந்த
சம்புடம் திறந்து
உள்ளே
கோடி சூரியப் பிரகாசமாய் ஒரு சிவலிங்கம்.
உடன்
அருளுக்கு அருள் கூட்ட அழகிய
விநாயகப் பெருமான்
சிலை ஒன்று.
பிரம்மச்சாரி
சொன்னமாதிரி காவிரிக்கரையில்
பூஜை புனஸ்காரங்கள் செய்து
பஞ்சாட்சரத்தை
தியானித்து
பட்டினத்தார்
ஞானப் படிகளில்
ஏறத் தொடங்கினார்.
மனதில்
ஏதேதோ சொற்கள்
தவித்து நின்றன.
அவற்றை
வெளிப்படுத்த வேண்டும் என்று துடித்தார்
பட்டினத்தார்.
பிரம்மச்சாரியைத் தேடினார். அவரைக் காணவில்லை.
அவர் சற்று முன் தான்
தான் வந்த காரியம்
இனிது முடிந்தது என்று
இடம் பெயர்ந்து விட்டார்.
உள்அக வார்த்தைகளின் சங்கமத்தில்
பட்டினத்தார் துடிக்கையில்
ஓர் அசரீரி எழுந்தது.
"திருவெண்காடா...
இனி உனக்கு
எல்லா கலைகளும் சித்தியாகும்.."
அட ....அதே குரல் பிரம்மச்சாரியின்
குரலை ஒத்த குரல்.
எங்கேயோ கேட்ட குரல் ! யாருடைய குரல் ?!
மனத்தில்
விசாரணை தொடங்கியது.
கனவிலும் நேரிலும் காட்சியளித்த பிரம்மச்சாரியின்
மந்திரக் குரல் அது.
சர்வ வல்லமை கொண்ட சர்வேஸ்வரனின் குரல்.
ஆம்...
சிவபெருமானின்
தெய்வீகக் குரல்.
Leave a Comment