குருவை மிஞ்சிய சீடர்
- "மாரி மைந்தன்" சிவராமன்
ஓர் அப்பழுக்கற்ற முனிவர்.
பற்றில்லாத அவரை தீராத தலைவலி பற்றிக்கொண்டது.
அகத்தியரை நாடி வந்தார்.
அகத்தியர்தான் மாஸ்டர் ஆஃப் சர்ஜரி ஆயிற்றே !
முனிவரின் மூளைக்கான
அறுவை சிகிச்சைக்கு ஆயத்தமானார்.
முனிவரின்
கபாலம் திறந்தார்.
உள்ளே
ஒரு சிறு உயிரினம்.
ஒரு சிறு தேரை அங்குமிங்கும்
ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.
அதுதானே தலைவிதி !
அதனால்தானே தலைவலி !!
தேரையை வெளியே எடுக்க
அகத்திய முனி ஆனமட்டும் பாடுபட்டார்.
தேரையோ பிடிக்கப் போனால்
எதிர்திசை ஓடி ஒளிந்தது.
மிகவும் முயன்றால் மூளை சிதையும் அபாயம் இருந்தது.
அகத்தியரின் முயற்சி ஒருபுறமிருக்க
உதவியாளனாய் அருகிலிருந்த
ஓர் ஊமைச் சிறுவன் ஆர்வமுடன்
இதைக் கவனித்திருந்தான்.
திடுமென அவன்
ஒரு காரியம் செய்தான்.
ஒரு தாம்பாளம் எடுத்து அதில்
தண்ணீர் நிரப்பி அருகினில் வைத்தான்.
தண்ணீரைக் கண்ட தேரை
தாவிக் குதித்தது தாம்பாளத் தடாகத்தில்.
பிறகென்ன
அகத்தியர் மகிழ்ந்து
முனிவரின் மண்டையை மூடினார்
சந்தானகரணி என்னும் மூலிகையால்.
தலைவலி
போயே போச்சு...!
அகத்தியர் வியந்தார்.
சீடனின் விவேகத்தை பாராட்டி நெகிழ்ந்தார்.
முனிவரும்
உயிருடன் எழுந்தார்.
முனிவரையும் குருவையும்
வணங்கி நின்றான் அச்சிறுவன்.
"வாழ்க நீ...
நீ விவேகி.
உன் பெயர்
இனி
ஊமையன் இல்லை...
நீ தேரையன்...
தேரையை மீட்டதால்
நீ தேரையன்.
உன் பெயர்
தேரையன்"
என பெயர்சூட்டி வாழ்த்தினார் அகத்தியர்.
முனிவர் வழிமொழிந்தார்.
நோய்ப்பட்ட முனிவரும் வாழ்த்தவே
நெகிழ்ந்து போனார் அகத்தியர்.
"நீயே என்குரு..
நீயே என் தெய்வம்... குலக்கொழுந்து...."
என உளம் மகிழ்ந்து அது போதே
சீடனாய் ஏற்றுக் கொண்பார்.
அதோடு விடவில்லை அகத்தியர் பெருமான்.
தன் தவ ஆற்றலால் ஊமைத் தன்மையைப் போக்கி
ஊர் வியக்க பேசவும் வைத்தார்.
இதுவே ஊமையன் தேரையரான அற்புதமான நிகழ்வு.
தலைவலி
நீங்கப் பெற்றவர் சங்கப்புலவர்
திரணாக்கிய முனிவர் என்றும்..
காசிவர்மன் என்ற மன்னன் என்றும்... இந்திரன் என்றும் ..
இல்லையில்லை... நக்கீரன் என்றும் பல்வேறு
கருத்துக்கள் உண்டு.
திரணாக்கிய முனிவர் தான்
பின்னாளில் அகத்தியரின் சீடராகி
தொல்காப்பியம் படைத்த தொல்காப்பியர் என்பது
இன்னுமொரு வியத்தகு செய்தி.
தேரையரின் முற்பிறப்பு
ராமதேவர் என்றும் யாக்கோபு என்றும்
பெரும் பேறுகள் கொண்ட சிறப்புடைத்தது.
தேரையர் வேறு.. இராமதேவர் வேறு...
என அடித்துச் சொல்வோரும் உண்டு.
கடந்த பிறப்பில் இராமதேவருக்கு அகத்தியர் மேல் அலாதி பக்தி.
அவரிடம் குருகுலவாசம் வேண்டிப் பெற்றார் இராம தேவர்.
அந்த வாய்ப்பு
சில காலமே சிறந்திருந்தது.
அப் பிறப்பில்
போதிய காலம் இல்லாது போனதால்
மறுபிறப்பிலேனும் அகத்தியர்
அடி மனதில்
ஆழ்ந்து அமர மறுபிறப்பு எடுத்தார்.
புதிய பிறவியில் பிறப்பால்
அவர் ஓர் ஊமை.
அந்தணர் ஒருவர் பரிந்துரை செய்ய
அகத்தியர் ஏற்றார் அச்சிறுவனை.
அந்த ஊமைச் சிறுவனே
காலப்போக்கில் தேரையர் ஆனார்.
காலம் கடந்த சித்தபுருஷர் ஆனார்.
அகத்தியரிடம் அழைத்துச்சென்று
சேர்த்து விட்டவர் ஔவைப் பாட்டியே
என்பாரும் உண்டு.
பேச்சு தான் இல்லையே தவிர
ஊமைச் சிறுவன்
படு சுட்டி.
புத்தியும் கெட்டி.
அகத்தியர் பிரானுக்கு
அவனைப் பிடித்துப்போகவே அந்த
ஊமைச் சிறுவனை
உடன் வைத்துக் கொண்டார்.
தேரையர் என
பெயர் சூட்டிய பின்னர்
வைத்தியம் மருந்து
என அனைத்தும் கற்பித்தார்.
இப்பிறவியின் நோக்கமே அதுதானே ?
சிக்கெனப் பிடித்துக் கொண்டார் சீரிய சீடர் தேரையர்.
இன்னொரு மருத்துவ மகத்துவமும் அடுத்து நடந்தது.
பாண்டிய மன்னன் ஒருவன்.
பெயர் கூன்பாண்டியன்.
அவனுக்கு அசிங்கமாய் கூன்முதுகு.
மக்கள் பரிகாசம் ஒருபுறமிருக்க
அவனுக்கே அவனைப் பிடிக்காமல் போனது.
அகத்தியரிடம் அடைக்கலமாய் வந்த மன்னன்
நோய் தீர்க்க வேண்டி கதறி நின்றான்.
கும்பமுனி
குறை தீர்ப்பார்
என பக்தியுடன் காத்திருந்தான் பாராளும் மன்னன்.
மூலிகைத் தைலம் தயார் ஆனது.
அன்று
தேரையரிடம் தைலம் காய்ச்சும்
முக்கியப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு
அகத்தியர் பெருமான் அவசர வேலையாக வெளியே சென்றிருந்தார்.
கொப்பரையில் தைலம்
கொதித்துக் கொண்டிருக்க தேரையர்
தைலப் பதத்திற்கான தருணம் பார்த்திருந்தார்.
அது ஒரு புது முயற்சி.
தேரையர்
கவனம் பிசகாமல் காத்திருந்தார்.
அப்போது மேற்கூரையில் சடசடவென சத்தம்.
டப்... டுப்
என அதிர்வொலி.
மேலே பார்த்தார் மருத்துவச் சீடர்.
உடனே கருத்து
ஒன்று கருக்கொண்டது.
கொதிக்கும் தைலம் கொடுத்த ஆவி
மேலே கூரையில் வளைந்திருந்த மூங்கில் கம்புகளை
நேராக நிமிர்த்திக் கொண்டிருந்தன.
அதனால்தான்
தைலம் சுடச்சுட
சடச்சட சப்தம்.
'ஆஹா..
இதுவே உரிய பதம்.
நல்ல தருணம் '
என தீர்மானித்தார் தேரையர்.
மூங்கிலின்
கூன் நிமிர்ந்த
அந்த பதமே மன்னனின்
கூன் நிமிர்த்தும் தைலத்தின் பதம்
என கணத்தில் முடிவெடுத்து
கீழே எரிந்து கொண்டிருந்த
தீயை அணைத்தார்.
அகத்தியர் வந்தார். நடந்தது அறிந்து
சீடரை ஆரத் தழுவினார்.
பதமான தைலம் இதமாக தடவ
மன்னன் கூன் நிமிர்ந்தது.
கேள்விக்குறி போல் இருந்த உடம்பு
ஆச்சரியக்குறி போல் அதிசயம் கண்டது.
அதன் பின் உலகின்கண்
தேரையர் பெயர் உயர்ந்து
உலவத் தொடங்கியது.
ஆனால் அதுவே
குரு அகத்தியருக்கும் சீடர் தேரையருக்கும்
பெரிய பிளவையும் ஏற்படுத்தியது.
அகத்தியர் ஆசிரமத்தின் அருகில் இருந்த
சித்தர் ஒருவருக்குத் தீராத வயிற்றுவலி.
ருத்ராசாரர் என்பது அவரது திருப்பெயர்.
சித்தர்களுக்கு
நோய் தீர்க்கும் மருத்துவ மாமணி
அகத்தியரை நாடினார் அந்த சித்தர்.
மருந்து தந்த
மாமுனி அகத்தியர்
பத்துநாள் பத்தியமும் சொன்னார்.
பத்தாம் நாள்
சித்தர் தந்த தகவல்
அகத்தியருக்குப் பேரதிர்ச்சி தந்தது.
'மருந்து வேலை செய்யவில்லை. வயிற்றுவலியும் போன பாடில்லை.'
அகத்தியர்
தேரையரை அழைத்து
சித்தரைப் பார்த்து வரச் சொன்னார்.
தேரையர் போனார். சித்தரைச் சோதித்தார்.
மருந்தையும் சோதித்தார்.
"சுவாமி.... கவலை வேண்டாம்.. வயிற்றுவலியை
உடனே போக வைக்கிறேன்"
என ஆறுதல் சொன்னார்.
குழல் போன்ற
ஒரு குச்சியை எடுத்து சித்தர் வாயினுள் நுழைத்து
அதன் துளை வழியே அகத்தியர் தந்த
அதே மருந்தைக் கொடுத்தார்.
என்ன மாயம் !
கணப்பொழுதில் வயிற்று வலி காணாமல் போச்சு..!
ஞானி ருத்ராகாரருக்கு மகிழ்ச்சி.. நெகிழ்ச்சி.
"குருவை மிஞ்சிய சீடனாக இருக்கிறாயே !" வியந்தார்.
முதுகில் தட்டி வாழ்த்தினார்.
இங்கு தான் வந்தது வினை.
கவனியுங்கள்....
உலகை காக்க வல்ல சித்தர் ஒருவருக்கு தீராத வயிற்றுவலி.
மகா சித்தர் ஒருவரின் மருந்து தீர்க்கவில்லை
அவர் தம் சீடர்
அதே மருந்து தர தீர்ந்தது வலி.
"என்ன நடந்தது ?
எப்படித் தீர்த்தாய்??" அகத்தியர் கேட்டார்
கொஞ்சம் ஆற்றாமையுடன்.
"குருவே....
தங்கள் மருந்து
பல்லில் பட்டால்
பல்லின் விஷம் பட்டு மருத்துவ குணம் முறிந்துவிடும்.
அதனால்
பல்லில் படாமல்
குழல் குச்சி மூலம் தந்தேன்...
வலி தீர்ந்தது."
என நோய்
தீர்ந்த வழிதனைப் பகன்றார்.
பெருமிதம் கொண்ட அகத்திய மாமுனி
அப்படியே அணைத்து உச்சி முகர்ந்தார்.
ஆனாலும் கூடவே
துளிர்ந்திருந்த பொறாமை
இன்னும் வளர்ந்தது.
அடுத்த சிலநாட்களில்
அகத்தியரைப் பார்த்து
நன்றி சொல்ல வந்த ருத்ராகாரரின் பாராட்டில்
'குருவை மிஞ்சிய சீடன் '
என்ற புகழ்ச்சி தூக்கலாய் இருக்க எழுந்தது
அந்த வினை விஸ்வரூபமாய்.
சீடரை அழைத்த சித்தர் பெருமகன்
அகத்திய மாமுனி அமைதியாய் சொன்னார்.
அதில் ஏனோ கொஞ்சம்
காரம் இருந்தது.
"இரு கத்திகள்
ஓர் உறையில்
இருக்கக் கூடாது.
இனி
உன் வழி
தனி வழி.
இந்த இருப்பிடம் வேண்டாம்.
கிளம்பு.
உன் விருப்பிடம் செல்.
செல்லுமிடம் தொண்டு செய்."
குருவின் கட்டளை !
அடிபணிந்த சீடர்
அவர் அடிபணிந்து விடைபெற்றார்.
'மருத்துவச் சித்தர்' என
சித்தர்களே வியந்த
சித்தர் தேரையர்
பின்னாளில்
குரு அகத்தியருக்கே
மருத்துவம் பார்த்த அதிசயம் நடந்தது.
அது
பிறவியின் பயன்.
குரு காணிக்கை.
Leave a Comment