மச்சேந்திரரும் கோரக்கரும்
- "மாரி மைந்தன்" சிவராமன்
கோரக்கர் சரித்திரம்
ஒரு பெரிய சமுத்திரம்.
அவர் பிறப்பே
விசித்திரம்.
காயகல்ப மருந்து
என கஞ்சாவையும் புகையிலையையும் சித்தர் மருத்துவம் வகைப்படுத்துவதின் பின்னணியில் இருக்கும் சித்தர் இருவர்.
அவர்களில் ஒருவர் கோரக்கர்.
கோரக்கர்
திவ்விய சரித்திரத்தில் மச்சேந்திர முனிவரின் கதையும் அடக்கம். பிரம்ம முனியின்
உறவும் அடக்கம்.
கோரக்கர் உருவாய் நடமாடிய காலத்தில்
குரு மச்சேந்திரருடன்
இருந்த காலமே அதிகம்.
அது பெரும் பகுதி எனச் சொன்னால் அதில் ஒருபாதி
சக சித்தர்
பிரம்மமுனியுடன் சேர்ந்திருந்த நாட்களும்
தவத்தில் தன்னைத் தொலைத்த நாட்களும் அடங்கும்.
பிரம்ம முனியையும் கோரக்கரையும் எப்போதும் ஒன்றாகவே பார்த்த சித்தர் உலகம் இருவரையும்
'இரட்டைச் சித்தர்கள் '
என சிலாகிக்கிறது.
கோரக்கர்
சிறப்பறிவதற்கு மச்சேந்திரர்
பிறப்பறிவது
சிறப்பாய் இருக்கும்.
மச்சேந்திரர் பிறப்பு தெய்வ சித்தம்.
ஆலகால விஷம் உண்ட சிவபெருமான்
பார்வதி தேவிக்கு
ஆழ்நிலை விஷயமுள்ள மந்திரங்களை
உபதேசம்
செய்து கொண்டிருந்தார்.
இடம்
கோடியக்கரை.
கடற்கரை.
ஆர்ப்பரிக்கும் கடல். சலிக்காத அலைகள்.
மதி மயங்க வைக்கும் காற்று.
மகாதேவனின்
மந்திரச் சொற்கள் மாதேவியின் கவனச்சிதறலால்
அவள் செவிகளைச் சென்றடையவில்லை.
பதிலுக்கு கடற்கரையில் கர்ப்பமுற்று இருந்த
ஒரு மீனின்
செதில்களில் நுழைந்தன.
அவ்வழியே கர்ப்பப்பையில் பிறப்புக்குக் காத்திருந்த குஞ்சொன்றின் செவிகளில் நிறைந்தன.
மந்திரம்
முடிந்த போது
மீனின் வயிற்றிலிருந்து பிள்ளை
ஒன்று வந்தது.
அது மானிட வடிவில் இருந்தது.
உடன் மகேசன் முன்நின்றது.
ஆதிசிவன் புன்னகைத்தார்.
அவர் புன்னகைக்கு அர்த்தங்கள் ஆயிரம்.
"மச்சத்தின் வயிற்றில் இருந்து வந்ததால் உனக்கு
மச்சேந்திரன்
எனப் பெயர் சூட்டுகிறேன்"
மெத்த பெருமிதத்தோடு சிவபிரான் வாழ்த்த மச்சேந்திரன் பிறவியிலேயே
திருவருள் கிடைக்கப் பெற்றார்.
சிவனருள் நேரடியாக கிடைத்தாலும் மச்சேந்திரர்
எப்போதும்
சிவ சிவ என
சிவனடி தேடி வந்தார்.
ஒருநாள்
வழக்கப்படி
பிச்சை எடுத்துண்ண
ஒரு வீட்டின் முன்
வந்து நின்றார்.
அன்னமிட்ட அம்மா
ஒரு பிராமணத்தி.
அவள்
மச்சேந்திரர் உருவத்தில்
தயவு கண்டாள்.
"சுவாமி...
பரிசுத்தமானவர் போல் இருக்கிறீர்கள்.
என் மனம்
நித்தம் கொள்ளும் வேதனைக்கு
விடியல் இல்லை.
எனக்குப்
புத்திரப்பேறு இல்லை.
இந்த வீட்டின் தரித்திரம் நீங்க வேண்டும்.
சரித்திரம் படைக்கும்
ஒரு பிள்ளை வேண்டும்.
வரம் தாருங்கள்...." வணங்கி நின்றாள்.
"இதைச் சாப்பிடம்மா.. உன் ஆசை நிறைவேறும்."
சுருக்குப் பையெடுத்து
உருக்கமாக இறைவனைத்
தொழுத வண்ணம் திருநீறு தந்தார்.
"சாப்பிடம்மா...
நல்ல பிள்ளை பிறப்பான்.
பின் ஒரு நாள்
வந்து பார்ப்பேன்-
அவன் உன்னோடு துள்ளி விளையாடுவதை."
ஆசி தந்து விடைபெற்றார்.
ஒன்பது ஆண்டுகள் உருண்டோடி இருக்கும்.
ஒருநாள் மச்சேந்திரர் அவ்வழி வந்தார்.
அந்த அம்மாவின் வீட்டின் முன் நின்றார்.
உணவு வந்தது.
" உன் மகன் எங்கே ? கூப்பிடு... பார்க்கவேண்டும். உணவெல்லாம்
அவனைப் பார்த்த பின்னர் தான்...."
முனிவர் கண்களை வீட்டினுள்
சுழல விட்டார்.
அவரின் பார்வை
அந்த அம்மாள் மீது பட்டபோது
அத்தனை கண்ணீர் அவள் கண்களிலிருந்து.
" என்னமா நடந்தது.?"
"சுவாமி...
நீங்கள் தந்த விபூதியை நான் வீதியில்
எறிந்து விட்டேன்.
நீங்கள் பிள்ளை தரும் சாமியார் அல்ல..
பிள்ளை பிடிக்கும் போலியார்
என பக்கத்து வீட்டுக்காரி சொன்னாள்.
திருநீறை எடுத்தேயானால்
சாமியார் பின்னால் சென்று விடுவாய்.
அது நீறு அல்ல....வேறு. மந்திரித்த சாம்பல்"
என பயம் காட்டினாள்.
பயந்துவிட்டேன்....!
அடுப்பு நெருப்பில்
இட்டு விட்டேன்.
பின்
அந்த குப்பைக் கூளத்தில்
சேர்த்து விட்டேன்...
என்ன செய்வது...
எல்லாம் என் விதி...
பிள்ளை பாக்கியம் உங்களால் கிடைத்திருக்கும்..
வீணாக்கி விட்டேன்."
கண்ணீர் தாரைதாரையாகத் தரையைத் தொட்டது.
முனிவருக்கும் அதிர்ச்சிதான்.
ஆனால்
சில நொடிகளில்
மீண்டார்.
" பரவாயில்லை.. தாயே....
குப்பை கொட்டிய இடத்தைக் காட்டு.."
காட்டினாள்.
அது மாட்டுத்தொழுவம்.
குப்பையும் கூளமாய் சாணியும் சகதியுமாய் ஒரு மலை போல் குவிந்து இருந்தது.
அருகில் சென்ற மச்சேந்திரர்
'கோரக்கா...' என உணர்ச்சியாக உச்சரித்தார்.
"வந்தேன் "
என குரல் வந்தது.
குப்பைகளை
ஒதுக்கிய போது
தவ நிலையிலிருந்தான் ஒன்பது வயது பாலகன்.
" அம்மா....
இந்தா உன் மகன்.
உன் கருவறை தடுத்தாய்.
தொழுவறை ஏற்றது.
எனவே
இங்கு பிறந்தான்.
ஆசையாய் அருகில் வந்தாள் அம்மா.
" அம்மா....
நீங்கள் வெறும் சும்மா..
ஒரு பேருக்கு தான் அம்மா....
உண்மையில்
இவரே என்
தாய் தந்தை.
குருவும் இவரே."
சிறுவன் பேச்சு கணீரென்று இருந்தது. அதில் அர்த்தம் இருந்தது.
மச்சேந்திரர் முன்செல்ல
அவருடன்
பின் சென்றவனே பின்னாளில் சித்தரானார்.
மகா சித்தர் ஆனார்.
மச்சேந்திரரின்
முதல் சீடர்
முதன்மைச் சீடர்
கோரக்கர்.
ஞானம்
சித்துக்கள்
காயகற்பம்
காயசித்தி என படிப்படியாக யாவும் கிடைத்தன.
குருவருள் திருவருள் ததும்பி வழிந்தது.
எப்படியோ
கர்வம் கொஞ்சம்
காலடி ஏறி
தலைதனில்
கனத்து நின்றது.
அவரது செருக்கைத் தகர்க்க
தக்க சமயத்தில் வந்தார்
ஒரு மகா சித்தர்
அல்லமாப்பிரபு .
அவர்
ஓர் அற்புத சித்தர்.
சிவ அம்சம்
அச்சாய் நிறைந்தவர்.
காலக் கணக்கில்லாத காகபுஜண்டருக்கு உபதேசித்த மூத்தவர்.
காலாங்கி நாதர்
போல்
காற்றை உடலாகக் கொண்டவர்.
ஒருநாள்
இறையருள்
அல்லமாப் பிரபுவையும் கோரக்கரையும்
கூட்டுவித்தது.
தன்னைப் பற்றி தொகை தொகையாய் பெருமை பேசிய கோரக்கர்
கத்தி ஒன்றை
அல்லமாப் பிரபுவிடம் கொடுத்துத் தன்னை வெட்டச் சொன்னார்.
வெட்டிய போது
கோரக்கர்
உடலில் கத்தி
பாய முடியவில்லை.
எத்தனை முயன்றும்
கூர் முனை
மழுங்கியதே தவிர கத்தியின் கூர்மையும் சித்தரின் திறனும் வேலையாகவில்லை. வெற்றியாகவில்லை.
"பார்த்தீர்களா...
என் சக்தியை.
காயசித்தி
பெற்று விட்டேன்.
இனி நான்
கடவுள் போல..."
கண்கள் விரித்து
மனம் திறந்தார் கோரக்கர்.
அல்லமாப் பிரபு அடுத்தவர் மனம் நினைப்பதை அறியும் ஆற்றல் பெற்றவர்.
அமைதியாய் சிரித்தார்.
இப்போது
அல்லமாப் பிரபு முறை.
கத்தி கைமாறியது.
குறை ஏதும் இல்லாத அல்லமாப் பிரபுவை கூர்முனைக் கத்தி கொண்டு வெட்டினார் கூர்த்த மதி கோரக்கர்.
கத்தி உடலில்
பாய்ந்து சுழன்றது. முன்னும் பின்னும்
முட்டிப் பார்த்தது.
கோரக்கருக்குத் தான் வேர்த்துப் போனதே
தவிர
வேறு ஒன்றும் நடக்கவில்லை.
கோரக்கர் கத்தியை வெளியே எடுத்தார்.
அந்த கத்தி
அச்சு அசலாக
புதியது போலவே கூர்முனை சற்றும் மழுங்காமல்
போர்முனை செல்லவும்
தயாராக இருந்தது.
என்ன ஆச்சரியம்...!
கோரக்கருக்குப்
பேச்சே வரவில்லை.
அல்லமாப் பிரபு
அன்பு சுரக்க
கோரக்கர் முதுகை ஆதரவாக நீவியபடி சொன்னார்.
"இன்னும்
பக்குவப் படு.
உன் உடம்பு காயகல்பம் ஆகிவிட்டது.
உன் மனது
காயகல்பம் அடையவில்லை.
உடம்பும் உள்ளமும் காயகல்பம் அடைந்தால்
உடம்பு லேசாகிவிடும் மனமற்றுப்
போய் விடும்.
மேம்படு..
உடம்போடு
நின்று விடாதே.
கர்வம் தவிர்.
சர்வமும் சித்தியாகும்." நறுக்கென்று சொன்ன அல்லமாப் பிரபு சுருக்கென்று
ஆசி தந்து
விருட்டென்று
காற்றில் கரைந்தார்.
நடந்ததைக்
குருநாதர்
மச்சேந்திரரிடம் கூறி
உபதேசம் கேட்டார்.
மச்சேந்திரரின் பதில் அல்லமாப் பிரபுவின்
உபதேசங்களின்
நகலாய் இருந்தன.
அவை
கோரக்கரை செதுக்கின.
செம்மைப் படுத்தின.
இன்னொரு
பிச்சை சம்பவம் .
குரு சீடர் உறவுக்கு மேம்பட்ட
எடுத்துக்காட்டு அது.
அது ஓர்
அக்ரஹாரம்.
அங்கு பிச்சை
எடுக்கப் போனார் கோரக்கர்.
அன்று
அந்த வீட்டில்
நீத்தார் நினைவு நாள். வீட்டம்மாள்
கீரை வடை
ஒன்று தந்தாள்.
கீரை வடை
மணம் வீசியது.
காரவடையாய்
குருநாதரின்
மனத்தைக் கவர்ந்தது.
மறுநாள் கோரக்கரிடம்
கேட்டார் மச்சேந்திரர்.
" நேற்று மாதிரி இன்றும் வடை கிடைக்குமா....?"
குரு விருப்பம்
மறுப்பாரா சீடர் ?
அதே வீட்டிற்குச் சென்றார்.
அம்மணியிடம்
"நேற்று தந்த
வடை மாதிரி
இன்றும் தாருங்கள்.." வேண்டுகோள்
வைத்தார்.
அப்பெண்மணி கலகலவென சிரித்தாள்.
"சுவாமி...
நேற்று வீட்டில் விசேஷம்
அதனால்
வடை போட்டேன்....
தினமும்
வடை செய்ய வாய்ப்பில்லை."
கெஞ்ச ஆரம்பித்தார் கோரக்கர்.
"என்ன சுவாமி....
பசி துறக்க வேண்டியவர்
ருசியைக் கூட விடாமல்
ரிஷி வேடம் போட்டிருக்கிறீர்கள் போலிருக்கே....!"
கேலி பேசினாள்.
"இல்லையம்மா.….
இது என்
குருவின் விருப்பம்., நிறைவேற்றுவது
என் கடமை."
"நல்ல குரு...
நல்ல சீடர்... இருவருக்குமே நாவடக்கம்
இல்லையே....!" ஓசையோடு சிரித்தாள்.
ஆசையோடு
கோரக்கர்
தொடர்ந்து கெஞ்சினார்
" என் குருநாதர் ஆசை.."
"குருவென்றால்
எதுவும்
செய்து விடுவீர்களா...? நாளை உங்கள் கண் வேண்டுமென்றால் பிடுங்கித் தந்து விடுவீர்களா....!"
கேள்வி வந்தது. கேலியாய் ஒலித்தது.
*நாளை என்ன...?
இன்றே இப்போதே தருகிறேன்
என் கண்ணை...
இதோ பார்....
அதற்கு பதில்
நீ வடை தாம்மா."
சொடுக்கிடும் நேரத்தில்
கண்ணைப் பிடுங்கி ரத்தம் சொட்டச்சொட்ட அம்மணி முன்பு
வாழை இலையில் வைத்தார்.
பதறிப்போனார் அப்பெண்மணி.
மனம் பொறுக்காது வீட்டினுள் சென்று நெய்யிலே வடை சுட்டு ஓடிவந்து தந்தாள்.
நெய் வடையோடு குருவிடம் ஓடினார் கோரக்கர்.
வடையை வாங்கிய மச்சேந்திரர்
கோரக்கர் முகத்தை கவனிக்காது
ருசிக்க ஆரம்பித்தார்.
கண் துருத்தி
கண்ணீரும் ரத்தமும் வழிந்தோடியும் வாய்திறக்கவில்லை கோரக்கர்.
அவ்வளவு குருபக்தி.
உண்டு முடித்த பின் கோரக்கரைப் பார்த்தார் குருநாதர்.
நடந்ததை அறிந்தார். துடித்துப் போனார்.
'என்னே....குருபக்தி..!' இறுகத் தழுவினார்.
இறையை நினைத்தார்.
மீண்டும்
கண் புதிதாய் பூத்தது.
அது முன்னைவிட ஒளியோடு இருந்தது.
*நாளுக்கு நாள்
நீ உயர்ந்து வருகிறாய் என்னையும் மிஞ்சிய சீடராய் ஒளிர்வாய்"
ஆசி தந்தார்.
"கொஞ்ச நாள்
மலையாள தேசம் செல்கிறேன்.
நீ அங்கு வந்து
அழைத்து வரவேண்டியிருக்கும்.
செல்லட்டுமா...? சந்திப்போம்...!"
விடைபெற்றார்
வடைப் பிரியரான மச்சேந்திரர்.
Leave a Comment