போகர் மீது வழக்குத் தொடுத்த சித்தர்கள்


- "மாரி மைந்தன்" சிவராமன்

போகர் பிரான் மீது வழக்கொன்று பரமனிடம் வந்தது.

வழக்குத் தொடுத்தவர்கள் சித்தர் பெருமக்கள்.

வழக்கை ஒட்டி போகர் மீது 
மூன்று சர்ச்சைகள் குற்றச்சாட்டுகளாக வைக்கப்பட்டன.

குற்றச்சாட்டு - 1

ஒரு சமயம்
போகர் 
ஒரு கணங்க மரத்தின் கீழ் 
சிவமோனத்தில் ஆழ்ந்தார்.

ஆழ்ந்தவர் 
பிரம்ம நிலையில் அமிழ்ந்து போனார்.

காலம் கடந்தது.

அவ்விடம் காடாய் அடர்ந்தது .

அவ்வழி வந்த 
சிங்க ஜோடி ஒன்று அங்கேயே தங்கி வாழத் தொடங்கின.

அருகில் இருக்கும் போகர் 
சிலை போல் இருக்கவே 
ஏதோ கற்சிலை 
என விட்டு விட்டன.

காலம் வேகமாக சுழன்றது.

 ஒரு நாள் ஆண்சிங்கம் கற்சிலை மடியில் ஆனந்தமாய் அனந்தசயனம் கொண்டது.

வழக்கம்போல் நாவால் உடல் மேவிய சிங்கம் சிலை போல் இருந்த போகர் பெருமானை இதமாய் நக்கத் தொடங்கியது.

போகரிடம் 
எச் சலனமும் இல்லை.
கற்சிலை தோற்கும் மோனநிலை.

ஆனால் 
கண்களில் மட்டும் கண்ணீர்.

அது 
கன்னத்தில் வழிந்து மார்பில் ஓடி சிங்கத்தின் 
வாயில் பட்டது. 

அத்துளி 
ஓர் அதிர்வை உண்டு பண்ணியது.

துள்ளி எழுந்தது சிங்கம்.

அதன்பின் 
உலகே வியக்கும் அற்புதம் நிகழ்ந்தது.

சிங்கராஜா 
ஓர் அரச குடும்பத்தில் அருந்தவ குழந்தையாய் அவதாரமெடுத்தார்.

உரிய பருவத்தில் அரசராய் பொறுப்பேற்று நாடாண்டார்.

ஒரு 
சிறு கண்ணீர் துளியை உண்ட சிங்கம் 
ஞானம் பெற்று 
அரசன் ஆனது.

ஞானமும் 
அரச பதவியும் 
ஒரு சிங்கத்திற்குத் தர 
போகர் யார் என்பதே குற்றச்சாட்டு .

குற்றச்சாட்டு- 2

பொதிகை மலைச்சாரலில் போகர் இருந்த காலம்.

உணவு சமைத்து உண்பது 
அவர் வழக்கம்.

உண்ட களைப்பில் ஒரு நாள் அவருக்குத்
தூக்கம் வரவில்லை. 

தாகம் தலைதூக்கியது.

தண்ணீர் குடிக்க அருகில் இருக்கும் தெருவுக்குப் போனார். 

அது அந்தணர் வாழும் அக்ரஹாரம்.

கும்பலாக அமர்ந்து வேதம் ஓதிக் கொண்டு இருந்தது வேதியர் கூட்டம்.

போகரின் பிச்சைக்காரத் தோற்றம் அந்தணர்களை அருவருப்புக்கு உள்ளாக்கியது.

'சீய்... நாற்றம்... கிட்டே வராதே ! குமட்டுகிறது..'

விரட்டியவர்கள் வீட்டிற்குள் 
ஓடிக் கதவைத் தாழிட்டனர்.

ஜன்னலில்
'போகர்
போய் விட்டாரா '
என கண்களை மேயவிட்டனர்.

துரத்தி விட்டதில் எரிச்சலடைந்த போகர் 
குறுக்கே போன ஒரு பூனையைப் பிடித்து அதன் காதில் 
ஏதோ சொன்னார்.

தாவி ஓடி 
ஒரு வீட்டின் கூரை ஏறிய அப்பூனை
உரத்த குரலில் 'மியாவ் 'எனக்
குரலிடவில்லை.

அட்சர சுத்தமாக வேதம் ஓதியது.

நாலுகால் பூனைக்கு 
நான்கு வேதமும் போகர்
சொல்லித் தரலாமா என்பதே குற்றச்சாட்டு.

குற்றச்சாட்டு - 3

இரசமணி போகருக்கு 
கை கூடிய
எளிய சித்தி.

விண்வெளியில் பறக்க உதவும் குளிகையே இரசமணி.

அதற்கு ஆதிரசம் என்னும் 
அதிசய ரசம் 
அதிகம் தேவை.

உரோமபுரிக்குத்
தென்புறத்தில் 
ரசக் கிணறு இருந்தது .

அதன் உரிமையாளர் சிவபெருமான்.

போகர் பெருமான் அங்கே பறந்து போனார்.

இப்படி யாரேனும் வந்து ஆதிரசத்தை அபகரித்துச் சென்று விடுவார்கள் என சிவபிரான் 
பலத்த காவல் போட்டிருந்தார்.

காவல்காரர்கள் எதற்கும் துணிந்த சிவ பூதகணங்கள்.

போகர் 
அவர்கள் கண்களுக்குப் படாமல் சென்று 
ஒரு தேங்காய் குடுக்கையில் ரசத்தை எடுக்க முயன்றார்.

ஆனால் ரசம் அவரை ஏமாற்றியது.

தேங்காய் மூடியில் நிரப்பிய ரசம் சுருண்டு போனது. போகர் கையில் அகப்படாது 
விலகி  நின்றது.
ஓடி ஒதுங்கியது.

எண்ணெய்க் கிணற்றின் உரிமையாளர் இறைவன் அல்லவா ?
அவரை 
ஏமாற்ற முடியுமா ??

ஆனால் இறைவனின் குடுமி யாரிடம் என தெரிந்தவர் 
போகர் ஆயிற்றே !

கண்களை மூடி உமாதேவியை நோக்கி தியானித்தார்.

அதன்பின் 
அந்த சிவனையும் தியானித்தார்.

அம்மன் அருளிய தம்பன மந்திரத்தை உச்சரித்தார்.

ரசம் ஓடாமல் நின்றது. 
பின் ரசத்தை 
ஒரு பெரும் குடுவையில் நிரப்பினார் போகர்.

புறப்படும்போது பூதகணங்களிடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்டார்.

"சிவன் சொத்தையே கொள்ளை அடிக்கிறாயா ?" சீறினார்  தலைமை சிவபூதகணம்.

" நான் யார் தெரியுமா....? மூலரின் பேரன்...! மூலர் சபித்தால் 
நீ காலகாலமாய் கல்லாய் போவாய்" மிரட்டினார் போகர்.

" நானொருவன் கல்லாய் போனால் பரவாயில்லை.. என்னைப்போல் ஆயிரமாயிரம் பேர் சிவன் சொல்கேட்டு காவல் காக்க காத்திருக்கிறார்கள்"

அதற்குள் பூதகணங்கள் பலர் அவரை சூழ்ந்து கொண்டனர்.

அவர்களுக்கு 
தன் சித்தாடல்  ஒன்றின் மூலம் கடல்நீரை கொட்டாங்குச்சியில் சுருக்கியும் பெருக்கியும் காட்டி அவர்களை 
வியக்க வைத்து
வணங்கவே 
செய்து விட்டார். 

"நடந்ததெல்லாம் பரமனுக்குத் தெரிந்தால் தண்டனை கிடைக்கும்" என கண்ணீர் விட்டனர் பூதகணங்கள்.

"கவலை வேண்டாம்.... அவனன்றி 
ஓர் அணுவும் அசையாது..  இதுவும் இறைவன் சித்தமே.."

"மக்களுக்காகவே நான் ரசமணி தயாரிக்கிறேன்.

இந்தாருங்கள்... உங்களுக்கும் ஆளுக்கு ஒரு ரசமணி தருகிறேன் பயன்படுத்திப் பறந்து பாருங்கள்"

என்று கூறி அவர்களுக்கும் இரசமணி கொடுத்துவிட்டு போகர் ஆதிரசத்துடன்  விண்ணில் மறைந்தார்.

சிவன் சொத்தை திருட முயற்சித்தது.. காவலர்களை ஏமாற்றியது.. அவர்களுக்கு லஞ்சமாக இரசமணி கொடுத்தது 
என்பன 
மூன்றாம் குற்றச்சாட்டு.

இப்போதைய வழக்கு என்ன தெரியுமா?

சவுக்காரம் 
என்பது
சித்தர் உலகில் உயர்ந்த விஷயம்.

பெருமையும் அருமையும் ரகசியமும் கொண்டது.

அதனை சகலரும் அறிந்துகொள்ள நூலாக்கி விட்டார் என்பதே வழக்கு.

வெடியுப்பு 
என்னும் 
சவுக்காரம் பற்றி
எவருக்கும் தெரியாதது
தவறு எனத் தீர்மானித்தார் போகர்.

அதை
வெளிப்படையாய் பாடலாக்கி எல்லோருக்கும் பார்வையாக்கி விட்டார் . 

பிரளயம்
வராத குறைதான்.

சித்தர்கள் கூடினர்.

'யார் 
சித்தர்
ரகசியத்தை வெளியிட்டது ?

அனைவருக்கும் தெரிந்தால் அகிலமே 
சித்தர் 
மயமாய் 
மாறிவிடும்.

உலகமே ஸ்தம்பித்து விடும்.

போலிகள் 
வசமானால்
பிரபஞ்சமே மாயமாய்
அழிந்து விடும்...

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்..,' சித்தர் கூட்டம் விவாதித்தது.

"திருமூலரின் 
பேரனாம்.... காலாங்கியின் மாணவனாம்...
போகர் 
என்று பெயராம்.."

கூர்முனி தான்அறிந்ததை தெரிவித்தார்.

கூடிய சித்தர்கள் அகத்தியரின் பார்வைக்கு இவ்விஷயத்தை கொண்டு போய் தீர்வுகாணத் திட்டமிட்டனர்.

"நீங்களே மூத்தவர்.. முடிவெடுங்கள்... ஆவன செய்யுங்கள்."

சித்தர்கள் அகத்தியரை நிர்ப்பந்தித்தனர்.

"போகர்
அப்படித்தான்... மக்கள் நலன் என்பது 
அவரது நோக்கு.

எம்பெருமான் சிவபெருமான் தான் தீர்க்க வல்லவர்." என்று 
தப்பிக்கப் பார்த்தார் அகத்தியர்.

சித்தர்கள் விடவில்லை.

 "வாருங்கள் போகலாம்.…
நானும் வருகிறேன்..."

அகத்தியர் அவர்களைச் 
ஆதிசித்தர்  சிவனிடமே
அழைத்துச் சென்றார்.

எப்போதும் மௌனமாய் இருக்கும் தட்சிணாமூர்த்தி சித்தர் 
கூட்டம் கண்டு மௌனம் கலைத்தார்.

" என்ன விசேஷம் ? எல்லோரும் வந்து இருக்கிறீர்களே...!"

உலக 
மகா நடிகர் 
ஒன்றும் தெரியாதவர் போல் கேட்டார்.

குற்றச்சாட்டுகளை அடுக்கி குமுறினர் சித்தர்கள். 

' அமைதி... அமைதி என்று சப்தமிட்டவர்களை  அமைதிப்படுத்தினார் நந்திதேவர்.

சிவநீதி மன்றம் அமைதியானது.

சித்தர்களில்
ஒருவர் உரத்த குரலில் சொன்னார்

'வெடியுப்பு 
கல்லுப்பு 
வீரம் 
தீட்சை விதி 
யோக மார்க்கம் ஞானமார்க்கம் எல்லாம் பட்டவர்த்தனம்
போகர் நூலில்.'

அமைதியை மீறி கோபம் பரவியது.

"போகரை அழைத்து வாருங்கள். 
அவர்
தரப்பைக் கேட்போம்."

சிவபிரான் நடுநாயகமாய் நடுவில் நின்றார்.

கூர் முனிவர் 
போகரை 
கையோடு
அழைத்து 
வந்தார்.

" போகரே...."
பரமனின்
குரல் 
கணீரென்று ஒலித்தது.

"உம் மீது 
அடுக்கடுக்காக
புகார்கள் 
வந்து கொண்டே இருக்கின்றன.

ஒரு பூனைக்கு 
நான்கு வேதங்களையும் உபதேசித்து 
ஓதச் செய்தீர்...

ஒரு சிங்கத்தை அரசனாக்கினீர்.

என் பொறுப்பில் இருக்கும் 
ரசக் கிணற்றிலிருந்தே காவலை மீறி எச்சரிக்கையை மீறி ஆதிரசத்தை அதிரடியாய்
எடுத்து வந்தீர் ..

இப்போது 
புதிய புகார்.

சித்தர் ரகசியங்களை நூலாக்கி உள்ளீராமே....?"

"ஆம்... பகவானே.."

"எங்கே அந்த நூல் ?
படித்துப் பார்க்கிறேன்..."

கையோடு கொண்டு வந்திருந்த நூலினைப் பணிந்து தந்தார் பரமனிடம்.

"எனை 
ஆளும்  இறைவா.. ! நானே படிக்கட்டுமா..?

தட்சிணாமூர்த்தி
மகிழ்வோடு தலையசைக்க போகர் படிக்கத் தொடங்கினார்.

நீதியரசர் உன்னிப்பாய் கேட்டார்.

போகர்
ஒவ்வொன்றாய் படிக்கப் படிக்க
ஒன்றிப் போனார் பரமேஸ்வரன்.

கேட்க கேட்க இறைவன் முகத்தில் எல்லையில்லாப் பூரிப்பு....
ஆனந்தம்.... பேரானந்தம்.

இதைக் கண்ணுற்ற போகர் முகத்தில் 
சூர்யப் பிரகாசம்.

"எல்லாம் சரிதான்.. சித்தர்கள் 
ரகசியம் காக்க விரும்புகின்றனர்.
கொடுத்துவிடு... மலைக்குகையில் பத்திரப்படுத்தி விடுவோம் "
இறைவன் ஆலோசனை சொன்னார்.

இப்போது சித்தர்கள் முகத்தில் ஏகப் பிரகாசம்.

"சுவாமி... ஏற்கனவே
'ஏற்பவர் ஏற்க 'என அத்தனையையும் மக்களிடம் 
வாரி 
இறைத்து விட்டேன்"

குற்ற உணர்வு ஏதுமின்றி 
குரல் உயர்த்திச் சொன்னார் போகர்.

இப்போதோ
பரமன் முகத்தில் பல கோடி
சூர்யப் பிரகாசம்.

"அப்படியா 
அதுவும் நல்லது...!"

தன் தீர்ப்பை இப்படித்தான் ஆரம்பித்தார் இறைவன்.

"கல்வி என்பதே
ஒருவரோடு சுருங்கிப் போவதல்ல.

கல்வி கற்பது போதிப்பதற்கு..

பலரிடம் சேர்த்தலே பலரைச் சென்றடைவதே படைத்தலின் நோக்கம்.

அது படைக்கும் நூலுக்கும் பொருந்தும்.

மக்களுக்காகவே உலகு.

சித்தர்களே...! பொறாமை.. காழ்ப்புணர்வு... சுயநலமே 
உங்கள் புகாருக்கு அடிப்படை "

சுப்ரீம் தீர்ப்பு.

சித்தர்கள் இறைவனை வணங்கி விடைபெற்றனர்.

போகரை 
வாழ்த்தி
உச்சி முகர்ந்து வழியனுப்பி வைத்தார்
கைலாய நீதியரசர்.



Leave a Comment